டெல்லி: டெல்லி ஜந்தர் மந்தரில் நாளை கரப்பான்பூச்சி கட்சி சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்ட நிலையில், இந்தப் போராட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழலில், குடிமக்களுக்கு ஒரு திறந்த கடிதம் என்ற பெயரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளது டெல்லி காவல்துறை.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணியில் (SIR) தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தன்னிச்சையாக செயல்பட்டு சில முடிவுகளை எடுத்ததாக காங்கிரஸ், கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (CJP) உள்பட பல்வேறு எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. மேலும், தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வலியுறுத்தி காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலகக்கோரி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சார்பில் நாளை டெல்லியில் போராட்டம் நடைபெற உள்ளது. டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடைபெற உள்ள நிலையில் இந்தப் போராட்டத்திற்கு டெல்லி போலீசார் தடை விதித்துள்ளனர். ஆனால், தடையை மீறி போராட்டம் நடைபெறும் என சிஜேபி தெரிவித்துள்ளதால் டெல்லியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் போராட்டத்தால் நாளை டெல்லிக்கு செல்லக்கூடிய பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. SIR-க்கு எதிராகவும் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தியும் ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம் நடத்தவுள்ளதால் நாளை அதிகாலை 4 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை டெல்லிக்கு செல்லக்கூடிய அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. திடீரென அறிவிக்கப்பட்ட இந்த ரயில் ரத்து நடவடிக்கையால், தலைநகருக்குப் பயணிக்கத் திட்டமிட்டிருந்த ஆயிரக்கணக்கான பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். தலைநகரில் சட்டஒழுங்கு பிரச்சனையைத் தவிர்க்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த நடவடிக்கைக்கு சிஜேபி கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். போராட்டத்திற்கு அதிக இளைஞர்கள் வருவார்கள் என்பதால், பல்வேறு நடவடிக்கைகளை டெல்லி போலீசார் எடுத்து வருகிறார்கள். டெல்லியில் 57 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. டெல்லியில் 23 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர். டெல்லி ஜந்தர் மந்தர் மைதானத்தில் இருந்து 4 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு இன்று இரவு 10 மணி முதல் அடுத்த 24 மணி நேரத்திற்கு மொபைல் இணைய சேவை முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இரவு 10 மணி முதல் இணைய சேவை முடக்க டெல்லி போலீசார் உத்தரவிட்டுள்ளனர். இந்தச் சூழலில் மக்களுக்கு டெல்லி காவல்துறை ஒரு திறந்த கடிதத்தை வெளியிட்டுள்ளது. உலக அஞ்சல் தினத்தை முன்னிட்டு டெல்லி காவல்துறை எக்ஸ் தளத்தில் 'ஒவ்வொரு குடிமகனுக்கும் ஒரு திறந்த கடிதம்' என்ற தலைப்பில் ஒரு பதிவை வெளியிட்டது. அந்தப் பதிவில், "அன்புள்ள குடிமக்களே, உங்கள் குரல் உங்கள் உரிமை, உங்கள் பாதுகாப்பு எங்கள் கடமை. சீருடை அணிந்த ஒவ்வொரு காவலருக்குப் பின்னாலும் குடும்பங்களையும் அன்புக்குரியவர்களையும் கொண்ட ஒரு மனிதர் இருக்கிறார். ஒரே வித்தியாசம் சீருடைகள்தான், மனிதநேயத்தில் வித்தியாசம் இல்லை" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.