இன்று யாரும் போராட்டம் நடத்தல.. திடீரென போலீசாரே போராட்டத்தில் இறங்கிட்டாங்க.. என்னனு பாருங்க!

  • டெல்லி: தலைநகர் டெல்லியில் கடந்த சில நாட்களாக அரசியல் கட்சிகளின் போராட்டங்கள், பேரணிகள் கவனம் பெற்று வரும் நிலையில், இன்று காலை ஒரு வித்தியாசமான சம்பவம் அரங்கேறியுள்ளது. போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த வேண்டிய டெல்லி போலீசாரே டெல்லி போலீஸ் தலைமையகத்தின் முன்பு போராட்டத்தில் இறங்கினர்.

    Advertisement

    கடந்த சில நாட்களாகவே டெல்லியில் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகிறது. அரசியல் கட்சிகள், சமூக ஆர்வலர்கள் போராட்டங்களில் இறங்குவதும் அவர்களை டெல்லி போலீசார் அப்புறப்படுத்துவதும் தொடர்கதையாகவே நடந்து வருகிறது. இதற்கிடையே இன்று ரொம்பவே வினோதமான ஒரு காட்சி டெல்லியில் அரங்கேறியது.

    Advertisement

    போலீசாரே போராட்டம்

    அதாவது டெல்லியில் கடந்த சில நாட்களாகவே ஒவ்வொரு அரசியல் கட்சியினர் போராட்டங்களில் இறங்கியிருந்தனர். இன்று அரசியல் கட்சிகள் யாரும் போராட்டம் நடத்தாத நிலையில், டெல்லி போலீசாரே போராட்டத்தில் இறங்கிவிட்டனர். டெல்லி போலீஸ் தலைமையகத்தின் முன்பு காலை 8.30 மணியளவில் இந்தப் போராட்டம் தொடங்கியது.

    போராட்டக்காரர்கள் போல நடக்க வேண்டாம்

    போராட்டம் குறித்து தகவலறிந்து அங்கு சென்ற டெல்லி துணை காவல் ஆணையர் சச்சின் சர்மா, போராட்டத்தில் ஈடுபட்ட உதவி காவல் ஆணையர் மனஸ்வி வசிஷ்டாவிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். போலீசார் தங்களுக்குரிய ஒழுக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்றும், போராட்டக்காரர்களை போல நடந்துகொள்ளக் கூடாது என்றும் அறிவுறுத்தினார். மேலும், தலைமையகத்துக்குள் சென்று உயர் அதிகாரிகளை சந்திக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார். ஆனால், யாரை சந்திக்க வேண்டும் என்பதைத் தெளிவுபடுத்துமாறு போராட்டத்தில் ஈடுபட்ட போலீசார் வலியுறுத்தினர். பேச்சுவார்த்தையை தொடர்ந்து மதியம் வரை காத்திருக்க ஒப்புக்கொண்டனர்.

    Advertisement

    இதையடுத்து 11.45 மணியளவில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஆதர்ஷ் அரங்கத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு காவல் ஆணையர் அனுராக் குமார் உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். சுமார் 500 பேர் இந்த கூட்டத்தில் பங்கேற்றதாக கூறப்படுகிறது. பிரதமரும் மத்திய உள்துறை அமைச்சகமும் போலீசாருக்கு ஆதரவாக இருப்பதாக காவல் ஆணையர் அனுராக் குமார் நம்பிக்கை தெரிவித்தார்.

    எதற்காக இந்த போராட்டம்?

    கடந்த அக்டோபர் 23ஆம் தேதி ஷாதரா காவல் நிலையத்தில் வழக்கறிஞர் ஒருவருக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் வழக்கறிஞருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட நீதிமன்ற வழக்கறிஞர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

    Advertisement

    இதையடுத்து காந்தி நகர் உட்கோட்ட ஏசிபி மனஸ்வி வசிஷ்டா மற்றும் ஷாதரா காவல் நிலைய ஆய்வாளர் அருண் குமார் ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். அதைத் தொடர்ந்தே வழக்கறிஞர்கள் போராட்டம் முடிவுக்கு வந்தது. இருப்பினும், புோலீசார் மீது எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கை மற்ற காவலர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.

    அதிருப்தி

    நீதிமன்றங்களில் போலீசாருக்கு உரிய மரியாதை கிடைப்பதில்லை என்றும் வழக்கறிஞர்களுடன் மோதல் ஏற்படும் ஒவ்வொரு முறையும் போலீசார் மீதே நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் போராட்டத்தில் பங்கேற்றவர்கள் குற்றம்சாட்டினர். பெண் போலீசார் நீதிமன்ற விசாரணைகளுக்கு செல்லும்போது வழக்கறிஞர்களால் அவமதிக்கப்படுவதாகவும் தெரிவித்தனர்.

    மாலை 3 மணியளவில் பேச்சுவார்த்தை முடிந்தபோதும், போலீசார் தலைமையகத்தின் வெளியே தொடர்ந்து காத்திருந்தனர். தங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை காத்திருக்க போவதாகவும் தெரிவித்தனர். மாலை 5 மணிக்கு மீண்டும் ஒருமுறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்தே காவலர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதற்கிடையே நவம்பர் 3ஆம் தேதி டெல்லி துணைநிலை ஆளுநர் தரன்ஜித் சிங் சந்து போலீசாருடன் கலந்துரையாட உள்ளார்.

    English Summary

    Around 500 Delhi Police personnel staged a protest outside the police headquarters over the transfer of two officers(டெல்லி போலீஸ் போராட்டம்): Delhi Police Protest latest news in tamil.