சென்னை: டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக 'காக்ரோச் ஜனதா கட்சி' (CJP) என்ற அமைப்பு மாபெரும் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது. இந்த நிலையில், மும்பையில் இருந்து டெல்லி வந்த விமானம் தரையிறங்கியதும், உள்ளே புகுந்த டெல்லி போலீசார் அந்த அமைப்பின் முக்கிய நிர்வாகிகளான அபிஜித் திப்கே, சவுரவ் தாஸ் மற்றும் அசுதோஷ் ரான்கா ஆகியோரை அதிரடியாகக் கைது செய்தனர்.
விமானத்திற்குள் வைத்து கைது செய்யப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த அபிஜித் திப்கே, "நாங்கள் கைதுக்கு அஞ்சவில்லை, அமைதியாகப் போராடுவதே எங்கள் உரிமை" என்று போலீசாருடன் காரசாரமாகப் பேசினார். விமானத்திலேயே நடந்த இந்த கைது சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
கைது செய்யப்பட்ட மூன்று தலைவர்களும் டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி, அடுத்த ஒரு வருடத்திற்கு பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் எந்த ஒரு செயலிலும் ஈடுபடக் கூடாது என்ற கடுமையான நிபந்தனையுடன் அவர்களை விடுவிக்க உத்தரவிட்டார். வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் செய்யும் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் (SIR) பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், சுமார் 13 கோடி வாக்குகள் நீக்கப்பட்டுள்ளதாகவும் இந்த அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது. இதற்குப் பொறுப்பேற்று தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் அவர்கள் போராட்டத்திற்குத் திட்டமிட்டிருந்தனர். போராட்டக்காரர்கள் ஜந்தர் மந்தர் பகுதிக்கு வந்துவிடக் கூடாது என்பதற்காக டெல்லி முழுவதும் பல்லாயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டனர். முக்கிய சாலைகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டு தீவிர சோதனை நடத்தப்பட்டது. தடையை மீறி டெல்லிக்குள் நுழைய முயன்ற அரசியல் தலைவர்கள், மாணவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் என ஆயிரக்கணக்கானோரை போலீசார் ஆங்காங்கே தடுத்து நிறுத்திக் கைது செய்தனர். பிரபல யூடியூபர் த்ருவ் ராத்தியும் இந்த போராட்டம் தொடர்பாக காவலில் எடுக்கப்பட்டு, பின்னர் நள்ளிரவில் விடுவிக்கப்பட்டார். முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்டாலும், டெல்லியின் பல்வேறு பகுதிகளில் சிறு சிறு குழுக்களாக மக்கள் கூடி தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். போராட்டத்தைக் கட்டுப்படுத்த சனிக்கிழமை அன்று டெல்லியின் முக்கிய மெட்ரோ ரயில் நிலையங்கள் திடீரென மூடப்பட்டன. முன்னதாக, மக்களின் அன்றாட வாழ்க்கையைப் பாதிக்கும் வகையில் மெட்ரோ சேவைகளை முழுமையாக முடக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யா காந்த் தலைமையிலான அமர்வு உத்தரவிட்டிருந்தது. ஆனால், அந்த உத்தரவை மீறி நிலையங்கள் மூடப்பட்டதால், டெல்லி அரசு மற்றும் காவல்துறை மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கின் அவசர விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் நடைபெற உள்ளது. இன்று மெட்ரோ ரயில்கள் வழக்கம் போல் இயங்கினாலும், அனைத்து நுழைவு வாயில்களிலும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் படித்துவிட்டு இந்தியா திரும்பிய அபிஜித் திப்கே, இதற்கு முன்பு நீட் தேர்வு முறைகேட்டுக்கு எதிராகப் போராட்டம் நடத்தி பரவலாகக் கவனிக்கப்பட்டவர். தற்போது இந்த போராட்டத்திற்கும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தீவிர ஆதரவு தெரிவித்துள்ளன. அதே சமயம், "எதிர்க்கட்சிகள் வெளிநாட்டு சக்திகளுடன் கைகோர்த்து நாட்டின் அமைதியைக் குலைக்கப் பார்க்கின்றன" என்று பாஜக தேசிய தலைவர் நிதின் நபீன் குற்றம்சாட்டியுள்ளார். மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசுகையில், "மக்களாட்சியில் கருத்து வேறுபாட்டை வெளிப்படுத்த அனைவருக்கும் உரிமை உண்டு. ஆனால் சட்டத்தை மீறி குழப்பத்தை உண்டாக்க யாருக்கும் உரிமை இல்லை. நமது இளைஞர்கள் நாட்டின் வளர்ச்சிப் பாதையில் இருந்து விலக மாட்டார்கள்" என்று தெரிவித்துள்ளார். தலைவர்கள் விடுவிக்கப்பட்டாலும், வாக்காளர் பட்டியல் குளறுபடிகள் குறித்து தேர்தல் ஆணையம் உரிய விளக்கம் அளிக்கும் வரை தங்களது அறவழிப் போராட்டம் ஓயாது என காக்ரோச் ஜனதா கட்சி திட்டவட்டமாக அறிவித்துள்ளது. இதனால் டெல்லியில் தொடர்ந்து பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.நீதிமன்றம் நிபந்தனை விடுதலை
அபிஜித் தீப்கேவை விடுவிக்காதது ஏன்? டெல்லி போலீஸ் தந்த விளக்கம்.. மாஜிஸ்திரேட் முன் ஆஜர்
போராட்டத்தின் பின்னணி என்ன?
டெல்லியில் கடுமையான போலீஸ் காவல்
மெட்ரோ ரயில் மூடல்: உச்சநீதிமன்றத்தில் வழக்கு
அபிஜித் தீப்கே இனி போராட முடியுமா? ஓராண்டு அமைதிக்கு பங்கம் ஏற்படுத்த தடை.. கோர்ட் போட்ட கண்டிஷன்
அரசியல் மோதல்