பிரதமர் பயந்துவிட்டார்.. டெல்லி போராட்டத்துக்கு முன்பே மோடி – அமித்ஷாவை விமர்சித்த அபிஜித் தீப்கே

  • டெல்லி: ''பிரதமர் மோடி பயந்துவிட்டார். பிரதமருக்கு ஏன் நாட்டின் இளைஞர்கள் மற்றும் மக்கள் மீது இவ்வளவு பயம் என்று எனக்கு புரியவில்லை. ரயில் சேவை - இணைய சேவைகளை டெல்லியில் முடக்க வேண்டிய அவசியம் என்ன? டெல்லியில் என்னை கைது செய்து 'உபா' சட்டம், தேசிய பாதுகாப்பு சட்டத்தில் வழக்கு பதிந்தாலும் நியாயமான தேர்தலுக்காக என்னுடைய போராட்டம் தொடரும்'' என்று கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கே தெரிவித்துள்ளார்.

    Advertisement

    இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தனது பதவியை ராஜினாமா செய்யக்கோரி இன்று டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம் அறிவித்துள்ளனர். இந்த போராட்டத்துக்கு டெல்லி போலீசார் அனுமதி வழங்கவில்லை.

    Advertisement

    தடையை மீறி டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் தயாராகி வருகின்றனர். இந்த போராட்டத்தை கட்டுப்படுத்த மத்திய அரசும் டெல்லி எல்லையில் கண்காணிப்பை பலப்படுத்தி உள்ளது.

    இந்த போராட்டத்திற்காக கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கே மும்பையில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டுள்ளார். இதற்கிடையே தான் அபிஜித் தீப்கே இன்று காலையில் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: ''பிரதமருக்கு ஏன் நாட்டின் இளைஞர்கள் மற்றும் மக்கள் மீது இவ்வளவு பயம் என்று எனக்குப் புரியவில்லை. அனைத்து ரயில் சேவைகளையும் நிறுத்த வேண்டிய அவசியம் என்ன? மெட்ரோ ரயில் சேவைகளை முடக்க வேண்டிய அவசியம் என்ன? இணைய சேவையை துண்டித்து, சாலைகளை மறித்துள்ளனர்.

    Advertisement

    ஜம்மு-காஷ்மீரிலிருந்து ராணுவத்தை வரவழைத்து டெல்லியில் நிறுத்தியுள்ளனர். நக்சல் பாதிப்புள்ள பகுதிகளிலிருந்து சிஆர்பிஎஃப் படைகளை வரவழைத்து டெல்லியில் நிலைநிறுத்தியுள்ளனர். நரேந்திர மோடியும் அமித் ஷாவும் தங்கள் சொந்த நாட்டு மக்களுக்கு எதிராகவே போர் தொடுக்க விரும்புகிறார்களா? ஞானேஷ் குமார் அவ்வளவு நெருக்கமானவரா? அதற்காக அவர்கள் தங்கள் சொந்த மக்கள் மீதே போலீஸ் மற்றும் ராணுவ படைகளை ஏவிவிடுவார்களா?.

    பிரதமர் மோடி பயப்படுகிறார். இதற்குப் பிறகு இந்நாட்டு மக்கள் தனக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்று அவர் அஞ்சுகிறார். அதனால்தான், அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்ளும் நோக்கில், ரயில்களில் பயணிப்பவர்களை பிடித்து செல்கின்றனர். போராட்டங்களில் இணைய வேண்டாம் என்று குடியிருப்பு பகுதிகளில் எச்சரிக்கை அறிவிப்புகள் செய்யப்படுகின்றன. டெல்லி போலீஸார் வீடுகளுக்கு சென்று, போராட்டங்களில் பங்கேற்க வேண்டாம் என்று மக்களிடம் கூறுகின்றனர்.

    Advertisement

    ஆனால் நாம் ஏன் பங்கேற்கக்கூடாது? போராடுவது நமது அடிப்படை உரிமை. ஜனநாயக முறையிலும், அமைதியான முறையில் போராடுவதற்கான அடிப்படை உரிமையை அரசியலமைப்பின் 19-வது பிரிவு நமக்கு வழங்குகிறது. அதைத்தான் நாங்கள் செய்யத் திட்டமிட்டுள்ளோம்'' என்றார்.

    இந்த சமயத்தில் டெல்லி விமான நிலையத்தை அடைந்ததும் கைது செய்யப்படுவீர்களா? என்று கேட்கப்பட்டபோது, ''அவர்கள் என்னை சிறைபிடிக்கவோ அல்லது கைது செய்யவோ விரும்பினால் தாராளமாகச் செய்யட்டும். நான் அதற்குத் தயாராக இருக்கிறேன். இது எனக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது. உபா சட்டத்தையோ அல்லது தேசிய பாதுகாப்பு சட்டத்தையோ என் மீது பாய்ச்சட்டும். இதனை தாராளமாகச் செய்யட்டும். ஆனால் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களுக்காகவும், இந்நாட்டின் ஜனநாயகத்தைக் காப்பதற்காகவும் நாங்கள் தொடர்ந்து போராடுவோம்'' என்று கூறியுள்ளார்.

    English Summary

    Cockroach Janta Party founder Abhijeet Dipke says that, "PM Modi is afraid. I do not understand why the Prime Minister is so afraid of the country's youth and its people. What was the need to suspend train and internet services in Delhi? Even if I am arrested in Delhi and charged under the UAPA or the National Security Act, my struggle for fair elections will continue".