டெல்லி: கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் போராட்டக்காரர்களாக டெல்லி மெல்ல மெல்ல வன்முறை களமாக மாற தொடங்கி உள்ளது. ஜந்தர் மந்தர் அருகே போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் திடீரென்று கல்வீச்சில் ஈடுபட்டதால் போலீசார் காயமடைந்துள்ளனர். பல இடங்களில் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ள நிலையில் டெல்லியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கே, இணை ஒருங்கிணைப்பாளர் சவ்ரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா உள்ளிட்டவர்கள் டெல்லி விமான நிலையத்தில் விமானத்திலேயே வைத்து போலீசார் கைது செய்தனர். இதையடுத்து கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் அமைப்பு பொறுப்பாளர் அஜிங்கியா ஜிண்டே தலைமையில் இந்த போராட்டத்தை பிற நிர்வாகிகள் முன்னெடுத்து வருகின்றனர். போராட்டத்தை தடுக்க டெல்லி ஜந்தர் மந்தரை சுற்றி போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். துணை ராணுவ படையினர் அதிரடி படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் போராட்டத்திற்கு வருவோரை பிடித்து அடுத்தடுத்து கைது செய்து வருகின்றனர். டெல்லி ஜந்தர் மந்தர் அருகே கன்னாட் பிளேஸில் பிடிஐ கட்டடத்தின் அருகே திடீரென்று ஒரு கும்பல் போராட்டத்தில் ஈடுபட்டனர்கள். இவர்களை கலைந்து செல்லும்படி போலீசார் கூறினர். இந்த சமயத்தில் திடீரென்று கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. போலீசாரை நோக்கி போராட்டக்காரர்கள் கல்வீசினர். இதில் 2 போலீசார் காயமடைந்தனர். கல்வீச்சு சம்பவத்தை தொடர்ந்து அங்கு போராட்டம் நடத்திய 50 பேரும் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். டெல்லி பங்களா சாஹிப் பகுதியில் பேராட்டத்தில் ஈடுபட முயன்ற இளைஞர்கள், இளம்பெண்களை போலீசார் கைது செய்தனர். மேலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் பேபி, கேரளா முன்னாள் முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். அதுபோல் உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் உச்சநீதிமன்றம் அருகே போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர். டெல்லியில் இன்று காலையில் இருந்து மதியம் 1 மணி வரை சுமார் 3,500க்கும் அதிகமானவர்கள் கைது. டெல்லி ஜந்தர் மந்தரில் குவிந்த 500 போராட்டக்காரர்களையும் குண்டு கட்டாக கைது செய்தது போலீஸ். டெல்லியில் நேரம் செல்ல செல்ல போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு நடந்து வருகிறது. பல இடங்களில் போராட்டக்காரர்கள் பேரிகார்டுகளை கீழே தள்ளி ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இதனால் நேரம் செல்ல செல்ல டெல்லி வன்முறை களமாக மாறி வருகிறது.