ராகுல் தலைமை.. எதிர்க்கட்சி எம்பிக்களுடன் காந்தி நினைவிடம் கிளம்பிய பஸ்.. போலீஸ் தடுத்தால் மோதல்

  • டெல்லி: டெல்லி ஜந்தர் மந்தரில் 'கரப்பான்பூச்சி ஜனதா கட்சி'யினர் தலைமையில் மாணவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தான் இன்று டெல்லியில் ராகுல் காந்தியில் இல்லத்தில் எதிர்க்கட்சிகளின் எம்பிக்கள் ஆலோசனை மேற்கொண்டு காந்தி நினைவிடத்துக்கு சென்று போராட முயன்றனர். ஆனால் அவர்களின் பஸ்சை போலீசார் தடுத்து நிறுத்தி உள்ளதால் பதற்றம் நிலவி வருகிறது.

    Advertisement

    மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று நாளுக்கு நாள் போராட்டம் தீவிரமாகி வருகிறது.

    Advertisement

    'நீட்' வினாத்தாள் கசிவிற்கு அவர் பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்று டெல்லி ஜந்தர் மந்தரில் 'கரப்பான்பூச்சி ஜனதா கட்சி'யினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் தொடர்ந்து ஆதரவு வழங்கி வருகின்றனர். கடந்த 20ம் தேதி போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட தடியடியை கண்டித்து டெல்லியில் பிரதமர் மோடியின் இல்லத்தின் முன்பு ராகுல் காந்தி உள்பட காங்கிரஸ் தலைவர்கள் போராட்டம் நடத்தினர். அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

    அதன்பிறகு நாடாளுமன்றத்தில் இந்த விவகாரம் பற்றி விவாதிக்க கோரி இருசபைகளையும் எதிர்க்கட்சி எம்பிக்கள் முடக்கம் செய்து வருகின்றனர். அந்த வரிசையில் இன்று மாலையில் டெல்லியில் ராகுல் காந்தியின் இல்லத்தில் எதிர்ககட்சிகளின் 'இந்தியா' கூட்டணி எம்பிக்களின் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் கம்யூனிஸ்ட் உள்பட பிற எதிர்க்கட்சி எம்பிக்கள் பங்கேற்றனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது. இதையடுத்து போலீசார் குவிக்கப்பட்டனர்.

    Advertisement

    இதற்கிடையே தான் எதிர்க்கட்சி எம்பிக்களின் கூட்டத்தில் மாணவர்களுக்கு ஆதரவாக தொடர்ந்து போராட்டம் நடத்த முடிவெடுக்கப்பட்டது. அதன்படி ராகுல் காந்தி உள்பட அனைத்து எம்பிக்களும் வீட்டில் இருந்து வெளியே வந்து தயாராக நின்ற பஸ்ஸில் ஏறி அமர்ந்து போராட்டம் நடத்த புறப்பட்டனர். ஆனால் அங்கிருந்த போலீசார் அவர்களின் பஸ்சை தடுத்து நிறுத்தினர். அங்கிருந்து நகரவிடவில்லை. இதனால் கோபமான எம்பிக்களின் ஆதரவாளர்கள் போலீசாரிடம் வாக்குவாதம் செய்தனர்.இதனால் லேசான தள்ளுமுள்ளு நடந்தது.

    இருப்பினும் போலீசார் எதிர்க்கட்சி எம்பிக்கள் அமர்ந்திருந்த பஸ்சை அங்கிருந்து வெளியேற அனுமதிக்கவில்லை. இதனால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. இதுபற்றி ராகுல் காந்தி கூறுகையில், ''நம்முடைய மாணவர்கள் ரோட்டில் நின்று போராடி வருகின்றனர். எனவே அனைத்து எதிர்க்கட்சிகளின் எம்பிக்களும் வீதிக்கு வந்து போராட வேண்டும் என்று கருதினோம். இதனால் நாங்கள் அனைவரும் 'இந்தியா கேட்' பகுதிக்கு செல்ல விரும்பினோம். ஆனால் அவர்கள் (போலீசார்) எங்களை தடுத்து நிறுத்திவிட்டனனர்.

    Advertisement

    இதனால் காந்தி நினைவிடம் பகுதிக்கு செல்ல விரும்புவதாக கூறினோம். ஆனால் அவர்கள் அங்கும் செல்ல விடாமல் பஸ்சை தடுத்து வைத்துள்ளனர் . எங்களால் முன்னேறி செல்ல முடியவில்லை என்றாலும் மாணவர்களுக்கு நாங்கள் சொல்ல விரும்பும் முக்கிய செய்தி ஒன்று தான். நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்'' என்றார்.

    அதன்பிறகு சிறிது நேரத்துக்கு பிறகு போலீசார் எம்பிக்களின் பஸ்களை அனுமதித்தனர். இதையடுத்து காந்தி நினைவிடத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் மரியாதை செலுத்தி போராட்டத்தை தொடங்கி உள்ளனர். அங்கு வைத்து ராகுல் காந்தி கூறுகையில், ''மோடி அரசு ஜனநாயக படுகொலை செய்கிறது. மாணவர்கள் மீது அடக்குமுறையை ஏவுகிறது. நீட் முறைகேடு தொடர்பாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க மறுக்கிறது. இதுதொடர்பாக விவாதத்துக்கு மறுக்கிறது'' என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

    English Summary

    Students, led by the ‘Cockroach Janta Party', are continuing their protest at Delhi's Jantar Mantar, a move that has garnered support from opposition parties. Against this backdrop, opposition MPs met today at Rahul Gandhi's residence in Delhi and attempted to proceed to the Gandhi memorial to stage a protest; however, the situation remains tense as the police have intercepted and stopped their bus.