டெல்லி: இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை ராஜினாமா செய்யக்கோரி டெல்லியில் இன்று மாலை 5 மணிக்கு கரப்பான்பூச்சி ஜனதா கட்சி தேசியக்கொடி போராட்டத்தை அறிவித்துள்ளது. இதற்கு டெல்லி வர்த்தகர்கள் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதோடு, போராட்டத்தை கைவிட்டு வேறு இடத்துக்கு செல்லும்படி கொந்தளித்துள்ளது.
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறது. இன்று டெல்லியில் கன்னாட் பிளேஸில் உள்ள சென்ட்ரல் பார்க்கில் தேசியக்கொடி போராட்டத்தை கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கே அறிவித்துள்ளார். இன்று மாலை 5 மணிக்கு நடக்கும் போராட்டத்தில் பொதுமக்கள் தேசியக்கொடியுடன் வந்து பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளார். ஆனால் டெல்லி போலீசாரோ கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். சென்ட்ரல் பார்க்கில் 11 பேர் மட்டுமே தேசியக்கொடியை ஏந்தி தேசியக்கீதம் பாட அனுமதித்துள்ளனர். ஆனால் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் பெரிய அளவில் போராட்டம் நடத்த தயாராகி வருகின்றனர். இது பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளதால் சென்டரல் பார்க்கில் பொதுமக்களுக்கு இன்றும், நாளையும் அனுமதி மறுக்கப்பட்டு மூடப்பட்டுள்ளது. பல ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே தான் இன்றைய கரப்பான்பூச்சி ஜனதா கட்சியிரின் போராட்டத்திற்கு டெல்லி வர்த்தகர்கள் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக டெல்லி வர்த்தகர்கள் சங்கம் சார்பில் கூறப்பட்டுள்ளதாவது: ''அனைத்து அரசியல் கட்சியினர் மற்றும் பிற அமைப்புகளுக்கு போராட்டம் நடத்தவதும், பிரச்சனைகளுக்கு எதிராக உங்களின் குரலை உயர்த்துவதற்கும் உரிமை உள்ளது. ஆனால் போராட்டத்தை வேறு இடத்தில் வைத்து கொள்ள வேண்டும். போராட்டம் நடத்துவதற்கு கன்னோட் பிளேஸ் என்பது இடம் கிடையாது. இது எங்களின் பணி நடக்கும் இடமாகும். உங்களின் போராட்டம் எதிர்காலத்தை நோக்கியது. அதற்காக இன்றைய எங்களின் வாழ்க்கையை கெடுக்காதீர்கள். உங்களுக்கு போராட உரிமை இருப்பது போல் எங்களுக்கு வாழும் உரிமை உள்ளது. இதனை மதிக்க வேண்டும். எதற்காக போராட்டம் நடத்த ஒதுக்கப்பட்ட இடத்துக்கு நீங்கள் செல்வது இல்லை?. எங்களை கொஞ்சம் நிம்மதியாக வாழ விடுங்கள். தற்போது பண்டிகை காலம் தொடங்கிவிட்டது. மக்களுக்கான வியாபாரம் நடக்கும் எங்களின் கன்னோட் பிளேஸ் மார்க்கெட் ஏரியாவில் வியாபாரத்தை கெடுக்காதீர்கள். உங்கள் போராட்டத்தால் எங்களின் வாழ்வாதாரம் பாதிப்பதோடு, அரசுக்கான வருவாயும் குறைகிறது. இதனால் கன்னோட் பிளேஸ் பகுதியில் போராட்டத்தை கைவிட்டு வேறு எங்காவது சென்று போராட்டம் நடத்துங்கள்'' என கூறப்பட்டுள்ளது. டெல்லியில் கன்னோட் பிளேஸ் என்பது மிகவும் முக்கிய இடமாகும். ஏராளமான கடைகள் உள்ளன. இன்றைய போராட்டம் அறிவிப்பால் போலீசார் குவிக்கப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் வர்த்தகர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த இடம் என்பது ஜந்தர் மந்தர் அருகே அமைந்துள்ளது. கடந்த ஒரு வாரமாக ஜந்தர் மந்தரை டார்க்கெட் வைத்து கரப்பான்பூச்சி கட்சியினர் போராடியதால் கன்னாட் பிளேஸில் பொதுமக்கள் நடமாட்டம் குறைந்து வியாபாரம் பாதிக்கப்பட்டது. ஆயுத பூஜை, தசரா உள்ளிட்ட பண்டிகைக்கு இன்னும் 2 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் கடைகளில் வர்த்தகம் களைகட்டும். இதற்கு நடுவே இன்று கரப்பான்பூச்சி ஜக்டசியினர் கன்னாட் பிளேஸில் போராட்டம் நடத்தி இருப்பது வியாபாரிகளை பாதிக்கும் என்பதால் டெல்லி வர்த்தகர்ள் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.