டெல்லி பூங்காவில் 3 சிங்கக்குட்டிகள் பிறப்பு! வம்சத்தை மீட்ட ஆசிய பெண் சிங்கம் மகாகௌரி! சோக பின்னணி

  • டெல்லி: டெல்லி மிருகக்காட்சிசாலையில் (NZP) வனவிலங்கு ஆர்வலர்களை நெகிழச் செய்யும் ஒரு மகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது.. அங்கு வசித்து வரும் ஆசிய பெண் சிங்கம் "மகாகௌரி" (Asiatic Lioness Mahagauri) ஒரே பிரசவத்தில் 3 ஆரோக்கியமான குட்டிகளைப் பெற்றெடுத்துள்ளது.. 16 வருடங்கள் கழித்து, இந்த சிங்கக்குட்டிகளை பற்றிதான் சோஷியல் மீடியாவிலும் வீடியோக்கள், போட்டோக்கள் வைரலாகி கொண்டிருக்கின்றன.

    Advertisement

    தேசிய விலங்கியல் பூங்காவில் உள்ள மகேஸ்வர் என்ற ஆண் சிங்கத்திற்கும் மகாகௌரிக்கும் கடந்த ஜூலை 7, 2026 அன்று இந்த 3 குட்டிகள் பிறந்துள்ளன. இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஜூலை 10ம் தேதி பூங்கா நிர்வாகம் போட்டோவுடன் வெளியிட்டது. இதன் மூலம் டெல்லி பூங்காவில் உள்ள சிங்கங்களின் மொத்த எண்ணிக்கை 6ஆக உயர்ந்துள்ளது.

    Advertisement

    டெல்லி பூங்காவில் 3 சிங்கக்குட்டிகள்

    ஆனால், இந்த சிங்க ஜோடியின் கடந்த காலப் பின்னணியில் ஒரு சோகமான கதையும் உள்ளது. கடந்த 2025ம் ஆண்டு ஏப்ரல் 27ம் தேதியன்று இந்த ஜோடிக்கு 5 குட்டிகள் பிறந்தன. ஆனால், அதில் 3 குட்டிகள் பிறவி குறைபாடுகள் காரணமாக இறந்துவிட்டன..

    மிச்சமிருந்த கார்த்திக் என்ற ஆண் குட்டிக்கும், கர்ணி என்ற பெண் குட்டிக்கும் தாயால் பாலூட்ட முடியாத சூழல் ஏற்பட்டது.. இதனால் பூங்கா டாக்டர்களே, செயற்கை பூனைப் பாலை வழங்கி அவற்றை காப்பாற்றினார்கள்.. அந்த 2 குட்டிகளும் தற்போது பூங்காவில் நல்ல ஆரோக்கியத்துடன் வளர்ந்து வருகின்றன. இந்த நிலையில், பிரசவித்த வெறும் 15 மாத இடைவெளிக்குள் மகாகௌரி மறுபடியும் வெற்றிகரமாகக் கருத்தரித்து, இப்போது 3 குட்டிகளை ஈன்றிருப்பது ஒரு சாதனையாகவே கருதப்படுகிறது.

    Advertisement

    ஆசிய பெண் சிங்கம் - சோகப்பின்னணி

    டெல்லி பூங்காவின் வரலாற்றில் 2009ம் ஆண்டிற்குப் பிறகு, பிரசவித்த ஒரே வருடத்திற்குள் மீண்டும் ஒரு பெண் சிங்கம் குட்டி போடுவது இதுவே முதல் முறை என்று பூங்கா இயக்குநர் சஞ்சீத் குமார் தெரிவித்துள்ளார்.

    டெல்லி பூங்காவில் 2009ம் ஆண்டு வரை சிங்கங்களின் பிறப்பு சீராக இருந்தது. ஆனால், அதுக்குபிறகுதான், அது முற்றிலும் நின்றுபோனது. கடந்த 2021ம் ஆண்டில், 17 வயதான சுந்தரம் என்ற ஒரே ஒரு வயதான ஆண் சிங்கம் மட்டுமே டெல்லி பூங்காவில் எஞ்சியிருந்தது. இதனால் சிங்கங்களின் வம்சமே அழிந்துவிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டது.

    Advertisement

    குஜராத் 2 பெண் சிங்கங்கள்

    இதற்கு பிறகுதான் 2021ம் ஆண்டில் குஜராத்தின் ஜூனாகாத் பகுதியில் இருந்து மகேஷ்வர் என்ற ஆண் சிங்கமும், மகாகௌரி மற்றும் சைலஜா என்ற இரண்டு பெண் சிங்கங்களும் டெல்லிக்குக் கொண்டு வரப்பட்டன. ஆனால், எதிர்பாராதவிதமாக கூண்டுக்குள் உலா வந்தபோது சைலஜா என்ற பெண் சிங்கத்தின் கால்களில் பலத்த காயம் ஏற்பட்டு, அதற்குப் பக்கவாதம் போன்ற பாதிப்பு உண்டானது. இதனால் சைலஜாவால் குட்டிகளைப் பெற்றெடுக்க முடியாத நிலை உருவானது.

    அதனால் ஒட்டுமொத்த டெல்லி பூங்காவின் சிங்க வம்சத்தை வளர்க்கும் பொறுப்பு மகாகௌரி மற்றும் மகேஷ்வர் இணையிடம் மட்டுமே இருந்தது. அந்த பொறுப்பைத் இப்போது மகாகௌரி சிறப்பாக நிறைவேற்றியுள்ளது.

    Advertisement

    3 ஆண் சிங்கக் குட்டிகள்

    தற்போது பிறந்துள்ள 3 குட்டிகளும், தாய் மகாகௌரியும் பூங்காவின் பிரத்யேக பிரசவ கூண்டில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளனர். குட்டிகளின் ஆரம்ப கட்ட வளர்ச்சிக்கு எந்தவிதமான இடையூறும் இல்லாத அமைதியான சூழல் அவசியம் என்பதால், டாக்டர்கள் டீம், சிசிடிவி கேமராக்கள் மூலம் 24 மணி நேரமும் அவற்றைக் கண்காணித்து வருகிறார்கள்.

    இந்த புதிய வரவுகளின் மூலம் டெல்லி பூங்காவில் சுந்தரம், மகேஷ்வர், கார்த்திக் ஆகிய 3 ஆண் சிங்கங்களும்; மகாகௌரி, சைலஜா, கர்ணி ஆகிய 3 பெண் சிங்கங்களும் பராமரிக்கப்பட்டு வருகின்றன. அழிந்து வரும் ஆபத்திலுள்ள ஆசிய சிங்க இனத்தை பெருக்குவதற்காக எடுக்கப்பட்ட இந்த முயற்சிகளின் வெற்றி, ஒட்டுமொத்த பூங்கா ஊழியர்களிடையேயும் நெகிழ்ச்சியையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தி கொண்டிருக்கிறதாம்...!!

    English Summary

    Joy at Delhi Zoo! Three Lion Cubs Born, But the Sad Story Behind Mahagauri's Role in Saving the Bloodline