தொகுதி மறுசீரமைப்பு மசோதா 2.0.. திமுக ஆதரித்தால் என்ன நடக்கும்? மசோதா நிறைவேறுமா? முழு கணக்கு

  • டெல்லி: நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடரில் மத்திய அரசு மீண்டும் கொண்டுவரத் திட்டமிட்டுள்ள தொகுதி மறுசீரமைப்பு மசோதா இந்திய அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. இதற்கு திமுக ஆதரவு தருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

    Advertisement

    லோக்சபாவில் 22 எம்பிக்களையும், ராஜ்யசபாவில் 10 எம்பிக்களையும் கொண்டுள்ள திமுகவின் நாடாளுமன்ற பலம், இந்த மசோதாவின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் மிக முக்கிய விஷயமாக மாறியுள்ளது. சாதாரண மசோதாக்களைப் போல அல்லாமல், இந்த மசோதா இந்திய அரசியல் சாசனத்தில் திருத்தம் மேற்கொள்வதால், இதற்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் சட்டப்பிரிவு 368-ன் கீழ் சிறப்பு பெரும்பான்மை தேவைப்படுகிறது.

    Advertisement

    அதாவது, அவையின் மொத்த உறுப்பினர்களில் 50% மேல் ஆதரவளிக்க வேண்டும்; அதே நேரத்தில் வாக்கெடுப்பில் பங்கேற்று வாக்களிப்பவர்களில் மூன்றில் இரண்டு பங்கு 66.6% உறுப்பினர்கள் மசோதாவுக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும்.

    இந்தச் சூழலில், திமுக இந்த மசோதாவை ஆதரித்தால் என்ன நடக்கும், அல்லது வாக்கெடுப்பைப் புறக்கணித்து நடுநிலை வகித்தால் என்ன நடக்கும் என்ற நாடாளுமன்றக் கணிப்புகள் தற்போது அரசியல் வட்டாரங்களில் உன்னிப்பாகக் கவனிக்கப்பட்டு வருகின்றன.

    திமுக மசோதாவை ஆதரித்தால் என்ன நடக்கும்?

    திமுக இந்த மசோதாவை ஆதரிக்க முன்வந்தால், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இந்த மசோதா எந்தவித தடையுமின்றி மிக எளிதாக நிறைவேறிவிடும்.

    Advertisement

    லோக்சபா கணக்கு: லோக்சபாவின் மொத்த பலம் 543 ஆகும். இதில் சிறப்பு பெரும்பான்மை பெற 272 எம்பிக்களின் அடிப்படை ஆதரவும், முழு வருகை இருக்கும் பட்சத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மைக்கு சுமார் 362 எம்பிக்களின் ஆதரவும் தேவை.

    கடந்த ஏப்ரல் மாதம் இந்த மசோதாவுக்கு 298 வாக்குகள் மட்டுமே கிடைத்ததால் தோல்வியடைந்தது. ஆனால், தற்போது திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் உத்தவ் சிவசேனாவில் ஏற்பட்டுள்ள பிளவுகள் (இன்னும் முழுமையான ஆதரவு எண் வெளியாகவில்லை) மூலம் ஆளும் என்டிஏ கூட்டணியின் பலம் அதிகரித்துள்ளது. இதனுடன் திமுகவின் 22 எம்பிக்களின் வாக்குகளும் இணையும் போது, மொத்த ஆதரவு வாக்குகள் 362 என்ற இலக்கை மிக எளிதாகத் தாண்டிவிடும் என்பதால் லோக்சபாவில் மசோதா பாஸாகிவிடும்.

    Advertisement

    ராஜ்யசபா கணக்கு

    ராஜ்யசபாவின் மொத்த பலம் 245. இதில் மசோதா நிறைவேற 123 எம்பிக்களின் அடிப்படை ஆதரவும், 164 எம்பிக்களின் ஆதரவு வாக்குகளும் தேவை. தற்போது பாஜக தலைமையிலான கூட்டணிக்கு 115 முதல் 120 எம்பிக்கள் மட்டுமே உள்ளனர். சாதாரண மசோதாக்களை பிற கட்சிகளின் உதவியுடன் நிறைவேற்றும் பாஜகவுக்கு, அரசியல் சாசன திருத்தத்திற்கு கூடுதல் பலம் தேவைப்படுகிறது. இந்த இடத்தில் திமுகவின் 10 ராஜ்யசபா எம்பிக்கள் மசோதாவை ஆதரித்து வாக்களித்தால், அது ஆளும் கூட்டணிக்குத் தேவையான பெரும்பான்மை இலக்கை எட்ட நேரடியாக வழிவகுக்கும்.

    திமுக வாக்கெடுப்பைப் புறக்கணித்தால் என்ன நடக்கும்?

    வாக்கெடுப்பு நடைபெறும் நாளில் திமுக எம்பிக்கள் அவைக்கு வராமல் புறக்கணித்தாலோ அல்லது அவையில் இருந்துகொண்டு வாக்களிக்காமல் நடுநிலை வகித்தாலோ, லோக்சபாவில் மசோதா தப்பித்துவிடும், ஆனால் ராஜ்யசபாவில் கடுமையான முட்டுக்கட்டையைச் சந்திக்கும்.

    Advertisement

    லோக்சபா கணக்கு

    திமுகவின் 22 எம்பிக்கள் வாக்கெடுப்பைப் புறக்கணித்தால், லோக்சபாவில் வாக்களிக்கும் எம்பிக்களின் எண்ணிக்கை 543-லிருந்து 521 ஆகக் குறையும். இதனால், மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மைக்கான இலக்கு 362-லிருந்து 348 ஆகக் குறைந்துவிடும். ஏற்கனவே பிற கட்சிகளின் ஆதரவோடு பலம் பெற்றுள்ள என்டிஏ கூட்டணிக்கு, இந்த புதிய குறைந்தபட்ச இலக்கான 348-ஐ எட்டுவது எளிதான காரியமாக மாறிவிடும்.

    அடிப்படை பெரும்பான்மையான 272-ஐ ஆளும் கட்சி ஏற்கனவே வைத்துள்ளதால், லோக்சபாவில் மசோதா எளிதாக நிறைவேறிவிடும்.

    ராஜ்யசபா கணக்கு

    ராஜ்யசபாவில் திமுகவின் 10 எம்பிக்கள் புறக்கணிக்கும் போது, வாக்களிக்கும் எம்பிக்களின் எண்ணிக்கை 235 ஆகக் குறையும். இதனால் மூன்றில் இரண்டு பங்கு இலக்கு 157 ஆகக் குறையும் என்றாலும், அவையின் மொத்த பலத்தில் 50% ஆதரவு (அதாவது 123 வாக்குகள்) கண்டிப்பாக இருக்க வேண்டும் என்ற விதி மாறாது.

    Advertisement

    தற்போதைய நிலையில் திமுக இல்லாத பட்சத்தில், காங்கிரஸ், சமாஜ்வாடி, ஜேஎம்எம் மற்றும் இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒருங்கிணைந்து எதிர் வாக்களித்தால், ஆளும் பாஜக கூட்டணியால் 123 என்ற மேஜிக் நம்பரைத் தொடுவது மிகக் கடினம். இதனால் திமுகவின் வெளிநடப்பு அல்லது புறக்கணிப்பு ராஜ்யசபாவில் மசோதாவை முடக்கிவிடும்.

    இந்த மசோதா சட்டமாக மாற திமுகவின் நேரடி ஆதரவு என்பது ஆளும் பாஜகவுக்கு அத்தியாவசியமான ஒன்றாக உள்ளது. திமுகவின் ஒரு சிறு அசைவும் மசோதாவின் தலைவிதியை மாற்றிவிடும் என்பதால் டெல்லி அரசியல் களம் பெரும் பரபரப்பில் உள்ளது.

    English Summary

    Delimitation Bill 2.0: Will the Bill Pass if DMK Supports or Abstains?