பின்வாங்கிய மோடி அரசு.. 12 ஆண்டுகளில் முதல்முறை! தர்மேந்திர பிரதான் ராஜினாமா உணர்த்துவது என்ன

  • டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசில் கடந்த 12 ஆண்டுகளில் பல சர்ச்சைகள் எழுந்துள்ளன. எதிர்க்கட்சிகள் பல மத்திய அமைச்சர்களின் ராஜினாமாவை தொடர்ந்து வலியுறுத்தியுள்ளன. ஆனால், எந்தவொரு கோரிக்கையையும் மோடி அரசு ஏற்று கொண்டதில்லை. ஆனால், மோடி ஆண்டு மோடி ஆட்சியில் முதல்முறையாக மக்கள் போராட்டத்தால் மத்திய அமைச்சர் ஒருவர் இப்போது ராஜினாமா செய்திருக்கிறார்.

    Advertisement

    நீட் தேர்வு முறைகேடு விவகாரத்தை தொடர்ந்து நாடு முழுவதும் மாணவர்கள் தொடர் போராட்டம் நடத்தினர். டெல்லியில் ஆரம்பித்த இந்த போராட்டம் பிறகு நாடு முழுக்க பரவியது. மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்பதே அவர்கள் பிரதான கோரிக்கை.

    Advertisement

    மோடி அரசு

    கடந்த 12 ஆண்டுகளில் இதுவரை எந்தவொரு மத்திய அமைச்சரும் இதுபோன்ற அழுத்தம் காரணமாக ராஜினாமா செய்ததே இல்லை. அமைச்சர்களுக்கு முழு ஆதரவு அளிப்பதே பாஜக அரசின் வழக்கமான அரசியலாக இருந்து வந்தது. ஆனால், இப்போது முதல்முறையாக தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்திருக்கிறார். இது மோடி அரசின் 12 ஆண்டு ஆட்சியில் முக்கியமான அரசியல் திருப்பமாக பார்க்கப்படுகிறது.

    இதற்கு முன்பு, 2017ஆம் ஆண்டு, உத்தரகாண்ட் உத்த்கல் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட தொடர்ச்சியான ரயில் விபத்துகளுக்குப் பிறகு, அப்போதைய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு தனது "தார்மீக பொறுப்பை" ஏற்று ராஜினாமா செய்ய முன்வந்தார். ஆனால் பிரதமர் மோடி உடனடியாக அந்த ராஜினாமாவை ஏற்கவில்லை. சில வாரங்களுக்குப் பிறகு நடைபெற்ற அமைச்சரவை மாற்றத்தில், அவரை ரயில்வே துறையில் இருந்து வர்த்தக அமைச்சராக மாற்றினார். அதாவது அவர் அமைச்சரவையை விட்டு வெளியேறவில்லை; இலாகா மட்டுமே மாற்றப்பட்டது.

    Advertisement

    வித்தியாசம்

    மேலும், அந்த சம்பவத்துக்கும், தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவுக்கும் முக்கியமான வித்தியாசம் உள்ளது. சுரேஷ் பிரபு மீது நாடு முழுவதும் அவரது ராஜினாமாவை மட்டுமே கோரி மக்கள் போராட்டம் எதுவும் நடைபெறவில்லை. அவர் தார்மீக பொறுப்பேற்றார். இதையடுத்து அவரது இலாகா மாற்றப்பட்டது. கிட்டத்தட்ட சாதாரண நிர்வாக நடவடிக்கையாகவே இருந்தது..

    அதேபோல 2018ஆம் ஆண்டு மீ டூ இயக்கத்தின் போது, பாலியல் குற்றச்சாட்டுகளை தொடர்ந்து வெளியுறவு துறை இணையமைச்சராக இருந்த எம்.ஜே. அக்பர் ராஜினாமா செய்தார். அந்த ராஜினாமாவும் பாலியல் குற்றச்சாட்டுகளின் பின்னணியில் எடுக்கப்பட்ட முடிவாகவே கருதப்பட்டது. போராட்டம் எதுவும் இல்லை.

    Advertisement

    மன்மோகன் சிங்

    மன்மோகன் சிங் தலைமையிலான யூபிஏ ஆட்சியில், சர்ச்சைகள் காரணமாக அமைச்சர்கள் ராஜினாமா செய்த சம்பவங்கள் இருந்துள்ளன. 2010-ஆம் ஆண்டு, 2ஜி சர்ச்சை காரணமாக பொதுமக்கள் அழுத்தத்துக்கு மத்தியில் அப்போதைய டெலிகாம் அமைச்சர் ஆ ராசா பதவி விலகினார். அதன் பிறகு வழக்கு விசாரணையில் அவர் மீது தவறில்லை என்று தீர்ப்பு வந்தது தனிக்கதை!

    அதேபோல், 2013-ஆம் ஆண்டு நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு விவகாரத்தில் எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து அஷ்வினி குமார் தனது பதவியை ராஜினாமா செய்தார். அந்த காலகட்டத்தில், சர்ச்சைகளில் சிக்கிய அமைச்சர்கள் ராஜினாமா செய்வது யுபிஏ அரசின் இமேஜை டேமேஜ் செய்தது. அது மன்மோகன் சிங் அரசை பலவீனமான அரசாக காட்டியது.

    Advertisement

    மோடி அரசு

    இதன் காரணமாகவே 2014இல் ஆட்சிக்கு வந்த பிறகு, எந்த சர்ச்சை வந்தாலும் அமைச்சர்களை ராஜினாமா செய்ய வைக்காமல், அவர்களுக்கு ஆதரவாக நிற்பதையே மோடி அரசு தனது ஸ்டைலாக வைத்திருந்தது. எதிர்க்கட்சிகள் பலமுறை ராஜினாமா கோரினாலும், அதை காது கொடுத்து கூட கேட்கவில்லை. ஆனால், தர்மேந்திர பிரதான் விவகாரத்தில் நிலைமை வேறு!

    நீட் தேர்வு முறைகேட்டை தொடர்ந்து மாணவர்கள் நாடு முழுவதும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜந்தர் மந்தர் முதல் மும்பை வரை போராட்டங்கள் வெடித்தன. சமூக ஆர்வலர்கள், எதிர்க்கட்சிகள், பெற்றோர், முன்னாள் அதிகாரிகள் என பல தரப்பினரும் குரல் கொடுத்தனர். அதாவது இது அரசியலை தாண்டி ஒரு மக்கள் இயக்கமாக மாறியது. தர்மேந்திர பிரதானின் ராஜினாமா தான் போராட்டத்தின் முக்கிய கோரிக்கையாக இருந்தது.

    Advertisement

    முதல்முறை

    இதன் காரணமாகவே தர்மேந்திர பிரதான் பதவி விலகினார். பிரதமர் நரேந்திர மோடியின் 12 ஆண்டு ஆட்சியில், மக்கள் போராட்டத்தின் நேரடி அரசியல் அழுத்தத்தால் பதவி விலகிய முதல் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்! மோடி ஆட்சியில் நடந்த மிக முக்கியமான ஒரு அரசியல் நிகழ்வாக இது பார்க்கப்படுகிறது.

    English Summary

    Dharmendra Pradhan resignation over the NEET row has sparked political debate: (மக்கள் போராட்டத்தால் தர்மேந்திர பிரதான் ராஜினாமா): First Union minister in the Modi government to step down following sustained public protests.