டெல்லி: 'நீட்' வினாத்தாள் கசிவுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தான் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்யும் பேச்சுக்கே இடமில்லை என்று மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வளவு களேபரங்களுக்கு மத்தியிலும் தர்மேந்திர பிரதானை மத்திய அரசு விட்டு கொடுக்காதது ஏன்? என்பது பற்றிய பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.
'நீட்' வினாத்தாள் கசிவு உள்பட மத்திய அரசின் பிற தேர்வுகளில் ஏற்பட்ட குளறுபடிகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த ஒரு மாதமாக 'கரப்பான்பூச்சி ஜனதா கட்சி'யினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் தற்போது தீவிரமாகி உள்ளது.
டெல்லி ஜந்தர் மந்தர் மட்டுமின்றி நாட்டின் பல்வேறு இடங்களில் இந்த போராட்டம் தொடர்ந்து வலுவடைந்து வருகிறது. இது மத்திய அரசுக்கு தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் தற்போது மத்திய அரசு சார்பில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. நேற்று 2வது கட்டமாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில் உடன்பாடு எட்டப்படவில்லை. நேற்றைய பேச்சுவார்த்தையின்போது போராட்டக்காரர்களின் மீதான வழக்கை வாபஸ் பெறுவது, நீட் தேர்வில் தற்கொலை செய்தவர்களுக்கு இழப்பீடு வழங்குவது, கல்வித்துறையில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்த்திருத்தங்கள் உள்ளிட்ட கோரிக்கையை மத்திய அமைச்சர் ஜேபி நட்டா, ஜிதேந்திர சிங் ஏற்றனர். ஆனால் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் பிரதான கோரிக்கையான தர்மேந்திர பிரதான் ராஜினாமாவை மட்டும் ஏற்கவில்லை. இதனால் அந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. இதனால் இன்று 3வது கட்டமாக பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது. இதனால் இன்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் இன்று ராஜினாமா செய்வாரா? என்ற கேள்வி பலருக்கும் எழுந்துள்ளது. இந்நிலையில் தான் மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகமாட்டார் என்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. மேலும் அவர் பதவி விலகுவார் என்ற கேள்விக்கே இடமில்லை என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. இதுபற்றி மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகையில், ''போராட்டங்கள் காரணமாக தர்மேந்திர பிரதான் பதவி விலகுவது என்பது எளிதான விஷயமாக இருக்கலாம். ஆனால் உண்மையில் அது ஒரு பொறுப்பை விட்டுவிட்டு தப்பி ஓடுவதற்கு சமமாகும். இதனால் தர்மேந்திர பிரதான் பதவி விலகுவாரா? என்ற கேள்விக்கே இடமில்லை. அதுமட்டுமின்றி மக்கள் பாஜகவிற்கு மெஜாரிட்டி கொடுத்துள்ளனர். இதனால் மக்களுக்கான பணியை செய்யும் பொறுப்பு எங்களுக்கு உள்ளது. அதுமட்டுமின்றி ஒருவரிடம் இருந்து ராஜினாமா பெறுவது என்பது வெறும் அடையாள நடவடிக்கையாக தான் பார்க்கிறோம். அதற்கு பதில் நீட் தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமையில் உள்ள அமைப்பு ரீதியான சிக்கல்களை சரிசெய்வதில் அரசு கவனம் செலுத்துகிறது. தேர்வு முறையில் உள்ள குறைபாடுகள் பற்றி விரிவாக பட்டியல் தயாரிக்கப்ட்டுள்ளது. அதனடிப்படையில் சீர்த்திருத்த நடவடிக்கைகள் விரைவில் செயல்படுத்தப்படும். அதுமட்டுமின்றி தற்போது வினாத்தாள் கசிவில் சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது விரைவில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று அந்த வட்டாரங்கள் கூறியது. அதுமட்டுமின்றி தற்போது தர்மேந்திர பிரதானை நீக்கினால் தொடர்ந்து இதுபோல் ஒவ்வொரு அமைச்சர்கள், தலைவர்களுக்கு எதிராக போராட்டங்கள் வெடிக்கலாம். இதனால் தர்மேந்திர பிரதானை ராஜினாமா செய்ய வைப்பதை விட குறைகளை அறிந்து சீர்த்திருத்தங்களை கொண்டு வருவதற்கு தேவையான நடவடிக்கையில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதன்மூலம் மத்திய கல்வி அமைச்சர் பொறுப்பில் இருந்து தர்மேந்திர பிரதானை விடுவிக்க முடியாது என்று மத்திய அரசு வட்டாரங்கள் கூறியுள்ளன. ஆனால் போராட்டக்காரர்களின் பிரதான கோரிக்கையாக தர்மேந்திர பிரதானின் ராஜினாமா தான் உள்ளது. இதனால் அடுத்து என்ன நடக்கிறது? இந்த விஷயத்தை மத்திய அரசு எப்படி கையாள போகிறது? என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.