டிரம்ப் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. ஒவ்வொரு இந்தியனின் தலையிலும் இடி! உற்று பார்க்கும் உலக நாடுகள்

  • டெல்லி: உலகின் மிக முக்கியமான எண்ணெய் போக்குவரத்து பாதைகளில் ஒன்றான ஹார்முஸ் ஜலசந்தியை சுற்றி மீண்டும் இப்போது சர்வதேச கவனம் சூழ்ந்துள்ளது. இந்த ஜலசந்தி வழியாக செல்லும் கப்பல்களிடம் 20% கட்டணம் வசூலிப்போம் என டிரம்ப் அறிவித்துள்ள நிலையில், இது நேரடியாக இந்தியாவின் பெட்ரோல், டீசல் விலையைப் பாதிக்கும் ஒரு ஆபத்து ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக நாம் விரிவாக பார்க்கலாம்!

    Advertisement

    வளைகுடாவில் மீண்டும் பதற்றம் வெடித்துள்ளது. எல்லாம் முடிந்து இடைக்கால போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானதால் போர் முடிந்துவிட்டது என்றே பலரும் நினைத்தனர். ஆனால், கடந்த ஒரே வாரத்தில் நிலைமை மொத்தமாக மாறிவிட்டது. மீண்டும் இரு தரப்புமே நேரடி தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. மற்றொரு பக்கம் டிரம்ப்பும் தொடர்ந்து அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.

    Advertisement

    டிரம்ப் தடாலடி

    இந்த சூழலில் தான் டிரம்ப் மீண்டும் வழக்கம் போல தடாலடியாக ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதாவது ஹார்முஸ் ஜலசந்தியில் பதற்றம் நிலவும் சூழலில், இந்த கடல் வழித்தடத்தின் பாதுகாவலராக அமெரிக்கா செயல்படும் என்றும் அதற்கு பதிலாக இதன் வழியாக செல்லும் கப்பல்களிடம் இருந்து 20 சதவீத கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் டிரம்ப் அறிவித்தார். இந்த திட்டம் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை என்றாலும் இது பேசுபொருளாகியுள்ளது.

    அதிலும் இந்த ஜலசந்தி மூலமாகவே பெருமளவு கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்யும் இந்தியா போன்ற தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு இது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

    Advertisement

    ஹார்முஸ் ஜலசந்தி

    ஹார்முஸ் ஜலசந்தி என்பது ஈரான் மற்றும் ஓமன் நாடுகளுக்கு இடையே அமைந்துள்ள குறுகிய கடல் பாதையாகும். பாரசீக வளைகுடாவை அரபிக் கடலுடன் இணைக்கும் இந்த வழித்தடம் வழியாகத் தான் உலகின் மொத்த கச்சா எண்ணெய் வர்த்தகத்தில் சுமார் 20 சதவீதம் நடைபெறுகிறது. மேலும், LNG எனப்படும் திரவ இயற்கை எரிவாயு ஏற்றுமதியிலும் இந்த பாதை முக்கிய இடத்தை வகிக்கிறது.

    இந்தியாவைப் பொறுத்தவரை இந்த ஜலசந்தி ரொம்பவே முக்கியமானது. ஏனென்றால் இந்தியா தனது தேவைக்கான கச்சா எண்ணெய்யில் சுமார் 85%ஐ வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறது. ஈராக், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், குவைத், கத்தார் போன்ற வளைகுடா நாடுகளிலிருந்து வரும் பெரும்பாலான எண்ணெய் ஹார்முஸ் ஜலசந்தி வழியாகவே இந்தியாவை அடைகிறது.

    Advertisement

    20% கட்டணம்

    இந்தச் சூழலில் தான் ஹார்முஸ் வழியாகச் செல்லும் கப்பல்களுக்கு 20 சதவீத கட்டணம் வசூலிக்கப்படும் என்று டிரம்ப் அறிவித்துள்ளார். அதாவது அந்த பகுதியில் ஈரான், ஹிஸ்புல்லா உள்ளிட்டோர் அடிக்கடி அத்துமீறுகிறார்கள். அவர்களிடம் இருந்து வணிக கப்பல்களுக்கு அமெரிக்கக் கடற்படை பாதுகாப்பு கொடுக்குமாம். அந்த பாதுகாப்புக்கு பதிலாக இந்த 20% கட்டணம் வசூலிக்கப்படும் என்பதே டிரம்பின் வாதமாக இருக்கிறது.

    இதற்கிடையே இந்த அறிவிப்புக்கு ஈரான் பதிலடி கொடுத்துள்ளது.. ஹார்முஸ் தங்களின் சொத்து என கூறி வரும் ஈரான், இதுபோன்ற கட்டணங்களைக் கடுமையாக சாடி வருகிறது. இது தொடர்பாக ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்சி, "ஹார்முஸ் ஜலசந்தியின் உண்மையான பாதுகாவலர் ஈரான்தான்.. 20 சதவீத கட்டணம் என்பது மிக அதிகம்" என்றும் கிண்டலாக பதிலளித்துள்ளார்.

    Advertisement

    இந்தியா

    உண்மையை சொல்ல வேண்டும் என்றால் ஹார்முஸ் ஜலசந்தி என்பது இயற்கையாக அமைந்துள்ள ஒரு பகுதி. எனவே, இதைக் கடக்க யாருக்கும் கட்டணம் வசூலிக்க உரிமை இல்லை. சர்வதேச கடல்சார் அமைப்பு போன்ற சர்வதேச அமைப்புகளும் கூட ஹராமுஸ் உட்பட எந்தவொரு சர்வதேச ஜலசந்தியிலும் கட்டணத்தை வசூலிப்பது சரியான நடைமுறை இல்லை என்றே கூறியுள்ளன.

    இதுபோல அங்கு நிலவும் பதற்றம் காரணமாக இந்தியாவிலும் பெட்ரோல், டீசல் விலை உயரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வந்ததால் மட்டும் உடனடியாக பெட்ரோல், டீசல் ஏறும் எனச் சொல்லிவிட முடியாது. ஆனால், ஹார்முஸ் பகுதியில் அதிகரித்து வரும் பதற்றம் காரணமாகக் கப்பல் காப்பீட்டுக் கட்டணங்கள், போக்குவரத்து செலவுகள் உயரும்.

    Advertisement

    பெட்ரோல் விலை உயரும்!

    இந்த கூடுதல் செலவுகள் அனைத்தும் இறுதியில் கச்சா எண்ணெய் விலையை உயர்த்தும். அதனால் இந்திய எண்ணெய் நிறுவனங்களின் இறக்குமதி செலவு அதிகரிக்கும். இதனால் பெட்ரோல் டீசல் விலை உயரலாம். மேலும், சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்தால்.. இந்தியாவின் வர்த்தக பற்றாக்குறை அதிகரிக்கும்! பணவீக்கம் உயரும்.

    இதன் காரணமாகவே கடந்த சில ஆண்டுகளாக இந்தியா தனது கச்சா எண்ணெய் கொள்முதலைப் பரவலாக்க முயல்கிறது. ரஷ்யா, இதர ஆப்பிரிக்க நாடுகளிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதலை அதிகரிக்க முயற்சிகள் நடக்கிறது. அதேநேரம் ஒரு விஷயத்தை நாம் மிக தெளிவாகவே சொல்லலாம். அதாவது ஹார்முஸ் ஜலசந்தியில் ஏற்படும் எந்தவொரு நீண்ட கால மாற்றமும் இந்திய பொருளாதாரத்தில் மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை.

    English Summary

    US President Donald Trump proposal to impose a 20% toll on cargo passing through the Strait of Hormuz(பெட்ரோல் டீசல் விலையை காலி செய்யும் ஹார்முஸ் பதற்றம்): Tension in Hormuz will directly affect petrol diesel price.