E20 இருக்கட்டும்.. ஆனால் பழைய வாகனங்களுக்கு E10 வேண்டும்! தலைமை பொருளாதார ஆலோசகர் முக்கிய கருத்து!

  • டெல்லி: இந்தியாவில் E20 பெட்ரோல் பயன்பாடு தொடர்பாக விவாதம் தொடர்ந்து வரும் நிலையில், பழைய இருசக்கர வாகனங்களுக்கு மீண்டும் E10 பெட்ரோலை வழங்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்று மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் வி. அனந்த நாகேஸ்வரன் தெரிவித்துள்ளார். இதன் மூலம் பழைய வாகன உரிமையாளர்களுக்கு ஒரு ஆப்ஷன் கிடைக்கும் அதேநேரம் எத்தனால் தயாரிப்பு குறித்த ஆய்வுகளையும் நடத்தவும் டைம் கிடைக்கும் என அவர் குறிப்பிடுகிறார்.

    Advertisement

    நமது நாட்டில் இப்போது அனைத்து பெட்ரோல் பங்குகளிலும் E20 பெட்ரோல் தான் கிடைக்கிறது. அதாவது இந்த E20 பெட்ரோலில் 80% பெட்ரோலும் 20% எத்தனாலும் இருக்கும். இருப்பினும், பொதுமக்கள் பலரும் E10 பெட்ரோல் ஆப்ஷனும் தங்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்றும் பழைய வாகனங்கள் இதனால் பாதிக்கப்படுவதாகவும் குறிப்பிடுகிறார்கள்.

    Advertisement

    பழைய வாகனங்கள்

    இதற்கிடையே இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் வி. அனந்த நாகேஸ்வரன் கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார். அதில் தான் பழைய வாகனங்களுக்கு மீண்டும் E10 பெட்ரோலை வழங்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். பழைய வாகனங்களில் E20 பெட்ரோலை பயன்படுத்தும்போது அதன் ரப்பர் பாகங்கள் உள்ளிட்டவை பாதிக்கப்படலாம் என சொல்லப்படும் நிலையில், E10 பெட்ரோலை மீண்டும் வழங்குவது குறித்து நாகேஸ்வரன் கூறியுள்ளது கவனம் பெற்றுள்ளது.

    மேலும், இந்தியாவின் எத்தனால் கலப்பு திட்டம் வேகம் பெற்றுள்ளது. நிர்ணயிக்கப்பட்ட 20 சதவீத இலக்கை திட்டமிட்ட காலத்துக்கு முன்பாகவே மத்திய அரசு எட்டியுள்ளது. பெட்ரோலை எத்தனாலுடன் கலக்கும்போது, கச்சா எண்ணெய் இறக்குமதி குறைவது, அந்நிய செலாவணியை மிச்சப்படுத்துவது, விவசாயிகளுக்கு கூடுதல் சந்தையை உருவாக்குவது என பல நன்மைகள் இருப்பதாக மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

    Advertisement

    எத்தனால் உற்பத்தி

    இருப்பினும், பெட்ரோலில் எத்தனால் அளவை E20க்கு மேல் அதிகரிக்க வேண்டும் என்றால் அதற்கேற்ப எத்தனால் உற்பத்தியும் அதிகரிக்க வேண்டும். கரும்பு, மக்காச்சோளம், அரிசி உள்ளிட்ட பல்வேறு விவசாயப் பொருட்களே இதற்கு பயன்படும் நிலையில், இது உணவு மற்றும் எரிபொருளுக்கு இடையேயான போட்டியை உருவாக்கும்.

    குறிப்பாக மக்காச்சோளத்தின் தேவை குறித்து பொருளாதார ஆலோசகர்கள் கவலை தெரிவித்துள்ளனர். மக்காச்சோளம் எத்தனால் தயாரிப்புக்கு பயன்படுத்தப்படுவதுடன், கோழி மற்றும் கால்நடை தீவன உற்பத்தியிலும் முக்கியமான மூலப்பொருளாக உள்ளது. அதிக அளவு மக்காச்சோளம் எத்தனால் தயாரிப்புக்கு சென்றுவிட்டால், தீவனத்துக்கு மக்காச்சோளம் கிடைப்பதில் பாதிப்பு ஏற்படும். இதனால் கோழி மற்றும் கால்நடை உற்பத்தி செலவுகள் அதிகரிக்கக்கூடும். இதுபோல மறைமுக பொருளாதார தாக்கங்கள் இருப்பதால் எத்தனால் கலப்பை அதிகரிக்கும் முன்பு தீவிர ஆய்வு தேவைப்படுவதாக வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள்.

    Advertisement

    கரும்பு

    கரும்பு மூலம் எத்தனால் தயாரிப்பதிலும் இதே பிரச்சினை உள்ளது. எத்தனால் தயாரிப்பிற்கு அதிகளவில் கரும்பு சென்றால் சர்க்கரை விலை அதிகரிக்க ஆரம்பிக்கும். சர்க்கரை விலையை கட்டுப்படுத்தும் நோக்கில், எத்தனால் தயாரிப்புக்கு கரும்பை பயன்படுத்துவதில் கட்டுப்பாடுகளை கொண்டு வருவது குறித்து அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.. நடப்பு பருவத்தில் சுமார் 30 லட்சம் டன் சர்க்கரை, அதாவது மொத்த உற்பத்தியில் சுமார் 10 சதவீதம், எத்தனால் தயாரிப்புக்கு திருப்பப்பட்டதாக கூறப்படுகிறது. இது மேலும் அதிகரிக்கக்கூடும் என்பதால் கவனம் தேவை!

    தண்ணீர் பயன்பாடு குறித்த விவாதமும் இதில் கவனம் பெறுகிறது. எத்தனால் ஆலைக்கு எவ்வளவு தண்ணீர் தேவைப்படுகிறது என்பதை மட்டும் பார்க்காமல்.. எத்தனால் தயாரிக்கப்படும் பயிரை விளைவிக்க எவ்வளவு தண்ணீர் தேவைப்படுகிறது என்பதையும் கணக்கிட வேண்டும் என நாகேஸ்வரன் கூறுகிறார். குறிப்பாக கரும்பு அதிக தண்ணீர் தேவைப்படும் பயிராக இருப்பதால், எத்தனால் தேவைக்காக கரும்பு உற்பத்தியை அதிகரிக்கும்போது தண்ணீர் பயன்பாடும் அதிகரிக்கிறது.

    Advertisement

    பழைய வாகனங்கள்

    இவை எல்லாவற்றையும் விட பழைய வாகனங்களுக்கு தீர்வு தேவைப்படுகிறது. BS-IV-க்கு முந்தைய காலகட்டத்தில் தயாரிக்கப்பட்டு, கார்புரேட்டர் பொருத்தப்பட்ட சுமார் 7.5 முதல் 8 கோடி பழைய இருசக்கர வாகனங்கள் இன்னும் இந்திய சாலைகளில் இருப்பதாக அவர்கள் மதிப்பிட்டுள்ளனர்.

    கார்புரேட்டர் கொண்ட பழைய வாகனங்கள் அதிக எத்தனால் கலவைக்கு ஏற்ப காற்றை தானாக சரிசெய்ய முடியாது. இதனால் சில வாகனங்களில் என்ஜின் அதிக வெப்பத்தில் இயங்குவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும், பழைய ரப்பர் மற்றும் பிற உதிரிப்பாகங்கள் எத்தனால் கலவைக்கு ஏற்றதாக இல்லாமல் இருக்கலாம் என்றும் வல்லுநர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த உதிரி பாகங்களை E20-க்கு ஏற்றவாறு மாற்றினால் பிரச்சினை முடிந்துவிடும் என்றாலும் பல கோடி வாகனங்களை மாற்றியமைக்க அதிக காலம் தேவைப்படும். எனவே, அதுவரை இருசக்கர வாகனங்களுக்கு E10 பெட்ரோலை மீண்டும் வழங்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும்.

    Advertisement

    E10 பெட்ரோல்

    இப்போது E20 என்பது மத்திய அரசின் கொள்கையாக உள்ளது. E20 பெட்ரோல் குறித்து விரிவான சோதனைகள் நடத்தப்பட்டுள்ளதாகவும், பெரியளவில் இதனால் சேதம் ஏற்படுவதில்லை என்பதுமே மத்திய அரசின் விளக்கமாக இருக்கிறது. மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகரும் கூட E20 பல வழிகளில் நமக்கு நன்மையை கொடுப்பதாகவே குறிப்பிடுகிறார். இருப்பினும், உடனடியாக அதை அதிகரிக்கக்கூடாது என்பதே அவரது கருத்தாக இருக்கிறது.

    English Summary

    Chief Economic Adviser V. Anantha Nageswaran has suggested considering E10 petrol for older two-wheelers(E20 பெட்ரோல் தொடர்பாக எழும் விவாதம்): E20 Petrol Debate is now heating up.