தேர்தல் ஆணையர்களுக்கே தெரியாமல்.. கேஸ் போட்ட அந்த சக்தி யார்? ECIல் தோண்ட தோண்ட பூதம் வருதே!

  • டெல்லி: இந்திய ஜனநாயகத்தின் முதுகெலும்பாகக் கருதப்படும் இந்தியத் தேர்தல் ஆணையம் (ECI), முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஒரு மிகப்பெரிய உள்நாட்டு மோதலில் சிக்கியுள்ளது. தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் எடுத்த முக்கிய முடிவுகளுக்கு எதிராக, ஆணையத்தின் மற்ற இரண்டு தேர்தல் ஆணையர்களான சுக்பீர் சிங் சாந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோர் கடந்த 10 மாதங்களில் 14 முறை எழுத்துப்பூர்வமாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

    Advertisement

    இதில் மிக முக்கியமாக, மேற்கு வங்கத்தில் தகுதியான 16 லட்சம் வாக்காளர்களைப் பட்டியலில் இருந்து நீக்குவதற்காகத் தேர்தல் ஆணையத்தின் பெயரிலேயே மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. "இதற்கு அனுமதி கொடுத்தது யார்? ஆணையத்தின் பெயரில் இதைச் செய்தது யார்?" என்று தேர்தல் ஆணையர் சாந்துவே அதிகாரிகளிடம் எழுத்துப்பூர்வமாகக் கேள்வி எழுப்பியுள்ளது நாடு முழுவதும் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.

    Advertisement

    தேர்தல் ஆணையத்தில் என்ன பிரச்சனை?

    இந்தியத் தேர்தல் ஆணையம் என்பது மூன்று பேர் கொண்ட ஒரு குழு. தலைமைத் தேர்தல் ஆணையருடன் சேர்ந்து மேலும் இரண்டு தேர்தல் ஆணையர்கள் இருப்பார்கள். சட்டம் மற்றும் மரபுகளின்படி, வாக்காளர் பட்டியல் திருத்தம் போன்ற மிக முக்கியமான கொள்கை முடிவுகள் அனைவரின் ஒப்புதலுடனும் எடுக்கப்பட வேண்டும். தலைமை தேர்தல் ஆணையர் ஒன்றும் மற்ற இரண்டு ஆணையர்களை விட பவர்புல் நபர் கிடையாது.

    ஆனால், ஆணையர்கள் சாந்து மற்றும் ஜோஷி தங்களுக்குத் தெரியாமலேயே பல முக்கிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளனர். வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணி (SIR), புதிய வாக்காளர் பதிவுக்கான படிவம் 6-ல் மாற்றங்கள் செய்தது, மற்றும் வாக்காளர் தரவுத்தளத்தின் கட்டுப்பாட்டை டெல்லி அதிகாரிகள் மட்டுமே வைத்திருப்பது எனப் பல விவகாரங்களில் தங்களின் ஆட்சேபனையை அவர்கள் பதிவு செய்துள்ளனர்.

    Advertisement

    மேற்கு வங்கம்: உச்ச நீதிமன்றம் வரை சென்ற சர்ச்சை

    இந்த விவகாரத்தில் உச்சக்கட்ட சர்ச்சை வெடித்தது மேற்கு வங்க மாநிலத்தில்தான்.

    மேற்கு வங்கத்தில் உள்ள 294 சட்டமன்றத் தொகுதிகளில், தேர்தல் ஆணையம் மேற்கொண்ட வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியில் (SIR) லட்சக்கணக்கான வாக்காளர் பெயர்கள் நீக்கப்பட்டன. குறிப்பாக, 49 தொகுதிகளில் நீக்கப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை, அந்தத் தொகுதிகளில் வேட்பாளர்கள் வெற்றி பெற்ற வாக்கு வித்தியாசத்தை விட அதிகமாக இருந்தது. அதாவது, வாக்காளர் நீக்கம் தேர்தல் முடிவையே மாற்றும் அளவுக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியது.

    வாக்காளர்கள் நீக்கப்பட்ட முறையில் முறைகேடு இருப்பதாகக் கூறி வழக்கு உச்ச நீதிமன்றத்திற்குச் சென்றது. வழக்கின் தீவிரத்தை உணர்ந்த உச்ச நீதிமன்றம், இந்த விவகாரத்தைத் தேர்தல் ஆணையத்திடமிருந்து தற்காலிகமாக விலக்கியது. பிப்ரவரி 2026-ல், சுமார் 60 லட்சம் வாக்காளர்களின் சந்தேகப் பட்டியலை ஆய்வு செய்யும் பணியை மாவட்ட நீதித்துறை அதிகாரிகளிடம் உச்ச நீதிமன்றம் ஒப்படைத்தது.

    Advertisement

    அதன் பின்னர், பல்வேறு விசாரணைகளுக்குப் பிறகு சுமார் 27 லட்சம் பெயர்களை ஆணையம் நீக்கியது. நீக்கப்பட்ட வாக்காளர்கள் தங்கள் உரிமையைப் பெறவும் முறையிடவும் ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதிகள் கொண்ட சிறப்புத் தீர்ப்பாயங்களை உச்ச நீதிமன்றம் அமைத்தது.

    தீர்ப்பாயத்தில் குவிந்த 38 லட்சம் மனுக்கள்

    சமீபத்தில் உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் ஒரு புள்ளிவிவரத்தைத் தாக்கல் செய்தது. அதன்படி, தீர்ப்பாயங்களில் மொத்தம் 38.31 லட்சம் மேல்முறையீட்டு மனுக்கள் நிலுவையில் உள்ளன.

    இந்த 38 லட்சம் மனுக்களுக்குப் பின்னால் இரண்டு பிரிவுகள் உள்ளன:

    1. 22.21 லட்சம் மனுக்கள்: பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்பட்ட பொதுமக்கள், "நாங்கள் உண்மையான வாக்காளர்கள், எங்கள் பெயரை மீண்டும் சேர்க்க வேண்டும்" என்று கோரி தாக்கல் செய்த மனுக்கள்.

    Advertisement

    2. 16.10 லட்சம் மனுக்கள்: தகுதியானவர்கள் என்று நீதித்துறை அதிகாரிகளால் வாக்காளர் பட்டியலில் மீண்டும் சேர்க்கப்பட்ட வாக்காளர்களுக்கு எதிராக, அவர்களைப் பட்டியலில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள்.

    வெளிவந்த அதிர்ச்சி: 16 லட்சம் மனுக்களைப் போட்டது யார்?

    நீதித்துறை அதிகாரிகளால் ஆய்வு செய்யப்பட்டு, "இவர்கள் தகுதியான வாக்காளர்கள்தான்" என்று பட்டியலில் சேர்க்கப்பட்ட 16.10 லட்சம் பேருக்கு எதிராக மனு போட்டது ஏதேனும் அரசியல் கட்சியா? இல்லை.

    அந்த மனுக்களைத் தாக்கல் செய்ததே தேர்தல் ஆணையம்தான்!

    ஒரு அரசு அமைப்பான தேர்தல் ஆணையம், நீதிமன்ற அதிகாரிகளால் சேர்க்கப்பட்ட வாக்காளர்களுக்கு எதிராகவே மேல்முறையீடு செய்திருப்பது மிகப்பெரிய சந்தேகத்தை எழுப்பியது. தேர்தல் ஆணையத்தின் சார்பாக இந்த மனுக்களைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டது யார்? என்ற கேள்வி எழுந்தது.

    Advertisement

    ஆணையர் சாந்துவின் பகிரங்கக் கடிதம்

    இந்த விவகாரம் குறித்துத் தேர்தல் ஆணையர் சுக்பீர் சிங் சாந்துவுக்குத் தெரியவந்ததும், அவர் கடும் அதிர்ச்சியடைந்தார். கடந்த ஆகஸ்ட் மாதம் அவர் ஆணைய அதிகாரிகளுக்கு ஒரு காரசாரமான கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்தில் அவர் எழுப்பிய கேள்விகள்:

    "நீதித்துறை அதிகாரிகளால் சேர்க்கப்பட்ட வாக்காளர்களுக்கு எதிராக, தேர்தல் ஆணையத்தின் சார்பில் இந்த மேல்முறையீடுகளைத் தாக்கல் செய்ய யாருக்கு அதிகாரம் வழங்கப்பட்டது?"

    "உண்மையில் ஆணையத்தின் பெயரால் இவற்றைத் தாக்கல் செய்தது யார்?"

    "இப்படி ஒரு மேல்முறையீடு செய்யப்படுகிறது என்ற தகவல் எனக்கோ, சக ஆணையர் விவேக் ஜோஷிக்கோ அல்லது மேற்கு வங்க மாநில தலைமைத் தேர்தல் அதிகாரிக்கோ (CEO) கூட தெரிவிக்கப்படவில்லை."

    தேர்தல் ஆணையத்தின் மூன்று முக்கியப் பொறுப்பாளர்களில் இருவருக்கே தெரியாமல், மாநிலத் தேர்தல் அதிகாரிக்கே தெரியாமல், டெல்லியில் இருந்து தேர்தல் ஆணையத்தின் பெயரில் 16 லட்சம் வாக்காளர்களுக்கு எதிராக மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்பது சாந்துவின் கடிதம் மூலம் அம்பலமானது.

    புதிய படிவம் 6 விவகாரம் மற்றும் கணினி கட்டுப்பாடுகள்

    மேற்கு வங்க விவகாரம் மட்டுமல்லாமல், மேலும் பல புகார்களை இரண்டு ஆணையர்களும் எழுப்பியுள்ளனர்:

    படிவம் 6 சர்ச்சை: புதிதாக வாக்காளர் அட்டைக்கு விண்ணப்பிக்கும் படிவம் 6-ல் திடீரென சில புதிய நிபந்தனைகள் சேர்க்கப்பட்டன. விண்ணப்பதாரர்கள் தங்களது பெற்றோரோ அல்லது தாத்தா-பாட்டியோ பழைய வாக்காளர் பட்டியலில் இருந்தார்களா என்ற விவரத்தைக் குறிப்பிட வேண்டும் என்று கொண்டுவரப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஆணையர்கள், விதிகளில் அரசு அதிகாரப்பூர்வ திருத்தம் செய்யாமல் இப்படிச் செய்வது சட்டவிரோதம் என்று கூறினர்.

    டெல்லி அதிகாரிகளின் கட்டுப்பாடு: மாவட்ட அளவில் உள்ள வாக்காளர் பதிவு அதிகாரிகளிடம் (ERO) இருந்த வாக்காளர் பட்டியல் மாற்றும் உரிமைகள் குறைக்கப்பட்டு, டெல்லியில் உள்ள தகவல் தொழில்நுட்பப் பிரிவு மட்டுமே அதை முழுமையாகக் கையாளும் வகையில் மாற்றப்பட்டதாக ஜோஷியும் சாந்துவும் குற்றம் சாட்டினர். இது தொடர்பாக மத்திய அமைச்சரவைச் செயலாளருக்கும் கடிதம் எழுதினர்.

    தகுதியான லட்சக்கணக்கான வாக்காளர்களை நீக்குவதற்குத் தேர்தல் ஆணையத்தின் பெயரில் யாருக்குத் தெரியாமல் மேல்முறையீடு செய்யப்பட்டது என்ற கேள்விக்கு ஆணையத்திடம் இருந்து இதுவரை தெளிவான வெளிப்படையான பதில் வரவில்லை. தேர்தல் ஆணையத்தின் நேர்மை மற்றும் சுதந்திரமான செயல்பாடு குறித்து நாடு தழுவிய அளவில் தற்போது கடுமையான விவாதங்கள் தொடங்கியுள்ளன.

    English Summary

    ECI Internal Rift Exposed: How 16 Lakh Voters Faced Secret Appeals in West Bengal