டெல்லி: இந்திய தேர்தல் ஆணையத்துக்கு எதிராக நாளை டெல்லியில் களமிறங்க உள்ளதாக கரப்பான்பூச்சி ஜனதா கட்சி அறிவித்துள்ளது. 'சார்' எனும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையின்போது தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், 2 தேர்தல் ஆணையர்களிடம் கேட்காமல் சர்வாதிகாரியாக செயல்பட்டது சர்ச்சையாகி உள்ள நிலையில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி இந்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. இதனால் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி மீண்டும் போராட்டத்தை கையில் எடுக்கிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்திய தேர்தல் ஆணையம் என்பது தலைமை தேர்தல் ஆணையர், 2 தேர்தல் ஆணையர்களுடன் செயல்பட்டு வருகிறது. தற்போது தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமார் உள்ளார். தேர்தல் ஆணையர்களாக தேர்தல் ஆணையர்களாக சுக்பீர் சிங் சந்து, விவேக் ஜோஷி உள்ளிட்டோர் உள்ளனர். நம் நாட்டை பொறுத்தவரை தலைமை தேர்தல் ஆணையர் இருந்தாலும் கூட நிர்வாக ரீதியாக மட்டுமே தேர்தல் ஆணையத்திற்கு தலைமை வகிப்பார். ஆனால் தேர்தல் ஆணையம் சார்பில் முடிவெடுக்க வேண்டும் என்றால் தலைமை தேர்தல் ஆணையர் கண்டிப்பாக இரண்டு தேர்தல் ஆணையர்களுடன் கலந்து ஆலோசிக்க வேண்டும். ஏதேனும் ஒரு விஷயத்தில் முரண்பாடுகள் ஏற்பட்டால் பெரும்பான்மை என்ற அடிப்படையில் இறுதி முடிவு எடுக்க வேண்டும். ஆனால் நம் நாட்டில் மேற்கொள்ளப்பட்ட 'சார்' எனும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தன்னிச்சையாக செயல்பட்டு வந்துள்ளார். 2 தேர்தல் ஆணையர்களின் பரிந்துகளையும், ஆலோசனைகளையும் அவர் புறந்தள்ளி உள்ளார். இது தற்போது அம்பலமாகி உள்ளது. அதாவது 'சார்' பெயர் சேர்ப்பு படிவத்தில் ஒருவரின் தந்தை, பாட்டி, தாத்தாவின் பெயர்கள் முந்தைய வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தில் இடம்பெற்றதா? இல்லையா? என்பது பற்றிய கேள்விகள் கேட்கப்பட்டன. இதற்கு சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும். ஆனால் திருத்தம் செய்யாமல் இப்படி செய்வது சட்டவிரோதமானது என்று இரு ஆணையர்கள் கூறிய நிலையில் ஞானேஷ் குமார் கேட்கவில்லை. இதுபோல் கடந்த 10 மாதங்களில் இரு ஆணையர்களும் மொத்தம் 14 கடிதங்களில் தங்களின் ஆட்சேபனைகளை தெரிவித்தும் ஞானேஷ் குமார் கண்டுக்கொள்ளவில்லை. இந்த விவகாரம் தான் தற்போது சர்ச்சையாகி உள்ளது. தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் போர்க்கொடி உயர்த்தி உள்ளன. இப்படியான சூழலில் தான் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சார்பில் முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் சவ்ரவ் தாஸ் இன்று தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளதாவது: ''முக்கிய அறிவிப்பு.. நாளை முதல் எங்களின் முந்தைய வாக்குறுதிகள் அனைத்தையும் கைவிட்டு டெல்லியில் பெரிய பத்திரிகையாளர் சந்திப்பை நடத்த உள்ளோம். தேர்தல் ஆணையத்தை சரிசெய்ய வேண்டும்'' என்று கூறியுள்ளார். கரப்பான்பூச்சி கட்சியின் இந்த திடீர் அறிவிப்பு தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதோடு அதிக கவனம் பெற்றுள்ளது. ஏனென்றால் நீட் வினாத்தாள் கசிவுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் சமீபத்தில் ராஜினாமா செய்தார். இவரை ராஜினாமா செய்ய வைத்தது கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினரின் போராட்டம் தான். தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் டெல்லி ஜந்தர் மந்தரில் உண்ணாவிரதம் போராட்டம் நடத்தினர். பிறகு நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி சென்றபோது தடியடி நடத்தப்பட்டது. கண்ணீர் புகை குண்டு வீசப்பட்டது. இருப்பினும் அவர்கள் போராட்டத்தை கைவிடாமல் தொடர்ந்தனர். போராட்டத்தை கைவிடும்படி மத்திய அரசு பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தால் மட்டுமே கலைந்து செல்வோம் என்று உறுதியாக கூறினர். இதனால் வேறு வழியின்றி மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தார். இந்நிலையில் தான் தற்போது இந்திய தேர்தல் ஆணையத்தை சரிசெய்ய வேண்டும் என்று கூறி கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் நாளை பிரஸ்மீட் அளிப்பதாக கூறியிருப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரத்தில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை எதிர்த்து ஏதேனும் போராட்டம் அறிவிக்கலாம் என்பதால் மீண்டும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் மீதான மக்களின் பார்வை அதிகரிக்க தொடங்கி உள்ளது.