2023 சட்டம் என்ன சொல்கிறது? தலைமை தேர்தல் ஆணையர் மட்டும் அனைத்து சர்ச்சைகளில் சிக்குவது ஏன்?

  • டெல்லி: தேர்தல் ஆணையத்துக்குள் உண்மையில் என்ன நடந்தது? 2023ம் ஆண்டு சட்டம் தேர்தல் ஆணையத்தின் முடிவுகள் குறித்து என்ன சொல்கிறது? தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மட்டும் இந்த சர்ச்சையில் சிக்குகிறார்? வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தமான SIR ஏன் இந்த விவகாரத்தின் முக்கியப் புள்ளியாக மாறியுள்ளது? இவை தான் கடந்த 2 நாட்களாக மக்களிடம் எழுந்துள்ள முக்கிய கேள்விகள் இதற்கான பதில்களை நாம் பார்க்கலாம்!

    Advertisement

    தேர்தல் ஆணையத்தில் உள்ள ஆணையர்களுக்கு இடையே கடந்த ஓராண்டாக கருத்து வேறுபாடுகள் நிலவியதாக ஆங்கில ஊடகமான இந்தியன் எக்ஸ்பிரஸ் நேற்று செய்தி வெளியிட்டிருந்தது. அதில் தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சாந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோர் கடந்த 10 மாதங்களில் மட்டும் தேர்தல் பட்டியல் தொடர்பாக 14 முறை எழுத்துப்பூர்வமாக ஆட்சேபனை தெரிவித்தாக கூறப்பட்டு இருந்தது.

    Advertisement

    புதிய வாக்காளர்களை சேர்ப்பது, பெயர்களை நீக்குவது, மீண்டும் சேர்ப்பது, ஃபார்ம் 6 மற்றும் வாக்காளர் டேட்டாவை நிர்வகிப்பது உள்ளிட்ட விவகாரங்கள் இதில் இடம்பெற்றதாக அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.

    2023 சட்டம் என்ன சொல்கிறது?

    Chief Election Commissioner and Other Election Commissioners Act, 2023ன் 18-வது பிரிவே இதில் முக்கிய பேசுபொருளானது. இந்த சட்டம் 2023 டிசம்பர் 28ம் தேதி இயற்றப்பட்டது. அதன்படி தேர்தல் ஆணையத்தின் பணிகள் முடிந்தவரை ஒருமித்த கருத்துடன் மேற்கொள்ளப்பட வேண்டும். தேர்தல் ஆணையர்களிடையே ஒரு விவகாரத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டால், அந்த விவகாரம் பெரும்பான்மை கருத்தின் அடிப்படையில் முடிவு செய்யப்பட வேண்டும். ஆணையத்தின் பணிகளை எப்படி பிரிப்பது, அதன் நடைமுறையை எவ்வாறு நிர்ணயிப்பது என்பதும் ஆணையத்தின் ஒருமித்த முடிவின் அடிப்படையிலேயே இருக்க வேண்டும் என்பதே அந்த சட்டம்!

    Advertisement

    இதுதான் தற்போதைய விவாதத்தில் முக்கியமானதாக மாறியுள்ளது. சாந்து மற்றும் ஜோஷி பல்வேறு விஷயங்களில் ஆட்சேபனைகளை பதிவு செய்ததாக கூறப்படுகிறது. இருவரும் சில விஷயங்களில் ஒருங்கிணைந்து அதிருப்தி பதிவு செய்துள்ளனர். 2023 சட்டப்படி பார்த்தால் பெரும்பான்மை அடிப்படையிலேயே முடிவுகள் எடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், மாறாக தலைமை தேர்தல் ஆணையர் முடிவுகளை எடுத்துள்ளார். இதுவே முதல் சர்ச்சை!

    எஸ்ஐஆர்

    இதன் மற்றொரு முக்கியப் பகுதி Special Intensive Revision எனப்படும் எஸ்ஐஆர் ஆகும். பீகாரில் 2025 ஜூன் மாதம் தொடங்கிய இந்த வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கை பின்னர் பல மாநிலங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டது. 30 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 13 கோடிக்கும் அதிகமான பெயர்கள் வரைவு வாக்காளர் பட்டியல்களில் இருந்து நீக்கப்பட்டிருந்தன. வாக்களிக்கும் உரிமையையே நீக்கும் இந்த நடவடிக்கை தொடர்பாகவும் சில விஷயங்களில் தேர்தல் ஆணையர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். அதுவும் பதிவாகி இருந்தது.

    Advertisement

    வாக்காளர்கள்

    புதிய வாக்காளராக பதிவு செய்ய பயன்படுத்தப்படும் ஃபார்ம் 6ல் SIR தொடர்பான புதிய கேள்வி சேர்க்கப்பட்டதற்கும் எதிர்ப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையர் விவேக் ஜோஷி விதிகளில் திருத்தம் தேவைப்படும் எனக் குறிப்பிட்டதாகவும், சுக்பீர் சிங் சாந்துவும் அதற்கு உடன்பட்டதாகவும் கூறப்படுகிறது. இருவரும் கேள்வி எழுப்பிய பிறகும் அந்த நடவடிக்கை தொடர்ந்தது எப்படி என்பதே அடுத்த கேள்வி!

    அதேபோல தேர்தல் ஆணையம் சார்பில் வெளியிடப்படும் முக்கியமான அறிவிப்புகள் மூன்று தேர்தல் ஆணையர்களின் கவனத்திற்கு உட்பட்டே வெளியிடப்படும். ஆனால், சில அறிவிப்புகள் தங்களுக்கு தெரியாமலேயே வந்ததாகவும் அவர்கள் குறிப்பிட்டு இருந்தனர். இவை கேள்விகள், மர்மங்கள் அனைத்துமே தலைமை தேர்தல் ஆணையரை நோக்கியே இருக்கிறது.

    Advertisement

    ஞானேஷ் குமார்

    இதன் காரணமாகவே தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை சுற்றி இந்த விவகாரம் தீவிரமடைந்துள்ளது. சாந்து மற்றும் ஜோஷி எழுப்பிய ஆட்சேபனைகளில் சில ஞானேஷ் குமாருக்கும் அனுப்பப்பட்டிருந்தன. வாக்காளர் சேர்ப்பு, பெயர் நீக்கம் தேர்தல் பட்டியலை நிர்வகிப்பது ஆகியவை தொடர்பாக அவர்கள் கேள்வி எழுப்பியதாக அந்த அறிக்கை கூறுகிறது.

    இதை வைத்தே காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு குறித்து கேள்வி எழுப்பியுள்ளன. ஞானேஷ் குமாரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்றும் சில எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.

    English Summary

    Reports of differences within the Election Commission have raised questions over voter-list revision(தேர்தல் ஆணையத்தில் வெடித்த மிக பெரிய குழப்பம்): Election Commission issue latest news in tamil.