டெல்லி: எவ்வளவுதான் டென்ஷன் இருந்தாலும், இந்த ஒரு பாட்டை கேட்டால் போதும்.. தூக்க மாத்திரை போட்டது மாதிரி தூக்கம் வரும். அப்படிப்பட்ட பாடல்தான் 'என் இனிய பொன் நிலாவே'! ஆனால் இன்று இந்த பாடலால் இளையராஜாவுக்கு தூக்கம் தொலைந்திருக்கிறது.
இந்த பாடல் மீதான உரிமை குறித்து பிரபல இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜாவுக்கும், சரிகம நிறுவனத்திற்கும் இடையில் பஞ்சாயத்து போய்க்கொண்டிருந்த நிலையில், இன்று இந்த வழக்கு குறித்து உச்சநீதிமன்றம் முக்கிய தீர்ப்பை கொடுத்திருக்கிறது.
மூடுபனி திரைப்படத்தில் இடம்பெற்ற இந்த பாடலின் மாற்றி அமைக்கப்பட்ட புதிய பதிப்பை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் ஒரு திரைப்படத்தில் பயன்படுத்தியது. இதற்கு தங்களுக்கு இளையராஜா ஒப்பந்தம் மூலம் உரிமம் வழங்கியிருப்பதாக வேல்ஸ் நிறுவனம் கூறியது. ஆனால், மூடுபனி திரைப்படத்தின் தயாரிப்பாளரிடமிருந்து இப்பாடலின் ஒட்டுமொத்த உரிமைகளையும் தாங்கள் பெற்றுள்ளதால், தங்களுக்குதான் காப்புரிமை சொந்தம் என்று சரிகம நிறுவனம் வழக்கு தொடர்ந்து. இந்த வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணையில் இரு தரப்பினரும் தங்கள் பக்கம் இருக்கும் நியாயத்தை முன் வைத்திருந்தனர். வாதங்களை கேட்ட இரு நீதிபதிகளை கொண்ட உயர்நீதிமன்ற அமர்வு, கடந்த மே மாதம் இளையராஜாவின் மேல்முறையீட்டை தள்ளுபடி செய்திருந்தது. அதில், இளையராஜாவின் காப்புரிமை என்பது அந்த பாடலின் இசைக்கு மட்டுமே கட்டுப்பட்டது என்றும், பாடலின் வரிகளுக்கோ அல்லது சவுண்ட் ரெக்கார்டிங்கிற்கோ பொருந்தாது என்றும் தீர்ப்பளித்திருந்தது. இது இளையராஜா தரப்புக்கு கடும் பின்னடைவை ஏற்படுத்தியது. எனவே இளையராஜா இது குறித்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தார். இளையராஜா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சி.ஆர்யமா சுந்தரம், "இந்த தீர்ப்பின் காரணமாக இளையராஜாவுக்கு எதிராக மேலும் 3 புதிய வழக்குகள் தொடரப்பட்டிருக்கின்றன என்றும், சத்தத்தை நாங்கள் கேட்கவில்லை.. பாடலின் இசையை மாற்றி அமைக்கும் உரிமை இளையராஜாவுக்கே உள்ளது என்றுதான் கேட்கிறோம்" என தனது வாதங்களை முன் வைத்திருந்தார். மறுபுறம் சரிகம நிறுவனம் சார்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி ஆஜராகியிருந்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் ஜே.பி.பார்திவாலா மற்றும் கே.வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்து முக்கிய உத்தரவை பிறப்பித்தினர். அதாவது டெல்லி உயர்நீதிமன்றம் பிறப்பித்த தடையாணையில் எந்த சட்டப் பிழையும் இல்லை என்று கூறி, அதில் தலையிட மறுத்துவிட்டனர். இளையராஜாவின் மனுவையும் தள்ளுபடி செய்தனர். இருப்பினும் இளையராஜா தரப்பு வழக்கறிஞரின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் டெல்லி உயர்நீதிமன்றம் அளித்துள்ள கருத்துக்கள் அனைத்தும் இந்த வழக்கின் ஆரம்பகட்டப் பார்வைக்காக மட்டுமே என்றும் இதை பிற வழக்குகளுக்கு ஒரு முன் மாதிரியாகவோ அல்லது இறுதி தீர்ப்பாகவோ எடுத்துக்கொள்ளக்கூடாது என்றும் தெளிவுப்படுத்தியுள்ளனர். உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவு இளையராஜா தரப்புக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.