PF பணத்தை இப்போது எடுக்க முடியாது.. ஜூலை 1 வரை காத்திருக்க வேண்டும்.. EPFO முக்கிய அறிவிப்பு!

  • டெல்லி: வருங்கால வைப்பு நிதி (பிஎஃப்) கணக்கில் இருந்து பணம் எடுக்க திட்டமிட்டிருப்பவர்கள் இன்னும் இரண்டு நாட்கள் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு தனது இணையதளத்தில் முக்கிய தொழில்நுட்ப மேம்பாட்டு பணிகளை மேற்கொண்டு வருவதால், ஜூலை 1-ம் தேதி வரை பல்வேறு ஆன்லைன் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக இபிஎஃப்ஓ கூறியுள்ளது.

    Advertisement

    பிஎஃப் உறுப்பினர்கள் அதிகம் பயன்படுத்தும் சேவைகளான, பிஎஃப் தொகையை ஆன்லைனில் பெற விண்ணப்பிப்பது, பாஸ்புக் பதிவிறக்கம் செய்வது, கணக்கில் உள்ள இருப்புத் தொகையை சரிபார்ப்பது உள்ளிட்ட வசதிகள் தற்போது செயல்படவில்லை.

    Advertisement

    இதனால், அவசரமாக பணம் எடுக்க நினைத்திருந்த பலரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர். இதுகுறித்து தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு வெளியிட்டுள்ள விளக்கத்தில், திட்டமிட்ட அட்டவணையின்படி டிஜிட்டல் கட்டமைப்பை முழுமையாக மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளது.

    இபிஎஃப்ஓ

    உறுப்பினர்களுக்கு எதிர்காலத்தில் இன்னும் வேகமான, பாதுகாப்பான மற்றும் எளிதான சேவைகளை வழங்கும் நோக்கில்தான் இந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்படுவதாகவும் கூறியுள்ளது. இந்த மேம்பாட்டு பணியின் ஒரு பகுதியாக, தற்போது பயன்படுத்தப்படும் தரவுத்தளம் முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்டு புதிய மென்பொருள் அமைப்புடன் இணைக்கப்படுகிறது. அதேபோல், உறுப்பினர்கள் பயன்படுத்தும் இணைய சேவைகளிலும் பல புதிய வசதிகள் சேர்க்கப்பட உள்ளன.

    Advertisement

    பிஎஃப்

    இதனால், இணையதளத்தின் செயல்திறன் அதிகரிப்பதுடன், சேவைகளை விரைவாக வழங்கவும் முடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த தொழில்நுட்பப் பணிகள் காரணமாக, இணையதளத்தில் பல சேவைகள் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, பிஎஃப் தொகையை பெறுவதற்கான கோரிக்கை விண்ணப்பத்தை சமர்ப்பிக்க முடியாது. அதேபோல், பாஸ்புக் பதிவிறக்கம் செய்வது, கணக்கு இருப்பை பார்ப்பது உள்ளிட்ட முக்கிய வசதிகளும் தற்போது கிடைக்கவில்லை.

    ஜூலை 1

    இதனால், பிஎஃப் பணம் தேவைப்படுபவர்கள் சில நாட்கள் பொறுமையாக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த பணிகள் கடந்த ஜூன் 26-ம் தேதி தொடங்கப்பட்டதாகவும், ஜூலை 1-ம் தேதிக்குள் முழுமையாக நிறைவடையும் என்றும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும், ஜூலை 1 முதல் அனைத்து ஆன்லைன் உறுப்பினர் சேவைகளும் வழக்கம்போல் மீண்டும் செயல்படத் தொடங்கும் என்றும், சேவைகளில் எந்தவித தடையும் இருக்காது என்றும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    இணையதள சேவை

    இந்த மேம்படுத்தல் பணிகள் நிறைவடைந்த பிறகு, இணையதளத்தின் வேகம் அதிகரிப்பதுடன், உறுப்பினர்களின் தகவல்கள் மேலும் பாதுகாப்பாக இருக்கும். தொழில்நுட்ப கோளாறுகள் குறைந்து, பிஎஃப் தொடர்பான சேவைகளை விரைவாக பயன்படுத்தும் வசதியும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, பிஎஃப் பணம் எடுப்பது அல்லது கணக்கு தொடர்பான முக்கிய பணிகளை செய்ய திட்டமிட்டிருப்பவர்கள், ஜூலை 1-ம் தேதி வரை காத்திருந்து அதன் பிறகு இணையதள சேவைகளை பயன்படுத்துமாறு தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.

    English Summary

    EPFO has temporarily suspended PF withdrawal and passbook services until July 1 due to major system upgrade and maintenance.