அந்நிய செலாவணி சேமிக்க எத்தனால்! இப்போ சர்க்கரைக்காக மீண்டும் செலவு! இந்தியாவுக்கு வந்த புது சிக்கல்

  • டெல்லி: பெட்ரோலில் எத்தனால் கலப்பதன் மூலம் கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைத்து அந்நிய செலாவணியை சேமிக்க இந்தியா முயன்றது.. ஆனால், அது எதிர்பாராத மற்றொரு சிக்கலை ஏற்படுத்திவிட்டது. அதாவது எத்தனால் உற்பத்திக்கு அதிகளவில் கரும்பை திருப்பிவிட்டதால் உள்நாட்டில் சர்க்கரை உற்பத்தி பாதிக்கப்பட்டு, அதன் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

    Advertisement

    ஒருபுறம் E20 இலக்கை நோக்கி இந்தியா நகர்ந்து கொண்டிருக்கிறது. 2030க்குள் பெட்ரோலில் எத்தனால் கலப்பை 20%ஆக அதிகரிக்க வேண்டும் என்ற இலக்கை இந்தியா வைத்திருந்தது. ஆனால், 5 ஆண்டுகளுக்கு முன்பே 2025ம் ஆண்டிலேயே இந்தியா இந்த இலக்கை எட்டியது. இது அந்நிய செலாவணியை கட்டுக்குள் வைத்திருக்க முக்கியம் என சொல்லப்பட்டது.

    Advertisement

    E10 பெட்ரோல்

    இதற்கு மக்களிடையே கடும் எதிர்ப்புகள் கிளம்பின. குறிப்பாக பழைய வாகனங்களுக்கு E20 பெட்ரோல் செட் ஆகாது என்பதால் E10 பெட்ரோலை வழங்க வேண்டும் என ஒரு தரப்பினர் கூறி வந்தனர். இது தொடர்பாக போராட்டங்களும் நடைபெற்றது. இருப்பினும், மத்திய அரசு E20 பெட்ரோல் விவகாரத்தில் தனது நிலைப்பாட்டை மாற்றவே இல்லை. E20 பெட்ரோல் விவகாரத்தில் உறுதியாக இருந்தது.

    ஆனால், இந்த E20 பெட்ரோலால் வேறு விதமான பிரச்சினை வந்துவிட்டது. அதாவது சர்க்கரை விலை தாறுமாறாக உயர்ந்துவிட்டது. எத்தனால் உற்பத்திக்கு கரும்பை அதிகம் திருப்பிவிட்டதே இதற்கு காரணம் என சொல்லப்படுகிறது. சர்க்கரை விலை உயர்வை கட்டுப்படுத்த முடியாமல், வெளிநாடுகளில் இருந்து சர்க்கரையை இறக்குமதி செய்வது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. அந்தளவுக்கு நிலைமை மோசமாகிவிட்டது. அதாவது, எத்தனால் மூலம் சேமிக்க நினைத்த வெளிநாட்டு செலாவணியின் ஒரு பகுதியை, இப்போது சர்க்கரை இறக்குமதிக்காக செலவிட வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

    Advertisement

    சர்க்கரை விலை

    மகாராஷ்டிராவின் கோலாப்பூரில் மொத்த சர்க்கரை விலை ஆகஸ்ட் தொடக்கத்தில் இருந்து கிட்டத்தட்ட 20% உயர்ந்து, 100 கிலோவுக்கு ரூ.5,350 என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது. ஆகஸ்ட் 18ஆம் தேதி நாடு முழுவதும் சராசரி சில்லறை விலை கிலோ ரூ.52 ஆக இருந்தது. சில மாநிலங்களில் விலை இதைவிட அதிகமாக உள்ளது. பஞ்சாபில் கிலோ சர்க்கரை சுமார் ரூ.65 வரை சென்றுள்ளது. மும்பை, போபால் உள்ளிட்ட சில சந்தைகளில் ரூ.58 முதல் ரூ.63 வரை விற்பனையாகிறது.

    அடுத்து விநாயகர் சதுர்த்தி, தசரா, தீபாவளி என அடுத்தடுத்து பண்டிகைகள் வருவதால் சர்க்கரைக்கான தேவை மேலும் அதிகரிக்கும். இதனால் மேலும் விலை உயரும் என்றும் இது பொதுமக்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

    Advertisement

    என்ன காரணம்

    சர்க்கரை விலை உயர்வின் முக்கிய காரணங்களில் ஒன்றாக கரும்பை எத்தனால் உற்பத்திக்கு அதிக அளவில் பயன்படுத்துவது. கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைத்து எரிபொருள் பாதுகாப்பை அதிகரிக்கும் நோக்கில் இந்தியா எத்தனால் உற்பத்தியை வேகமாக அதிகரித்து வருகிறது. இப்போது நாடு முழுவதும் 499 ஆலைகளின் மூலம் ஆண்டுக்கு சுமார் 1,822 கோடி லிட்டர் எத்தனால் உற்பத்தி செய்யும் திறன் இந்தியாவிடம் இருக்கிறது.

    எத்தனால் உற்பத்திக்கான மூலப்பொருட்களில் சுமார் 30-35% கரும்பிலிருந்து கிடைக்கிறது. கரும்பு சர்க்கரையாக மாறுவதற்கு பதிலாக எத்தனால் உற்பத்திக்கு திருப்பப்படும்போது, சந்தைக்கு வரும் சர்க்கரையின் அளவு குறைகிறது. ஏற்கனவே எத்தனால் உற்பத்திக்கு கரும்பு போவது ஒரு பக்கம் என்றால்.. 2025-26ல் உத்தர பிரதேசத்தில் கரும்பை நோய் தாக்கியது. இதனால் கரும்பின் உற்பத்தி மேலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதுவும் சர்க்கரை உற்பத்தியை பாதிப்பதாக வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள்.

    Advertisement

    மாறிய கொள்கை

    இதையடுத்து மத்திய அரசு தனது சர்க்கரை கொள்கை மாற்றிவிட்டது. முன்பு 2025-26 சர்க்கரை பருவத்தில் சுமார் 20 லட்சம் டன் ஏற்றுமதிக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. பின்னர், உள்நாட்டு விநியோகத்தை பாதுகாக்க மே 13 முதல் செப்டம்பர் 30 வரை சர்க்கரை ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டது. ஆனாலும் விலை தொடர்ந்து உயர்ந்ததால், தற்போது சர்க்கரை இறக்குமதி செய்யவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா பெரிய அளவில் வெளிநாட்டு சர்க்கரையை வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது..

    எத்தனால் vs சர்க்கரை

    இதுதான் தற்போது இருக்கும் மிக பெரிய கேள்வி. எத்தனால் கலப்பதன் மூலம் பெட்ரோல் இறக்குமதியை குறைத்து வெளிநாட்டு செலாவணியை சேமிக்கலாம். ஆனால் அதே நேரத்தில் கரும்பை எத்தனால் உற்பத்திக்கு அதிகமாக திருப்பினால் சர்க்கரை உற்பத்தி குறைந்து, விலை உயரும். இப்போது இதுதான் நடந்துள்ளது. இதனால் விலையை கட்டுப்படுத்த வெளிநாட்டில் இருந்து சர்க்கரையை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது. எரிபொருள் கொள்கை மூலம் சேமித்த வெளிநாட்டு செலாவணியின் ஒரு பகுதி மீண்டும் உணவு இறக்குமதிக்காக செலவிடும் நிலை ஏற்பட்டுள்ளது.

    இதனால் தான் இந்தியாவின் தலைமை பொருளாதார ஆலோசகர் வி. அனந்த நாகேஸ்வரன், உணவு தேவைக்கும் எரிபொருள் தேவைக்கும் இடையிலான இந்த சமநிலையை முழுமையாக கணக்கிடும் வரை பெட்ரோலில் எத்தனால் கலப்பை E20க்கு மேல் உயர்த்த வேண்டாம் என்று வலியுறுத்தியுள்ளார். மத்திய அரசும் தற்போது இறக்குமதி வரியை குறைப்பது மட்டுமின்றி, மொத்த வியாபாரிகள் வைத்திருக்கக்கூடிய சர்க்கரை கையிருப்புக்கு கட்டுப்பாடு விதிப்பது, எத்தனால் உற்பத்திக்கு திருப்பப்படும் கரும்பின் அளவை குறைத்து சர்க்கரை உற்பத்திக்கு முன்னுரிமை அளிப்பது உள்ளிட்ட வழிகளையும் பரிசீலித்து வருகிறது.

    Advertisement

    சிக்கல் மேல் சிக்கல்

    கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்க எத்தனால்.. எத்தனால் தயாரிக்க கரும்பு.. கரும்பு குறைந்ததால் சர்க்கரை விலை உயர்வு.. விலையை கட்டுப்படுத்த சர்க்கரையை இறக்குமதி செய்யும் நிலை என்ற நிலையில் இந்தியா தள்ளப்பட்டுள்ளது. இதுதான் இப்போது இந்தியாவுக்கு புதிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

    English Summary

    India's E20 ethanol blending push aimed at reducing crude oil imports and saving foreign exchange is facing a new challenge(E20 பிரச்சினை குறித்து மத்திய அரசு): Central govt's Ethanol E20 Push problem.