இனி நிறுத்த முடியாது.. தக்காளி, வெங்காயம், காய்கறி விலை உயர போகுது.. இடியை இறக்கும் அறிவிப்பு!

  • டெல்லி: சர்வதேச சந்தையில் எகிறி வரும் கச்சா எண்ணெய் விலை மற்றும் ஹார்முஸ் ஜலசந்தி முடக்கம் காரணமாக, இந்திய எண்ணெய் நிறுவனங்கள் கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் நான்காவது முறையாகப் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை அதிரடியாக உயர்த்தியுள்ளன. இந்த விலையேற்றம் என்பது காய்கறி, பழங்கள் தொடங்கி அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலையையும் உயர்த்தும் என்றே வல்லுநர்கள் எச்சரிக்கிறார்கள்.

    Advertisement

    அமெரிக்கா ஈரான் இடையே நேரடித் தாக்குதல் இல்லை என்றாலும் கூட இன்னும் முழுமையாகப் போர் முடியவில்லை. அமைதி ஒப்பந்தத்திற்கு இரு நாடுகளுமே ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் முழுமையான அமைதியும் திரும்பவில்லை. மேலும், ஹார்முஸிலும் கூட கப்பல் போக்குவரத்து இயல்பு நிலைக்குத் திரும்பவில்லை. இதனால் கச்சா எண்ணெய் விலை உச்சத்திற்குப் பறக்கிறது.

    Advertisement

    கச்சா எண்ணெய்

    இது தொடர்பாக ஓஎன்ஜிசி இயக்குநர் சுஷ்மா ராவத் கூறுகையில், "உலகளவில் கச்சா எண்ணெய் சந்தை கடுமையான ஏற்ற இறக்கத்தைச் சந்தித்து வருகிறது. அமெரிக்கா - ஈரான் இடையேயான அமைதிப் பேச்சுவார்த்தை அறிவிப்பு வரும்போதெல்லாம் கச்சா எண்ணெய் விலை குறைகிறது.. ஆனால் தீர்வு தாமதமாகும் போது மீண்டும் விலை எகிறுகிறது" என்றார்.

    இருப்பினும், சர்வதேச நெருக்கடிகளுக்கு மத்தியிலும் கிட்டத்தட்ட 76 நாட்களாக மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தாமலேயே இருந்தது.. ஆனால், எண்ணெய் நிறுவனங்கள் தினசரி ₹1,000 கோடி நஷ்டத்தைச் சந்தித்து வந்ததால், இந்த விலை உயர்வு தவிர்க்க முடியாததாகிவிட்டது என்கிறார்கள். அதேநேரம் இந்த விலையேற்றம் இத்தோடு முடியவில்லை. மேலும், வரும் நாட்களில் கூட விலை உயரலாம் என்கிறார்கள்.

    Advertisement

    பெட்ரோல் டீசல் விலை

    இது தொடர்பாக மும்பையைச் சேர்ந்த எம்கே ஃபைனான்சியல் சர்வீசஸ் கூறுகையில், "இந்தியாவின் பணவீக்கக் கணக்கீட்டில் பெட்ரோல் மற்றும் டீசலுக்கு கிட்டத்தட்ட 5% பங்கு இருக்கிறது. 10 நாட்களில் கணிசமான அளவில் விலை உயர்ந்துள்ளது. இது நாட்டின் பணவீக்கத்தைக் கணிசமாக உயர்த்துகிறது. ஏற்கனவே எல்பிஜி மற்றும் சிஎன்ஜி விலை ஏறியுள்ள நிலையில், அத்தோடு பெட்ரோல்- டீசல் விலையேற்றமும் நிலைமை மோசமாகப் பாதிக்கிறது" என்றார்.

    எரிபொருள் விலை உயர்வின் நேரடிப் பாதிப்பை விட, அதன் மறைமுக மற்றும் இரண்டாம் கட்ட விளைவுகள் தான் மிகவும் ஆபத்தானவை என்கிறார்கள். அதாவது டீசல் விலை உயர்வால் லாரிகளின் போக்குவரத்து வாடகை கணிசமாக உயரும். கோயம்பேடு போன்ற மார்க்கெட்டுகளுக்கு வெளிமாநிலங்கள் மற்றும் கிராமப்புறங்களில் இருந்து வரக்கூடிய தக்காளி, வெங்காயம், உருளைக்கிழங்கு போன்ற அத்தியாவசியக் காய்கறிகள் மற்றும் பழங்களின் விலைகள் அடுத்த சில வாரங்களில் மிகக் கடுமையாக உயரப் போகின்றன.

    Advertisement

    பாதிப்பு மோசம்

    போக்குவரத்துச் செலவு அதிகரிப்பதால் விவசாயம், உணவு பதப்படுத்துதல், எஃப்எம்சிஜி (FMCG), ஸ்டீல், இ-காமர்ஸ் டெலிவரிகள் மற்றும் சுற்றுலாத் துறை ஆகியவற்றின் ஆபரேடிங் செலவுகள் அதிகரித்து, அத்தனை பொருட்களின் விலைகளும் மெல்ல மெல்ல உயரத் தொடங்கும். இதுதான் பெட்ரோல்- டீசல் விலையேற்றம் ஏற்படுத்தும் இரண்டாம் கட்ட பாதிப்பாகும்!

    இது தொடர்பாக ஆனந்த் ரதி ஃபைனான்சியல் சர்வீசஸ் நிறுவனத்தின் தலைமைப் பொருளியல் வல்லுநர் சுஜன் ஹஜ்ரா கூறுகையில், "எரிபொருள் பணவீக்கம் 10%ஐ தாண்டினாலும், நாட்டின் ஒட்டுமொத்தப் பணவீக்கம் 4.5% முதல் 5% என்ற கட்டுப்பாட்டு எல்லைக்குள்ளேயே நீடிக்க வாய்ப்புள்ளது" என்றார்.

    Advertisement

    ரூ.10 வரை உயரலாம்

    அதேநேரம் விலையேற்றம் இத்தோடு முடியாது. ஹார்முஸில் நிலைமை சீராகவில்லை என்றால் வரும் நாட்களில் பெட்ரோல் டீசல் விலை மேலும் உயரவே செய்யும். ஏனென்றால் தற்போது வரை செய்யப்பட்டுள்ள விலையேற்றம் என்பது பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள ₹57,000 கோடிக்கும் மேலான காலாண்டு நஷ்டத்தில் இது வெறும் 50% மட்டுமே ஈடுசெய்கிறது. எனவே, அதேபோல லிட்டருக்கு இன்னும் ₹10 வரை விலை உயர்த்தப்பட வாய்ப்புகள் அதிகம்!

    English Summary

    Indian oil marketing companies have hiked fuel rates for the fourth time in two weeks due to the ongoing Strait of Hormuz crisis: பெட்ரோல் டீசல் விலை உயர்வால் அதிகரிக்கும் அத்தியாவசிய பொருட்கள் விலை.