டெல்லி: ''உத்தர பிரதேசம், மகாராஷ்டிரா, பீகார், கர்நாடகா என்று 4 பெரிய மாநிலங்களில் 28 இடங்களுக்கு எம்எல்சி தேர்தல் நடந்தது. வாக்குச்சீட்டு முறையில் நடந்த இந்த தேர்தலில் காங்கிரஸ் எவ்வளவு இடங்களில் ஜெயித்தது?'' என்று கேள்வி எழுப்பி இமோஜியை பகிர்ந்து பிரதமர் மோடி கிண்டல் செய்துள்ளார்.
இதுதொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது: ''உத்தர பிரதேசம், மகாராஷ்டிரா, பீகார் மற்றும் கர்நாடகா என்று 4 பெரிய மாநிலங்களில் 28 இடங்களுக்கு எம்எல்சி தேர்தல் நடந்தது. தேர்தல் வாக்குசீட்டு முறையில் நடந்தது. இதில் எத்தனை இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றது? யூகிங்கள்'' என கூறியுள்ளார். இதன்மூலம் காங்கிரஸ் கட்சியை பிரதமர் மோடி கிண்டல் செய்துள்ளார்.
அதோடு இந்த பதிவில் உற்று கவனித்து ஆராய்ந்து பார்க்கும் இமோஜியை மோடி பயன்படுத்தி உள்ளார். இதன்மூலம் எவ்வளவு தேடியும் ஒரு இடத்தில் கூட ஜெயிக்கவில்லையே என்பதை மறைமுகமாக குறிப்பிட்டு பிரதமர் மோடி கிண்டல் செய்துள்ளார். தற்போது இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ராஜினாமா செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி போராடி வருகிறது. அதுமட்டுமின்றி தேர்தலில் பாஜக முறைகேடு செய்து தான் ஜெயிக்கிறது. வாக்குப்பதிவு இயந்திரங்களில் நடக்கும் முறைகேடு தான் பாஜகவின் வெற்றிக்கு காரணம். இதனால் இந்தியாவில் அனைத்து தேர்தல்களிலும் வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு பதில் வாக்குச்சீட்டு முறையை கொண்டு வர வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்பட பலரும் கூறி வருகின்றனர். இந்நிலையில் தான் 4 மாநிலங்களில் 28 இடங்களுக்கு வாக்குச்சீட்டு முறையில் எம்எல்சி தேர்தல் நடந்ததில் காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. இதனை சுட்டிக்காட்டி தான் பிரதமர் மோடி காங்கிரஸ் கட்சியை கிண்டல் செய்துள்ளார்.