டெல்லி: குருகிராம் கோல்ஃப் கோர்ஸ் சாலையில் பெண் மீது காரை மோதியதாக கைது செய்யப்பட்ட நபர், போலீஸ் காவலில் இருந்து தப்ப முயன்றதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. சிறுநீர் கழிக்க வேண்டும் என போலீசாரிடம் சொல்லிவிட்டு தப்பி செல்ல முயன்றதாகவும், அப்போது கீழே விழுந்ததில் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில நாட்களாகவே சமூக வலைத்தளங்களில் பெண் ஒருவர் மீது காரை மோதி விபத்து ஏற்படுத்திய வீடியோ தான் பேசுபொருளாகியிருந்தது. இந்த சம்பவம் கடந்த செப்டம்பர் 13ம் தேதி குருகிராமின் கோல்ஃப் கோர்ஸ் சாலையில் நடந்திருந்தது. விபத்தில் நல்வாய்ப்பாக அந்த பெண்ணுக்கு மோசமான காயங்கள் எதுவும் ஏற்படவில்லை.
இந்த வீடியோ டிரெண்டான நிலையில் சம்பந்தப்பட்ட நபர் உடனடியாக கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர் ஹரியானாவின் பல்வால் மாவட்டம் சந்த்ஹாட் பகுதியைச் சேர்ந்த 33 வயதான கல்யாண் பைன்ஸ்லா என அடையாளம் காணப்பட்டுள்ளார். சம்பவத்துக்கு பிறகு கார் ஓட்டுநர் தலைமறைவான நிலையில், அவரை கைது செய்ய குருகிராம் போலீசார் மூன்று தனிப்படைகளை அமைத்தனர். இதையடுத்து குற்றப்பிரிவு போலீசார் ராஜஸ்தானில் தேடுதல் நடத்தினர். செவ்வாய்க்கிழமை தௌசா மற்றும் ராஜ்கர் இடையே கல்யாண் பைன்ஸ்லாவை போலீசார் கைது செய்தனர். அவரை குருகிராம் அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டது. போலீஸ் காவலில் இருந்தபோது அவர், சிறுநீர் கழிக்க வேண்டும் என்று போலீசார் அனுமதி கேட்டிருக்கிறார். போலீசார் அனுமதி அளித்த நிலையில், அவர் அங்கிருந்து தப்பி செல்ல முயன்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இருப்பினும் தப்பி செல்லும்போது எதிர்பாராத விதமாக கீழே விழுந்ததில் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டதாகவும், பின்னர் மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட காரும் போலீசாரால் மீட்கப்பட்டுள்ளது. அந்த கார் கல்யாண் பைன்ஸ்லாவின் நண்பர் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருடன் தொடர்புடைய லவ்னிஷ் என்பவரும் போலீசாரால் பிடிக்கப்பட்டுள்ளார். கோல்ஃப் கோர்ஸ் சாலையில் நடந்த சம்பவத்தை அந்த பெண் தனது சமூக வலைத்தளத்தில் வீடியோவாக வெளியிட்டிருந்தார். அவரது பைக்கில் பொருத்தப்பட்டிருந்த கேமராவில், கார் அவரது பைக்கை வேண்டும் என்றே மோதிய காட்சிகள் பதிவாகியிருந்தன. அந்த வீடியோவில் கார் ஓட்டுநரின் முகமும் பதிவாகியிருந்தது. வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியதை தொடர்ந்து, கல்யாண் பைன்ஸ்லா தரப்பு மழுப்பலான விளக்கங்களைக் கொடுக்க ஆரம்பித்தனர். பெண் மீதுதான் தவறு... இது எதிர்பாராத விதமாக நடந்த விபத்து என தொடர்ந்து பல்வேறு விளக்கங்களை கொடுத்தனர். அவரது வக்கீல் ஒரு கட்டத்தில் பைக்கில் போவார் தான் பாதி விபத்திற்கே காரணம் என கூட சொன்னார். அதெல்லாம் மக்கள் கோபத்தை மேலும் அதிகரிக்கவே செய்தது. நிலைமை மோசமாவதை உணர்ந்த அவர் தனது செல்போனை அணைத்துவிட்டு தலைமறைவானதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அதைத் தொடர்ந்தே அவரை கைது செய்ய தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்த சம்பவம் தொடர்பாக குருகிராம் போலீசார் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்தனர். பின்னர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததைத் தொடர்ந்து, வழக்குப்பதிவும் செய்யப்பட்டது. இதற்கிடையே இது விபத்து இல்லை என்றும் திட்டமிட்டு நடத்தப்பட்டதாக பெண் பைக்கர் ஷிவானி சவுகான் குற்றம்சாட்டியுள்ளார். காரில் இருந்தவர்கள் தனக்கு தொல்லை கொடுத்ததாகவும் அவர்களிடம் இருந்து தப்பிக்கவே வேகத்தை அதிகரித்தாக கூறுகிறார். இருப்பினும், வேகமாக செல்வதை பார்த்தவுடன் ஈகோவால் வந்து மோதியதாக கூறியிருக்கிறார்.கைது
சார் பாத்ரூம் போகணும்
சமாளிப்பு
பெண் விளக்கம்