டெல்லி: தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை அடுக்கியிருக்கும் நிலையில், மத்திய அரசு அதை காதில் கூட போட்டுக்கொள்ளவில்லை. இப்படி இருக்கையில் தேர்தல் ஆணையர்களின் சட்ட பாதுகாப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் மனுக்களை நீதிமன்றம் விசாரணைக்கு எடுக்க உள்ளது.
சமூக ஆர்வலரும் வழக்கறிஞருமான அருண்குமார் அகர்வால் என்பவரால், இந்த மனு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட, 'தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் இதர தேர்தல் ஆணையர்கள் (பதவி நியமனம் சேவை நிபந்தனைகள் மற்றும் பதவிக்காலம்) சட்டத்தின் பிரிவு 16' அரசியலமைப்புக்கு முரணானது என்று மனுதாரர் கூறியிருக்கிறார். எனவே இந்த சட்டப்பிரிவை ரத்து செய்ய வேண்டும் என்று கூறியிருக்கிறார்.
பிரிவு 16 என்பது, பதவியில் இருக்கும் அல்லது ஓய்வு பெற்ற தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்கள், தங்களது அதிகாரப்பூர்வ கடமைகளின் போது செய்த எந்த செயலுக்காகவும், அவர்களுக்கு எதிராக உரிமையியல் அல்லது குற்றவியல் வழக்கையும் நீதிமன்றங்கள் விசாரிக்கவோ அல்லது தொடரவோ தடை விதிக்கிறது. அதாவது, தேர்தல் நடத்தை விதிகளை மீறி.. வெறுப்பு பேச்சு பேசுவது, அல்லது அரசு அதிகாரத்தை.. தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்துவது போன்ற செயல்களை, ஆளும் கட்சியினர் செய்யும் போது.. தேர்தல் ஆணையம் அதை கண்டு கொள்ளாமல் மெத்தனமாக இருக்கிறது என்றால், தேர்தல் ஆணையத்திற்கு எதிராக அல்லது தேர்தல் ஆணையருக்கு எதிராக வழக்கு தொடர முடியாது. அதேபோல, தேர்தல் ஆணையத்தின் கீழ் இயங்கும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள், எதிர்க்கட்சி வேட்பாளர்களின் வேட்பு மனுக்களில் மிகச் சிறிய பிழைகளை காரணம் காட்டி, அவர்களின் மனுக்களை நிராகரிப்பதும்.. மறுபக்கம் ஆளும் கட்சி வேட்பாளர்களின் மனுக்களில் பெரிய தவறு இருந்தும், அதை ஏற்பதும் இருந்தால்.. இதை எதிர்த்தும் நீதிமன்றத்தை நாட முடியாது. இப்படியான சட்ட பாதுகாப்புக்குள்தான் தேர்தல் ஆணையர்கள் இருக்கிறார்கள். தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் மீது, எதிர்க்கட்சிகள் இதுபோன்ற பல குற்றச்சாட்டுகளை அடுக்கி இருக்கின்றனர். குறிப்பாக எஸ்ஐஆர்(SIR) நடைமுறையின் போது.. வாக்காளர்கள் வேண்டுமென்றே நீக்கப்பட்டு இருக்கிறார்கள் என்றும், இதற்கு தேர்தல் ஆணையர் பொறுப்பேற்க வேண்டும் என்றும் எதிர் கட்சிகள் கூறியுள்ளன. ஆனால் அவருக்கு சட்டப்பிரிவு 16 பாதுகாப்பு கொடுப்பதால்.. அவர் மீது வழக்கு தொடுக்க முடியாத நிலை உள்ளது. இந்த சட்டப் பாதுகாப்பு என்பது, மிகவும் அதிகபட்சமானது. நம்பிக்கையின் அடிப்படையில் செய்யப்படாத, தவறான செயல்களுக்கு கூட இதில் விதிவிலக்கு அளிக்கப்படவில்லை என்று, மனுதாரர் நீதிமன்றத்தில் வாதங்களை முன் வைத்திருக்கிறார். தேர்தல் ஆணையத்தின் சுதந்திரம் என்பது, தேர்தல் ஆணையரை கேள்வியே கேட்க கூடாது என்பதில் இருப்பதல்ல.. அவர்களும் பொறுப்பாக பதில் சொல்ல வேண்டிய இடத்தில் இருக்க வேண்டும் என்பதில்தான் ஆணையத்தின் சுதந்திரம் உள்ளது என்று மனுதாரர் கூறுகிறார். அதற்காக தேர்தல் ஆணையருக்கு பாதுகாப்பே இல்லை என்று சொல்லிவிட முடியாது. தேவையற்ற அளவு சிறிய புகார்களில் இருந்து ஆணையர்களை பாதுகாக்க, மாற்று வழிகள் மற்றும் முன்கூட்டியே நீதித்துறை ஆய்வு போன்ற பாதுகாப்புகள் இருக்கலாமே தவிர.. அனைத்து சட்ட வழிகளையும் அடைக்க கூடாது. தற்போதைய நிலையில், ஆணையத்தின் தவறான அல்லது உள்நோக்கம் கொண்ட செயல்களுக்கு எதிராக.. வாக்காளர்களோ, வேட்பாளர்களோ அல்லது குடிமக்களோ எந்த ஒரு சட்டப் பரிகாரமும் தேட முடியாமல் நெருக்கடியாக கைவிடப்பட்டுள்ளனர் என்று மனுதாரர் குறிப்பிட்டு இருக்கிறார். இந்த மனுவை விசாரணைக்கு எடுத்திருக்கும் உச்ச நீதிமன்றம், விளக்கமளிக்க மத்திய அரசு மற்றும் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு இது குறித்து நோட்டீஸ் அனுப்பி உள்ளது. ஒருவேளை விசாரணை பாசிட்டிவாக போகிற எனில், தீர்ப்பும் அப்படியே வருகிறது எனில், ஞானேஷ் குமாருக்கு பெரிய சிக்கல் காத்திருக்கிறது.தேர்தல் ஆணையருக்கான விதிவிலக்குகள்
கேள்வி கேட்கவோ வழக்கு போடவோ முடியாது
தப்பிக்கும் ஞானேஷ் குமார்
மனுதாரரின் வாதம்
ஏற்கெனவே இருக்கும் பாதுகாப்பு