டெல்லி: இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும். இல்லாவிட்டால் இந்தியா முழுவதும் இருந்து கரப்பான்பூச்சிகள் டெல்லிக்கு பேரணியாக வந்து அக்டோபர் 10ம் தேதி டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தும். டெல்லி காவல்துறை எங்களை தடுக்க முயன்றால் அவர்கள் எங்கு எங்களை தடுத்தாலும் அதுவே எங்கள் ஜந்தர் மந்தராக மாறும்'' என்று கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் நிறுவன ஒருங்கிணைப்பாளர் அபிஜித் தீப்கே அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனரும், ஒருங்கிணைப்பாளருமான அபிஜித் தீப்கே தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளதாவது: ''ஞானேஷ் குமார் பதவி விலகாவிட்டால் இந்தியா முழுவதும் இருந்து கரப்பான்பூச்சிகள் டெல்லிக்கு பேரணிக்கு வந்து அக்டோபர் 10ம் தேதி டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தும். டெல்லி காவல்துறை எங்களை தடுக்க முயன்றால் அவர்கள் எங்கு எங்களை தடுத்தாலும் அதுவே எங்கள் ஜந்தர் மந்தராக மாறும். எங்களுடையது அமைதியான போராட்டமாக இருக்கும். மகாத்மா காந்தி காட்டிய பாதையில் நாங்கள் நடப்போம். அமைதியான முறையில் போராடுவதற்கான எங்கள் உரிமையை மதிக்கிறார்களா? இல்லாவிட்டால் ஜூலை 20ம் தேதி நாங்கள் எதிர்கொண்ட கொடூரத்தை மீண்டும் செய்கிறார்களா என்பது அரசு மற்றும் டெல்லி போலீசாரை பொறுத்தது. இது நமது ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்கான போராட்டம். சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களை விரும்பும் ஒவ்வொரு குடிமகனும் இந்த போராட்டத்தில் இணைய வேண்டும்'' என்று கூறியுள்ளார். SIR விவகாரத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மற்ற 2 தேர்தல் ஆணையர்களுடன் கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக செயல்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இதனால் ஞானேஷ் குமார் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. கரப்பான்பூச்சி ஜனதா கட்சியும் இதே கோரிக்கையை முன்வைத்து செயல்பட்டு வருகிறது. நேற்றைய தினம் மும்பை சிவாஜி பார்க்கில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கே தலைமையில் ஏராளமானவர்கள் திரண்டு ஞானேஷ் குமார் ராஜினாமா செய்ய வேண்டும் எனறு போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் நேற்று முடிவடைந்த நிலையில் ஞானேஷ் குமார் ராஜினாமா செய்யாவிட்டால் அடுத்தக்கட்டமாக டெல்லி ஜந்தர் மந்தர் நோக்கி நாடு முழுவதும் இருந்து பேரணி சென்று அங்கு அக்டோபர் 10ம் தேதி போராட்டம் நடத்தப்படும் என்று அபிஜித் தீப்கே கூறியுள்ளார். முன்னதாக கடந்த ஜூலை மாதம் மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தினர். நீட் வினாத்தாள் கசிவுக்கு அவர் பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வலியுறுத்தினர். சுமார் 20 நாட்களுக்கு மேலாக உண்ணாவிரதம், போராட்டம் நடத்தினர். இதையடுத்து தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தார். அந்த வகையில் தான் ஞானேஷ் குமாருக்கு எதிராகவும் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தப்படும் என அபிஜித் தீப்கே அறிவித்துள்ளார்.