சர்வாதிகாரி போல் செயல்படுவதா? தலைமை தேர்தல் ஆணையரை பதவி நீக்கணும்.. எதிர்க்கட்சிகள் போர்க்கொடி

  • டெல்லி: இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மற்ற 2 தேர்தல் ஆணையர்களின் கருத்துகளை கேட்காமல் சர்வாதிகாரியாக செயல்படுவதாக சர்ச்சை வெடித்துள்ளது. தற்போது இந்த விவகாரம் பூதாகரமாகி உள்ள நிலையில் ஞானேஷ் குமாரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர்கள் போர்க்கொடி உயர்த்தி உள்ளனர்.

    Advertisement

    நம் நாட்டில் தற்போது 'சார்' எனும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதல் முதலாக கடந்த ஆண்டு பீகாரிலும் அதன்பிறகு 2வது கட்டமாக தமிழகம் உள்பட 10க்கும் அதிகமான மாநிலங்களிலும் மேற்கொள்ளப்பட்டது.

    Advertisement

    இப்போது 3வது கட்டமாக, ஆந்திரா, தெலுங்கானா உள்பட மீதமுள்ள மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். இதற்கு காங்கிரஸ் உள்பட பிற எதிர்க்கட்சிகள் தொடக்கம் முதலே கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

    ஆனால், மத்திய அரசும், இந்திய தேர்தல் ஆணையமும் பின்வாங்கவில்லை. இந்நிலையில் தான் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கை விவகாரத்தில் தேர்தல் ஆணையத்திலேயே மோதல் போக்கு உள்ளதாக ஆங்கில ஊடகமான 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழில் செய்தி வெளியானது.

    அதாவது தேர்தல் ஆணையத்தை எடுத்து கொண்டால் ஒரு தலைமை தேர்தல் ஆணையர், 2 தேர்தல் ஆணையர்கள் செயல்படுவார்கள். தற்போது தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமார், தேர்தல் ஆணையர்களாக சுக்பீர் சிங் சந்து, விவேக் ஜோஷி உள்ளிட்டோர் உள்ளனர்.

    Advertisement

    இந்நிலையில் தான் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையின்போதுது சுக்பீர் சிங் சந்து, விவேக் ஜோஷி ஆகியோர் சில விஷயங்களில் ஆட்சேபனைகளை எழுப்பியும் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் செவிசாய்க்கவில்லையாம்.

    பெயர் சேர்க்க பார்ம் -6ல் புதிய கேள்விகள் இணைக்கப்பட்டது. இது சட்டவிரோதமானது என்று இரு ஆணையர்கள் கூறிய நிலையில் ஞானேஷ் குமார் கேட்கவில்லை. இதேபோல் கடந்த 10 மாதங்களில் இரு ஆணையர்களும் மொத்தம் 14 கடிதங்களில் தங்களின் ஆட்சேபனைகளை தெரிவித்தும் ஞானேஷ் குமார் கண்டுக்கொள்ளவில்லை.

    ஞானேஷ் குமார் சர்வாதிகாரி போல் செயல்பட்டதாக கூறப்பட்டுள்ளது. குறிப்பாக வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின்போது பல்வேறு மாநிலங்களில் பெயர்கள் நீக்கம் உள்ளிட்ட விஷயங்களின் 2 தேர்தல் ஆணையர்களின் கருத்துக்கு ஞானேஷ் குமார் சரியான பதில் எதுவும் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

    Advertisement

    இதனால் தற்போது எதிர்க்கட்சி தலைவர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று போர்க்கொடி உயர்த்தி உள்ளனர். அதன்படி காங்கிரஸின் தகவல் தொடர்பு பிரிவு பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், ''இந்தியத் தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையையும், நேர்மையையும் தலைமைத் தேர்தல் ஆணையர் எவ்வாறு சிதைத்துள்ளார் என்பது குறித்த அதிர்ச்சியூட்டும் தகவல்கள் நாளிதழில் வெளியாகி உள்ளது. இதுபற்றி கட்சியின் அபிஷேக் சிங்வி ஊடகங்களிடம் விரிவாகப் பேசுவார்'' என கூறியுள்ளார்.

    காங்கிரஸ் கட்சியின் அமைப்பு பொதுச்செயலாளர் கேசி வேணுகோபால் கூறுகையில், ''ஞானேஷ் குமார் தொடர்ந்து பதவியில் நீடிக்க எந்த உரிமையும் இல்லை. பதவி நீக்கம் செய்ய வேண்டும். இதில் எவ்வித சந்தேகமும் இல்லை. இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பில் ஒரு நடுநிலையான விசாரணை நடத்தப்பட வேண்டும். திட்டமிட்டே ஞானேஷ் குமார் இந்த பதவிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். எஜமானரின் உத்தரவுப்படி செயல்படும் ஒரு நபர் எவ்வாறு தன்னிச்சையாக பெயர்களை நீக்க முடியும்? ஜனநாயகத்தை ஆபத்தில் ஆழ்த்தும் வகையிலான அப்பட்டமான சட்டவிரோத நடவடிக்கைகளை எடுக்க சக அதிகாரிகளை அவரால் எப்படி ஓரம்கட்ட முடியும்?'' என சாடியுள்ளார்.

    Advertisement

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்பி ஜான் பிரிட்டாஸ் கூறுகையில், ''இது இனி தேர்தல் ஆணையமாக இல்லை. மாறாக தலைமைத் தேர்தல் ஆணையர் குமாரின் கீழ் இயங்கும் "ஒரு நபர் சர்வாதிகாரம்" ஆணையம் போல் உள்ளது. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்குவதற்கான நடைமுறையை நாடாளுமன்றம் உடனடியாக தொடங்க வேண்டும். அரசியலமைப்பு விதிகளின்படி - அதாவது வலுவான காரணங்கள் மற்றும் சுமார் 70 உறுப்பினர்களின் கையொப்பங்களுடன் (தேவையான எண்ணிக்கை 50) - அவரை நீக்குவதற்கான அறிவிப்பை நாங்கள் ஏற்கனவே ஏப்ரல் 24ம் தேதி சமர்ப்பித்திருந்தோம்.

    உச்ச நீதிமன்றம் தாமதமின்றி முழு SIR செயல்முறையையும் ரத்து செய்ய வேண்டும். மூன்று ஆணையர்களில் இருவர், இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது என்றும் வாக்காளர் பட்டியலின் நம்பகத்தன்மையைச் சிதைப்பதாகவும் பதிவு செய்துள்ள நிலையில், நீதித்துறை மவுனம் காப்பது இந்த செயலுக்கு உடந்தையாக இருப்பது போன்றதாகும்'' என்றார்.

    Advertisement

    முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் ஓபி ராவத் கூறுகையில், ''வாக்காளர் பதிவுக்கான சட்டப்பூர்வமான 'படிவம் 6'-ல் (Form 6) செய்யப்பட்ட மாற்றங்கள் முற்றிலும் தவறானவை. சட்டவிரோதமானவை. தேர்தல் ஆணையத்திற்குள் நிலவும் கருத்து வேறுபாடுகள் குறித்த தகவல்கள் மிகவும் தீவிரமானதாக இருப்பதோடு துரதிர்ஷ்வசமானது'' என்றார்.

    சிவசேனா (உத்தவ் அணி) சஞ்சய் ராவத் கூறுகையில், "ஞானேஷ் குமார் சிறைக்குச் செல்வார்! அவர் சிறைக்கு சென்றே ஆக வேண்டும். அவருக்கு உத்தரவிட்ட எஜமானர்கள் நாட்டை விட்டு ஓடிவிடுவார்கள்'' என்றார்.

    திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராஜ்யசபா எம்பிமான டெரெக் ஓ பிரையன் ''5 மாதங்களுக்கு முன்பு 60க்கும் மேற்பட்ட ராஜ்யசபா எம்பிக்கள் (தேவையான எண்ணிக்கை 50), தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை நீக்குவதற்கான தீர்மானத்தை கொண்டுவர ராஜ்யசபா தலைவருக்கு கடிதம் எழுதினர். தலைமை தேர்தல் ஆணையரின் பல நடவடிக்கைகளுக்கு இரண்டு தேர்தல் ஆணையர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாக இன்று முக்கியச் செய்தி வெளியான நிலையில், அந்த மாநிலங்களவை தீர்மானத்தை இன்று முன்னெடுப்பதற்கான சரியான நேரம் வந்துள்ளது. ஜனநாயகத்தைக் காக்க தலைமைத் தேர்தல் ஆணையர் மீது பதவி நீக்க நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்" என கூறியுள்ளார்.

    English Summary

    Gyanesh Kumar News: A controversy has erupted over allegations that Chief Election Commissioner Gyanesh Kumar is acting in an autocratic manner without consulting the other two Election Commissioners. With the issue now escalating significantly, opposition leaders have raised a strong protest, demanding his removal from office.