போராட மாட்டோம் என்று நாங்கள் எங்கேயும் கையெழுத்து போடல.. CJP தலைவர்கள் விளக்கம்!

  • டெல்லி: தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக டெல்லியில் காக்ரோச் ஜனதா கட்சி (CJP) நேற்று மிகப்பெரிய போராட்டத்தை நடத்தியிருந்தது. இதற்காக CJP தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். இன்று அவர்கள் சில நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்டனர். இப்படி இருக்கையில், போராட மாட்டோம் என்று எந்த நிபந்தனையிலும் நாங்கள் கையெழுத்து போடவில்லை என்று அவர்கள் கூறியிருக்கிறார்கள்.

    Advertisement

    ஜந்தர் மந்தர் போராட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி மறுத்திருந்தது. இருப்பினும் போராட்டக்காரர்கள் பின்வாங்கவில்லை. டெல்லியில் குவிய தொடங்கினர். இதை தடுக்க அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது.

    Advertisement

    டெல்லிக்குள் நுழையும் 250க்கும் அதிகமான எக்ஸ்பிரஸ் மற்றும் மெயில் ரயில்கள் நுழையாமல் பாதி வழியில் நிறுத்தப்பட்டன. ரயிலில் வந்த போராட்டக்காரர்களை மத்தியப் பிரதேச மற்றும் உத்தரப் பிரதேச போலீசார் பாதி வழியில் மறித்து கைது செய்தனர். டெல்லியில் 47க்கும் அதிகமான மெட்ரோ நிலையங்கள் மூடப்பட்டன. மிக குறிப்பாக CJP தலைவர் அபிஜித் தீப்கே விமானத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். CJP-ன் மற்ற தலைவர்கள் ஆங்காங்கே கைது செய்யப்பட்டு 24 மணி நேரம் கழித்து டெல்லியின் நிர்வாக நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

    அங்கு அவர்களை நீதிமன்றம் நிபந்தனைகளுடன் விடுதலை செய்தது. அடுத்த ஒரு வருடத்திற்கு அமைதியை குலைக்கும் எந்த செயல்களிலும் ஈடுபடக்கூடாது என்பதுதான் அந்த நிபந்தனை. அப்படியெனில் தீப்கே ஒரு வருடத்திற்கு போராட மாட்டாரா? CJP-ன் போராட்டம் முடிவடைந்துவிட்டதா? என்று கேள்விகள் எழுந்தன. இப்படி இருக்கையில்தான் இதற்கு அவர் தனது x பக்கத்தில் பதிலளித்துள்ளார்.

    Advertisement

    "நாங்கள் இனி போரட மாட்டோம் என்று எந்த ஒரு உடன்படிக்கையிலும் கையெழுத்து போடவில்லை. நாங்கள் மீண்டும் வீதியில் இறங்கி போராடுவோம்" என தீப்கே, சவுரவ் தாஸ், அசுதோஷ், துருவ் ராத்தே உள்ளிட்டோர் தங்கள் x பக்கங்களில் பதிவிட்டிருக்கின்றனர்.

    அப்படியெனில் மீண்டும் டெல்லியில் போராட்டம் வெடிக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். அமைதியாக கூடி, தங்கள் எதிர்ப்பை தெரிவிக்க இந்திய அரசியலமைப்பு சட்டம் உரிமை கொடுத்திருக்கிறது. இதை நீதிமன்றத்தாலும் பறிக்க முடியாது. அமைதிக்கு பாதிப்பு ஏற்படுத்த கூடாது என்று தான் நீதிமன்றம் சொல்லியிருக்கிறதே தவிர, போராட கூடாது என சொல்லவில்லை என சட்ட நிபுணர்கள் கூறுகின்றனர். போராடுவது என்பது அமைதிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் செயலாகாது என்றும் கூறுகின்றனர்.

    English Summary

    Abhijeet Dipke: The Cockroach Janata Party (CJP) staged a massive protest in Delhi yesterday against Chief Election Commissioner Gyanesh Kumar. CJP leaders were arrested in connection with the protest and were released today subject to certain conditions. However, they have stated that they did not sign any undertaking agreeing not to protest.