பனிப்பொழிவுக்கு பதில் மழை.. நேபாள வெள்ளத்திற்கு காரணமாக இருந்த சம்பவம்! 200 கோடி பேருக்கு ஆபத்து

  • டெல்லி: இமயமலை பகுதியில் பனி பாறைகள் வேகமாக உருகி வரும் நிலையில், 4,000 மீட்டர் மற்றும் அதற்கு மேல் உயரமான பகுதிகளில் பனிப்பொழிவுக்கு பதிலாக மழை பெய்வது கவலையை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவு வெள்ளத்துக்கான காரணம் குறித்து விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வரும் நிலையில், பனிக்கு பதிலாக மழை பெய்வது முக்கிய காரணங்களில் ஒன்றாக இருக்கலாம் என கருதப்படுகிறது.

    Advertisement

    நேபாளத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மோசமான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளத்தால் 700+ உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் காயமடைந்துள்ளனர். மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்து வரும் நிலையில், உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கலாம் எனவும் அஞ்சப்படுகிறது.

    Advertisement

    இரண்டு ரிப்போர்ட்கள்

    இதற்கிடையே நேபாளத்தை சேர்ந்த ஐசிஐஎம்ஓடி (International Centre for Integrated Mountain Development) கடந்த மார்ச் மாதம் வெளியிட்ட இரண்டு ரிப்போர்ட்கள் இந்த ஆபத்து குறித்து முன்கூட்டியே எச்சரித்திருந்தது. இந்து குஷ் இமயமலை பகுதியில் பனிப்பாறைகள் உருகும் வேகம் அதிகரித்து வருவதாகவும், 2000ம் ஆண்டுக்கு பிறகு பனிப்பாறைகளின் பனி உருகும் விகிதம் இரட்டிப்பாகியுள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

    1975 முதல் தற்போது வரை சில பகுதிகளில் 27 மீட்டர் வரையிலான பனிப்பாறை கரைந்துள்ளதாக ஐசிஐஎம்ஓடி கூறியுள்ளது. மேலும், 1990 முதல் 2020 வரையிலான 30 ஆண்டுகளில் இந்து குஷ் இமயமலை பனிப்பாறைகள் தங்களது மொத்த பரப்பளவில் சுமார் 12% இழந்துள்ளன. நேபாளத்தில் வெள்ளத்திற்கு இதுவும் ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

    Advertisement

    பனிக்கு பதில் மழை

    மேலும், இமயமலை பகுதியில் உயரமான இடங்களில் முன்பு பனிப்பொழிவு மட்டுமே இருக்கும். ஆனால், இப்போது பனிப்பொழிவு நின்று அங்கு மழை ஆரம்பித்துள்ளதாம். இது கவலைக்குரிய மாற்றமாக பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக ஆய்வாளர்கள் கூறுகையில், "அங்கு வெப்பம் அதிகரித்ததால் பனிப்பொழிவு மழையாக மாறிவிட்டது. இதே வெப்பமயமாதல் காரணமாக பனிப்பாறைகளும் வேகமாக உருகி வருகிறது" என்றார்.

    வெள்ளம்

    வல்லுநர் முகமது ஃபாரூக் ஆசம் மேலும் கூறுகையில், "பனிப்பொழிவு குறைவதால் பனிப்பாறைகள் உருகுகிறது. இதனால் பாறைப் பகுதிகள் அதிகம் கண்களில் படுகிறது. இவை அதிக வெப்பத்தை உறிஞ்சுவதால் மலைச்சரிவுகள் அடிக்கடி ஏற்படுகிறது" என்றார். இப்போது நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளத்திற்கும் கூட உயரமான இடத்தில் ஏற்பட்ட பனி-பாறை சரிவே முக்கிய காரணமாக இருக்கும் என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். பனி மற்றும் பாறைகள் ஆற்றில் விழுந்து, தண்ணீர், சேறு மற்றும் மிக பெரிய பாறைகள் கலந்த வெள்ளம் ஏற்பட்டிருக்கலாம் என ஆய்வாளர்கள் சந்தேகிக்கின்றனர்.

    Advertisement

    இந்து குஷ் இமயமலை பகுதியில் துருவ பகுதிகளுக்கு வெளியே உலகின் மிக பெரிய பனிப்பரப்பு உள்ளது. இங்கு 63,700-க்கும் மேற்பட்ட பனிப்பாறைகள் சுமார் 55,000 சதுர கி.மீ. பரப்பில் உள்ளன. இவை ஆசியாவின் 10 முக்கிய நதி அமைப்புகளுக்கு நீராதாரமாக உள்ளன. சுமார் 200 கோடி மக்கள் இந்த ஆறுகள் தான் உணவு, குடிநீர், மின்சாரம் மற்றும் வாழ்வாதார தேவைகளைப் பூர்த்தி செய்து வருகின்றனர்.

    மோசம்

    2000ம் ஆண்டுக்கு பிறகு பனிப்பாறை இழப்பு இரட்டிப்பாகியிருப்பது, இமயமலையில் உள்ள பனிப்பாறைகள் மாற்றமடையும் முக்கியமான அறிகுறியாக பார்க்கப்படுகிறது. சில பகுதிகள் மீண்டும் மாற்ற முடியாத அளவுக்கு பனிப்பாறைகள் வேகமாக உருகி வருகிறது. இதே நிலை தொடர்ந்தால் பனிப்பாறை உருகுவது மேலும் அதிகரிக்கும் என்றும் இதுபோன்ற வெள்ளப்பெருக்கு அடிக்கடி நிகழும் எனவும் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

    English Summary

    Himalayan glaciers are melting rapidly, while rainfall is replacing snowfall at elevations above 4,000 metres(இமயமலையில் வேகமாக உருகும் பனிப்பாறைகள்): Himalayan Glaciers Melting latest news in tamil.