குதிரை பேரம்.. உச்சநீதிமன்ற படி ஏறிய தமிழக அரசு! உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க மறுப்பு

  • டெல்லி: தவெக எம்எல்ஏவிடம் குதிரை பேரத்தில் ஈடுபட்டவர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்திருந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம்.. உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது.

    Advertisement

    தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில், தவெக வரலாற்று வெற்றியை பெற்றிருந்தது. இருப்பினும் பெரும்பான்மையை நிரூபிக்கும் அளவுக்கு போதிய எம்எல்ஏக்கள் இல்லை. பின்னர் கூட்டணி கட்சி ஆதரவுடன் விஜய் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது.

    Advertisement

    நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, சபாநாயகருக்கு எதிராக வாக்களிக்க தவெக ஊத்தங்கரை எம்எல்ஏ என்.இளையராஜாவிடம் ரூ.35 கோடி பேரம் பேசப்பட்டது என்பதுதான் குற்றச்சாட்டு. இது தொடர்பாக தகுந்த ஆதாரங்களுடன் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருந்தது. புகாரை விசாரித்த காவல்துறையினர்.. திருநாவுக்கரசு, சேதுராஜ், நரேஷ் உட்பட பலரை கைது செய்திருந்தனர்.

    இது தமிழகம் முழுவதும் விவாதங்களை ஏற்படுத்தியிருந்தது. குதிரை பேரத்திற்கு பின்னால் இருப்பது யார்? இவர்களை இயக்கியது யார்? என்று விசாரணை நடைபெற்று வந்தது. மறுபுறம், கைது செய்யப்பட்டவர்கள் தங்களுக்கு ஜாமீன் கோரி கீழமை நீதிமன்றத்தை நாடியிருந்தனர். ஆனால் ஜாமீன் கிடைக்கவில்லை.

    Advertisement

    பின்னர் சென்னை உயர்நீதிமன்றத்தை நாடினர். உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ஜி.கே.இளந்திரையன் வழக்கை விசாரித்தார். விசாரணையில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் வழக்கின் புலனாய்வுக்கு முழுமையாக ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். மட்டுமல்லாது வழக்கில் தொடர்புடையவர்கள் ஹவாலா பணப்பரிவர்த்தனையில் ஈடுபட்டதற்கான முழுமையான ஆதாரங்கள் இல்லை என்று கூறி சம்பந்தப்பட்டவர்களுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியிருந்தார்.

    குற்றம்சாட்டப்பட்வர்களுக்கு ஜாமீன் வழங்கினால்.. அது வழக்கின் தீவிரத்தன்மையை குறைத்துவிடும் என்றும் முறையான விசாரணைக்கு முட்டுக்கட்டை போடும் என்றும் கூறி, தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த முறையீட்டு மனு இன்று தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.

    English Summary

    Horse-trading case: The Madras High Court had granted bail to those involved in horse-trading attempts targeting a TVK MLA. The Tamil Nadu government appealed against this decision in the Supreme Court, and the appeal petition is coming up for hearing today.