பிபிசி முதல் சிஎன்என் வரை.. நீட் போராட்டம் பற்றி சர்வதேச ஊடகங்கள் அனைத்தும் சொல்வது ஒரு மேட்டர் தான்

  • டெல்லி: நீட் தேர்வு முறைகேட்டை எதிர்த்து தொடங்கிய மாணவர் போராட்டம், சில வாரங்களிலேயே இந்திய அரசியலையே உலுக்கிய மிக பெரிய மக்கள் இயக்கமாக மாறியது. கரப்பான் பூச்சி கட்சி முன்னெடுத்த இந்த போராட்டம், தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவுடன் முடிந்தது. இந்த மாணவர் போராட்டத்தை உலகின் முன்னணி ஊடகங்களும் எப்படி கவர் செய்தன என்பது குறித்து நாம் பார்க்கலாம்..

    Advertisement

    தடியடி, கண்ணீர் புகைக் குண்டு வீச்சு, மெழுகுவர்த்தி பேரணி, ஜந்தர் மந்தரில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் முகாமிட்ட காட்சிகள் உலகம் முழுவதும் பரவின. ஆரம்பத்தில் தேர்வு முறைகேடு தொடர்பான போராட்டமாக இருந்த இது, பின்னர் நல்லாட்சி, வேலைவாய்ப்பு, இளைஞர்களின் எதிர்காலம் மற்றும் அரசின் பொறுப்புணர்வு குறித்த விவாதமாக மாறியதாகவே சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

    Advertisement

    ராய்ட்டர்ஸ்: மோடி அரசுக்கு மிக பெரிய சோதனை

    தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவை பிரதமர் நரேந்திர மோடியின் மூன்றாவது ஆட்சிக்காலத்தில் ஏற்பட்ட முக்கிய அரசியல் சவாலாக சர்வதேச செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸ் விவரித்துள்ளது. பொதுமக்களின் அழுத்தத்திற்கு எளிதில் பணியாத தலைவராக அறியப்படும் மோடி அரசில் தர்மேந்திர பிரதானின் ராஜினாமா மிக பெரிய திருப்பம் என்றும் ராய்ட்டர்ஸ் குறிப்பிட்டுள்ளது. மேலும், இளைஞர் வாக்காளர்கள் பாஜகவுக்கு முக்கியமானவர்கள் என்பதையும், மாணவர்களின் அதிருப்தி அரசியல் ரீதியாக முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதையும் சுட்டிக்காட்டியுள்ளது.

    சிஎன்என்: மோடி அரசுக்கு அரிதான சவால்

    அமெரிக்க செய்தி நிறுவனமான சிஎன்என், இந்த ராஜினாமாவை மோடி அரசுக்கு ஏற்பட்ட அரிதான வரும் சவால் என்று குறிப்பிட்டுள்ளது. தேர்வு முறைகேடு மட்டுமல்லாமல், வேலைவாய்ப்பின்மை, இளைஞர்களின் பொருளாதார எதிர்காலம், அரசின் பொறுப்புணர்வு ஆகியவை இந்த போராட்டத்தின் பின்னணியில் இருந்ததாக சிஎன்என் தெரிவித்துள்ளது.

    Advertisement

    பிபிசி: மிகப்பெரிய மாணவர் இயக்கம்

    சமீபத்திய ஆண்டுகளில் நடந்த மிக பெரிய மாணவர் இயக்கங்களில் ஒன்றாக இந்த போராட்டத்தை பிபிசி குறிப்பிட்டுள்ளது. 1970களின் நவநிர்மாண் மாணவர் இயக்கத்துடன் ஒப்பிட்டு, இந்த போராட்டம் கல்வி, நிர்வாகம் மற்றும் நல்லாட்சி குறித்த பரவலான விவாதத்தை உருவாக்கியதாக தெரிவித்துள்ளது. இருப்பினும், இந்த இயக்கம் நீண்டகால அரசியல் சக்தியாக மாறுமா என்பது இன்னும் கேள்விக்குறிதான் என்றும் பிபிசி குறிப்பிட்டுள்ளது.

    தி கார்டியன்: பிரபலங்களின் மவுனம் ஏன்?

    அரசியல் தாக்கத்தை விட, இந்த போராட்டத்தின் போது இந்திய திரையுலக மற்றும் பிரபலங்களின் மவுனத்தை முக்கியமாக எடுத்துரைத்தது பிரிட்டனின் தி கார்டியன் நாளிதழ்!சர்வதேச பிரச்சினைகளுக்கு குரல் கொடுக்கும் பல பிரபலங்கள், மாணவர்கள் மீது நடந்த காவல்துறை நடவடிக்கைகள் குறித்து அமைதியாக இருந்ததாக அது விமர்சித்துள்ளது.

    Advertisement

    அல் ஜசீரா: வெளிப்படையான மக்கள் அதிருப்தி

    இந்த போராட்டம் என்பது மோடி அரசுக்கு எதிராக சமீப ஆண்டுகளில் வெளிப்பட்ட மிக தெளிவான மக்கள் அதிருப்தி என்று அல் ஜசீரா தெரிவித்துள்ளது. நீட் முறைகேடு விவகாரத்தில் தொடங்கிய இந்த இயக்கம், பின்னர் ஊழல், வேலைவாய்ப்பு, நிர்வாக குறைபாடுகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை உள்ளடக்கியதாக மாறியதாகவும், இளைஞர்களுக்கும் அரசுக்கும் இடையே உள்ள மிக பெரிய இடைவெளி இது வெளிச்சம் போட்டுக் காட்டியதாகவும் அல் ஜசீரா தெரிவித்துள்ளது.

    எஸ்சிஎம்பி: கல்லூரிகளை தாண்டிய இயக்கம்

    இந்த போராட்டம் கல்லூரி வளாகங்களை தாண்டி சமூக இயக்கமாக மாறியதாக சவுத் சைனா மார்னிங் போஸ்ட் குறிப்பிட்டுள்ளது. எதிர்க்கட்சிகள், சமூக அமைப்புகள் மற்றும் பொதுமக்களின் ஆதரவு கிடைத்ததால், இது வெறும் மாணவர் போராட்டமாக இல்லாமல்.. வேலைவாய்ப்பு, ஊழல் மற்றும் நல்லாட்சி குறித்த தேசிய அளவிலான விவாதமாக மாறியதாக அந்த ஊடகம் தெரிவித்துள்ளது.

    Advertisement

    ராய்ட்டர்ஸ் அரசியல் தாக்கத்தை முன்னிறுத்தியது. சிஎன்என் இளைஞர்களின் எதிர்காலத்தை வலியுறுத்தியது. பிபிசி வரலாற்றுப் பின்னணியுடன் ஒப்பிட்டது. தி கார்டியன் பிரபலங்களின் மவுனத்தை கேள்வி எழுப்பியது. அல் ஜசீராவும், எஸ்சிஎம்பியும் மக்கள் அதிருப்தி மற்றும் வேலைவாய்ப்பு நெருக்கடியை குறிப்பிட்டன. ஆக மொத்தம் சர்வதேச ஊடகங்கள் வெவ்வேறு கோணங்களில் இந்த போராட்டத்தை அணுகியிருந்தாலும், அதன் தாக்கம் மிக பெரியது என்பதில் அனைத்து சர்வதேச ஊடகங்களும் ஒரே கருத்தை பதிவு செய்துள்ளன.

    English Summary

    International media widely covered the NEET protest and Dharmendra Pradhan's resignation (உலக ஊடகங்கள் நீட் போராட்டம்): Reuters, BBC, CNN about neet protest in Tamil.