நான் உயிருடன் தான் இருக்கிறேன்.. உட்கார கூட முடியாத முடியல.. சோனம் வாங்சுக் உருக்கமான வீடியோ

  • டெல்லி: குருகிராமில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை வெற்று வரும் சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக், அங்கிருந்தபடி தனது காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடர்கிறார். இதற்கிடையே தான் இன்னும் உயிருடன் இருப்பதாக உருக்கமாக பேசி வீடியோ வெளியிட்டுள்ள சோனம் வாங்சுக், மாணவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க மாட்டார்கள் என்று மத்திய அரசு உறுதியளித்தால் உண்ணாவிரதத்தை முடித்துக்கொள்ளத் தயாராக இருப்பதாக அறிவித்துள்ளார்.

    Advertisement

    நீட் முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செயய வேண்டும் என்பதை வலியுறுத்தி சோனம் வாங்சுக் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார். ஜந்தர் மந்தரில் உண்ணாவிரதம் இருந்த அவரை டெல்லி போலீசார் வலுக்கட்டாயமாக அங்கிருந்து அகற்றியது. முதலில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், பிறகு நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

    Advertisement

    உயிருடன் இருக்கிறேன்

    இந்த சூழலில் தான் மருத்துவமனை படுக்கையில் படுத்தபடி சோனம் வாங்குச் மூன்று நிமிட வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். "நான் இன்னும் உயிருடன் இருக்கிறேன்" என்று வாங்கசுக் அந்த வீடியோவில் தனது பேச்சை ஆரம்பிக்கிறார். 25 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வருவதால் சுமார் 11 கிலோ உடல் எடையும், கணிசமான தசை வலிமையையும் இழந்துவிட்டதாக கூறிய அவர், தற்போது மருத்துவக் கண்காணிப்பில் இருப்பதாக தெரிவித்தார்.

    கடந்த திங்கள்கிழமை நடைபெற்ற 'சலோ சன்சத்' பேரணியில் பங்கேற்ற மாணவர்களின் பொறுமையையும், கட்டுப்பாட்டையும் வாங்சுக் பாராட்டினார். அவர் மேலும், "மாணவர்கள் மீது தடியடி நடத்தப்பட்ட போதிலும் அவர்கள் பதிலுக்கு வன்முறையில் ஈடுபடவில்லை. அவர்களின் அமைதியான போராட்டம் என்னை மிகவும் நெகிழ வைத்தது. அவர்கள் மீது நடத்தப்பட்ட கடுமையான போலீஸ் நடவடிக்கையை பார்த்த பிறகே எனது உண்ணாவிரதத்தைத் தொடர முடிவு செய்தேன்.

    Advertisement

    பழிவாங்கல் கூடாது

    அதேநேரம் மாணவர்கள் மீது மத்திய அரசு எந்தவித பழிவாங்கும் நடவடிக்கையும் எடுக்கக் கூடாது. ஆளுங்கட்சி அமைச்சர்கள் உட்பட பலர் உண்ணாவிரதத்தை முடிக்குமாறு என்னிடம் கேட்டுக் கொண்டுள்ளனர். நானும் அதை முடித்துவிட்டு எனது வேலையை பார்க்க விரும்புகிறேன். ஆனால், போராட்டத்தில் பங்கேற்ற மாணவர்கள் மீது வழக்குகள், கைது அல்லது வேறு எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படாது என்று அரசு உறுதியளிக்க வேண்டும். அந்த உத்தரவாதம் கிடைத்தால் இன்றே உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்வேன். இல்லையெனில், அதை தொடர்வதை தவிர வேறு வழியில்லை" என்றார்.

    கடிதம்

    முன்னதாக மத்திய அமைச்சர்கள் ஜே.பி. நட்டா மற்றும் ஜிதேந்திர சிங் ஆகியோருக்கு அவர் எழுதிய கடிதமும் வெளியிடப்பட்டது. மருத்துவமனைக்கு வந்து தன்னை சந்தித்ததற்காக இருவருக்கும் நன்றி தெரிவித்த அவர், மாணவர்கள் மீது எந்தவித பழிவாங்கும் நடவடிக்கையும் எடுக்கப்படாது என்று உறுதியளிக்குமாறு கேட்டுக் கொண்டிருந்தார்.

    Advertisement

    அந்த கடிதத்தில் அவர் மேலும், "இந்த போராட்டத்தில் இளைஞர்கள் செய்த ஒரே குற்றம் நியாயமான கல்விக்கு குரல் கொடுத்தது மட்டும் தான். அதற்காக அவர்கள் மீது வழக்குகள் அல்லது சட்ட நடவடிக்கைகள் எடுக்கக் கூடாது. பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த சுமார் 65 எம்பிக்கள் தன்னை நேரில் சந்தித்தோ அல்லது கடிதம் மூலமாகவோ உண்ணாவிரதத்தை முடிக்குமாறு கேட்டு கொண்டு இருக்கிறார்கள்" என்பதையும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

    சோனம் வாங்சுக்

    கடந்த ஜூன் 28 முதல் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி முன்னெடுத்து வரும் போராட்டத்தில் இணைந்துள்ள சோனம் வாங்சுக், நீட் உள்ளிட்ட தேர்வுகளில் சமீப காலமாக நடக்கும் முறைகேடுகளுக்கு மத்திய அரசு பொறுப்பேற்க வேண்டும் என்றும் கல்வி முறையில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகிறார். மேலும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி அவர் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகிறார்.

    English Summary

    Social activist Sonam Wangchuk ready to end his indefinite hunger strike demands no action against students(சோனம் வாங்சுக் உடல்நிலை வீடியோ): Sonam Wangchuk health latest news in tamil.