ஐஐடி நுழைவு தேர்வு லீக் ஆனதே இல்லை.. நீட் மட்டும் சிக்குவது ஏன்? சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி நறுக்

  • டெல்லி: நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு சர்ச்சை நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், JEE தேர்வில் இதுவரை ஒருமுறைகூட வினாத்தாள் கசிவு நடக்கவில்லை என்றும், அந்த தேர்வில் பின்பற்றப்படும் பாதுகாப்பு நடைமுறைகளை மற்ற போட்டித் தேர்வுகளிலும் அமல்படுத்தலாம் என்றும் ஐஐடி மதராஸ் இயக்குநர் வி. காமகோடி தெரிவித்துள்ளார்.

    Advertisement

    நீட் தேர்வு வினாத்தாள் லீக் ஆவது இந்தாண்டு மிக பெரிய மாணவர் போராட்டத்திற்கு வழிவகுத்தது. இதற்கிடையே மீண்டும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க தேர்வு முறையில் சீர்திருத்தங்களை பரிந்துரைக்கப் பிரதமர் நரேந்திர மோடி 6 பேர் கொண்ட உயர்மட்ட குழுவை அமைத்துள்ளார். அந்த குழுவில் சென்னை ஐஐடி இயக்குநர் வி. காமகோடியும் இடம்பெற்றுள்ளார்.

    Advertisement

    ஐஐடி கேள்வித்தாள் கசிந்தது இல்லை

    சமீபத்தில் ஆங்கில செய்தி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ஐஐடி நுழைவு தேர்வு ஒரு முறை கூட கசிந்தது இல்லை என குறிப்பிட்ட காமகோடி, வல்லுநர் குழு அளித்த பரிந்துரைகளை நீட் தேர்வு முகமை முழுமையாக செயல்படுத்த தவறியதே கேள்வித்தாள் லீக் ஆக காரணம் என குறிப்பிட்டார். இது தொடர்பாக அவர் மேலும் பேசுகையில், "JEE தேர்வில் இதுவரை எந்தவிதமான வினாத்தாள் கசிவும் நடைபெறவில்லை. எனவே, அந்த தேர்வில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்ட பல அம்சங்களை மற்ற போட்டித் தேர்வுகளிலும் கொண்டு வர முடியும்.

    Advertisement

    1985ல் நான் JEE தேர்வு எழுதியபோது வெறும் 5,000 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். ஆனால், இப்போது ஆண்டுதோறும் சுமார் 15 லட்சம் மாணவர்கள் JEE தேர்வு எழுதுகிறார்கள். தேர்வு இவ்வளவு பெரியதாக வளரும்போது, அதன் நம்பகத்தன்மையை பாதுகாப்பது மிக பெரிய சவாலாக இருக்கும். நம்பகத்தன்மையை உறுதி செய்ய JEE தேர்வு பல கட்டங்களில் தொழில்நுட்ப மாற்றங்களை சந்தித்துள்ளது.

    பல்வேறு மாற்றங்கள்

    முதலில் எழுத்து தேர்வாக இருந்தது. பிறகு ஓஎம்ஆர் தாள்கள், அதன் பின்னர் இமேஜ் பிராசசிங் தொழில்நுட்பம், இப்போது முழுமையாக கம்ப்யூட்டர் அடிப்படையிலான தேர்வு முறைக்கு மாறியுள்ளோம். தேர்வு பாதுகாப்பாக நடப்பதை உறுதி செய்ய பல்வேறு நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தினோம். பயோமெட்ரிக் பதிவு, மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை, மின்னணு சாதனங்களை தேர்வு மையத்திற்குள் கொண்டு வருவதை தடுக்க சிறப்பு நடைமுறைகள் என பல பாதுகாப்பு அம்சங்கள் JEE தேர்வில் பயன்படுத்தப்படுகின்றன" என்றார்.

    Advertisement

    காரணம் என்ன

    2024ம் ஆண்டிலேயே நீட் வினாத்தாள் கசிந்து இருந்தது. அப்போது ராதாகிருஷ்ணன் குழு பல்வேறு பரிந்துரைகளை அளித்திருந்த நிலையில், அதை முழுமையாக செயல்படுத்தப்படாமல் விட்டதே இந்தாண்டு மீண்டும் நீட் வினாத்தாள் கசிய காரணம் என்று காமகோடி தெரிவித்தார். அவர் மேலும், "ராதாகிருஷ்ணன் குழு 250க்கும் மேற்பட்ட பரிந்துரைகளை வழங்கியிருந்தது. அதில் பல பரிந்துரைகள் பின்பற்றப்பட்டாலும் சில பரிந்துரைகள் பின்பற்றப்படவில்லை. அதுவே வினாத்தாள் லீக் ஆக காரணம்.

    லீக் ஆனது எப்படி?

    மே 3ஆம் தேதி முதலில் நடைபெற்ற நீட் தேர்வில்... கேள்வித்தாளை அச்சிடுவதில் தொடங்கி.. பாதுகாப்பாக அதை அனுப்புவது, தேர்வு மையங்களுக்கு எடுத்து செல்வது என அனைத்து நிலைகளிலும் கடுமையான பாதுகாப்பு நடைமுறைகளும் பின்பற்றப்பட்டன. இருப்பினும், NTA அலுவலகத்தில் இருந்தே கேள்வித்தாள் லீக் ஆகிவிட்டது என்பதையே சிபிஐ விசாரணை நமக்கு காட்டுகிறது" என்றார்.

    English Summary

    IIT Madras Director V. Kamakoti says JEE has never suffered a paper leak due to robust security measures(நீட் கேள்வித்தாள் லீக் குறித்து ஐஐடி இயக்குநர் கமகோடி): IIT Madras Director about JEE.