டெல்லி: 'SIR' நடவடிக்கையின் ஒரு பகுதியாக இளைஞர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க நாளை சிறப்பு முகாம் நடத்த வேண்டும் என்று இரவோடு இரவாக தேர்தல்ஆணையம் உத்தரவிட்டது. இந்நிலையில் தான், பதற்றமடைந்த தேர்தல் ஆணையம் நேற்று நள்ளிரவில் இளம் வாக்காளர்களுக்கான சிறப்புப் பதிவு முகாம்களை ஏற்பாடு செய்துள்ளதாக காங்கிரஸ் கட்சி கடுமையாக சாடி உள்ளது.
'சார்' எனும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், தேர்தல் ஆணையர்களான விவேக் ஜோஷி,சுக்பீர் சிங் சந்து ஆகியோரின் ஆட்சேபனைகளை கேட்டாமல் தன்னிச்சையாக செயல்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக இளம் வாக்காளர்கள் புதிதாக தங்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதை விரும்பாமல் ஞானேஷ் குமார் இந்த செயலை செய்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. ஞானேஷ் குமார் ராஜினாமா செய்ய வேண்டும் என்று பலரும் வலியுறத்தி வருகின்றன. இந்நிலையில் தான் நாளை டெல்லியில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. 'சார்' நடவடிக்கையின் ஒரு பகுதியாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 24ம் தேதி வரை விண்ணப்ப படிவம் 6யை 1 லட்சத்து 21 ஆயிரத்து 224 பேர் வழங்கி உள்ளனர். இதனால் நாளை சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பு நேற்று இரவு வெளியானது. இந்திய தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கையை காங்கிரஸ் கட்சி விமர்சனம் செய்துள்ளது. இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியின் தகவல் தொடர்பு பிரிவின் பொதுச்செயலாளரும், எம்பியுமான ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளதாவது: ''பதற்றமடைந்த தேர்தல் ஆணையம் நேற்று நள்ளிரவில் இளம் வாக்காளர்களுக்கான சிறப்பு பதிவு முகாம்களை ஏற்பாடு செய்யவும், அதுதொடர்பாக சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்யவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது. ஆனால், அதற்கு முன்பாக, 'படிவம் 6'-ல் சட்டவிரோத மற்றும் அரசியலமைப்புக்கு முரணான மாற்றத்தைச் செய்து, இளம் வாக்காளர்களைச் சேர்ப்பதை தலைமை தேர்தல் ஆணையரே கிட்டத்தட்ட தடுத்து சாத்தியமாக்கி இருந்தார். இளம் வாக்காளர்களின் பெற்றோர் அல்லது தாத்தா-பாட்டி ஆகியோரின் பெயர்கள் முந்தைய வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருந்தனரா என்று கேட்கும் கட்டாய கேள்வியை விண்ணப்ப படிவம் 6ல் புதிதாக சேரத்து இருந்தார்.இது 'ஜென்-ஸி' தலைமுறையை சேர்ந்த முதல் முறை வாக்காளர்களுக்கு தடையாக அமைந்தது. இது முற்றிலும் சட்டவிரோதமானது. விதிமீறல் 1: 2026 ஜூலை மாதத்தின் தொடக்கத்தில்அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதுமின்றி இணையவழி படிவம் ரகசியமாக மாற்றப்பட்டது. இதற்கு 2 தேர்தல் ஆணையர்களும் ஆட்சேபனைகள் தெரிவித்துள்ளனர். இது சட்டவிரோதம். இந்த மாற்றத்தை ரத்து செய்ய வேண்டும்.அப்போது தான் இளம் தலைமுறை மற்றும் முதல் தலைமுறை வாக்காளர்கள் எந்த பிரச்சனையின்றி பெயர்களை வாக்காள்பட்டியலில் சேர்க்க முடியும் என்று சுட்டிக்காட்டினர். ஆனால் தலைமை தேர்தல் ஆணையர் அதனை கண்டுக்கொள்ளவில்லை. தெரிந்தே சட்டத்தை மீறியுள்ளார். அவர் தொடர்ந்து அந்த பதவியில் நீடிப்பது இந்திய மக்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும். இதனால் உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து இந்த விவகாரத்தை கையில் எடுத்து தலைமை தேர்தல் ஆணையரை பொறுப்பேற்க செய்யவேண்டும். மேலும் ராகுல் காந்தி கூறியது போல் ஞானேஷ் குமார் தனது பதவியை ராஜினாமா செய்துதுவிட்டு 'அப்ரூவர்' ஆக மாற வேண்டும். இத்தகைய செயலை இந்திய இளைஞர்கள் வரவேற்பார்கள்'' என்று கூறியுள்ளார்.
விதிமீறல் 2: விண்ணப்ப 'படிவம் 6'-ல் ஏதேனும் திருத்தம் மேற்கொள்வதற்கான அதிகாரம் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு இல்லை. 'மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1950'-ன் படி, இந்த அதிகாரம் மத்திய அரசிடம் மட்டுமே உள்ளது. இது தேர்தல் ஆணையத்தின் அப்பட்டமான அதிகார வரம்பு மீறலாகும்.
விதிமீறல் 3: 'வாக்காளர் பதிவு விதிகள், 1960'-ன் கீழ் இந்த படிவத்தில் மாற்றம் கொண்டு வர விதிகளில் திருத்தம் செய்யப்பட வேண்டும். அரசால் நாடாளுமன்றம் வழியாக தான் விதிகளில் மாற்றம் செய்ய முடியும். ஆனால் விதிகளில் திருத்தம் செய்யாமலே மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. குறிப்பாக பதற்றமடைந்த பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரின் தூண்டுதலின் பேரில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் தன்னிச்சையாக இதனை செய்துள்ளார்.