ஈரானுக்கு பயணம் வேண்டாம்.. அங்குள்ள இந்தியர்கள் உடனே வெளியேறுங்கள்.. மத்திய அரசு அவசர அறிவுறுத்தல்

  • டெல்லி: இஸ்ரேல் - ஈரான் இடையேயான மோதல் மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரானுக்கு பயணம் செய்ய வேண்டாம் என்றும், தற்போது அங்கு இருக்கும் இந்தியர்கள் கிடைக்கக்கூடிய போக்குவரத்து வசதிகளை பயன்படுத்தி உடனடியாக வெளியேற வேண்டும் என்றும் இந்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

    Advertisement

    இது தொடர்பாக தெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள சமீபத்திய சூழ்நிலையை கருத்தில் கொண்டு, இந்தியர்கள் யாரும் ஈரானுக்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்ற முந்தைய அறிவுறுத்தல் மீண்டும் வலியுறுத்தப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    மேலும், தற்போது ஈரானில் தங்கி இருக்கும் இந்தியர்கள், விமானம் உள்ளிட்ட கிடைக்கக்கூடிய போக்குவரத்து வசதிகளை பயன்படுத்தி விரைவாக அந்நாட்டை விட்டு வெளியேறுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

    இன்று அதிகாலை இஸ்ரேல் - ஈரான் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளதால் மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. லெபனானை தாக்கிய இஸ்ரேல் மீது ஈரான் பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தியது. ஈரானின் இந்த தாக்குதலுக்கு பதிலடியாக தலைநகர் தெஹ்ரான், தெஹ்ரான் விமான நிலையம் அருகேயும் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியது.

    ஈரானின் தென்மேற்கு பகுதியில் உள்ள மஹ்ஷஹர் நகரில் இருக்கும் பெட்ரோ கெமிக்கல் ஆலை உள்ளிட்ட பல இடங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதற்கு பதிலடியாக, இஸ்ரேல் ராணுவ தளங்களை குறிவைத்து ஈரான் ஏவுகணை தாக்குதலை நடத்தியதாக கூறப்படுகிறது. இரு நாடுகளும் தாக்குதல் நடத்தியதை உறுதிப்படுத்தியுள்ள நிலையில், மத்திய கிழக்கில் மீண்டும் போர் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    Advertisement

    ஏற்கனவே கடந்த ஏப்ரல் மாதத்தில் இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலுக்கு பிறகு போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்திருந்தது. தற்போது மீண்டும் தாக்குதல்கள் தொடங்கியுள்ளதால், அப்பகுதியில் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த சூழ்நிலையை கருத்தில் கொண்டு, இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மத்திய அரசு இந்த அவசர பயண அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது.

    English Summary

    India has advised its citizens in Iran to leave the country immediately using available transport facilities as tensions between Israel and Iran escalate. Fresh missile exchanges and retaliatory strikes have heightened fears of a wider conflict in the Middle East.