திமுக ஆப்சென்ட்.. இந்தியா கூட்டணி கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பது உறுதி! காங். சொன்ன மேட்டர்

  • டெல்லி: நீட், சிபிஎஸ்இ தேர்வு குளறுபடிகள் மற்றும் எரிபொருள் விலை உயர்வு உள்ளிட்ட விஷயங்களுக்கு எதிராக போராட்டங்களை நடத்த எதிர்க்கட்சிகள் தேசிய அளவில் தயாராகி வருகின்றன. இப்படி இருக்கையில், நாளை இந்தியா கூட்டணி கட்சிகளின் கூட்டம் நடைபெறுகிறது. இதில் 23 கட்சிகள் பங்கேற்கும் என்று காங்கிரஸ் தெரிவித்திருக்கிறது.

    Advertisement

    டெல்லியில் உள்ள கான்ஸ்டிடியூஷன் கிளப்பில் நாளை மதியம் 12 மணிக்கு இந்தியா கூட்டணியின் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதை அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் (TMC) உள்ளிட்ட 23 அரசியல் கட்சிகள் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

    Advertisement

    இந்திய நாட்டை போலவே, இந்தியா கூட்டணியும் அதன் பன்முகத்தன்மை மற்றும் வேற்றுமைகளுக்கு மத்தியிலும் தொடர்ந்து ஒற்றுமையுடன் உறுதியாக நிற்கிறது என்று ஜெய்ராம் ரமேஷ் தனது 'X' பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    தேர்தல் பின்னடைவுகள் மற்றும் சில மாநிலங்களில் தொகுதிப் பங்கீட்டு மோதல்கள் இருந்தாலும், பாஜகவுக்கு எதிரான பொதுவான கொள்கையில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றாகவே செயல்படும் என்று அவர் விளக்கியுள்ளார்.

    காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் மற்றும் உத்தவ் தாக்கரே உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் இதில் பங்கேற்கின்றனர். ஆனால் திமுக பங்கேற்காது என்று திட்டவட்டமாக கூறியிருக்கிறது.

    Advertisement

    தமிழக சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, தங்களுக்குத் துரோகம் இழைத்துவிட்டு தமிழக வெற்றிக் கழகத்துடன் (TVK) காங்கிரஸ் கைகோர்த்ததாக கூறி, திமுக தனது கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது. காங்கிரஸின் நடவடிக்கையால் திமுக தொண்டர்கள் காயமடைந்துள்ளதால் டெல்லி கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என திமுக மூத்த தலைவர் டி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

    அதேபோல அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியும் தற்போதைய சூழலில் இக்கூட்டத்தில் பங்கேற்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. கேரளா தேர்தல் பிரச்சாரத்தின் போது, சிபிஎம் கட்சி பாஜகவுடன் ரகசிய உடன்பாடு வைத்துள்ளதாகக் காங்கிரஸ் தலைவர்கள் குற்றம் சாட்டியதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிபிஎம் பொதுச்செயலாளர் எம்.ஏ. பேபி, கார்கேவுக்குக் கடிதம் எழுதியுள்ளார். இருப்பினும், கூட்டணியின் ஒற்றுமைக்காக சிபிஎம் எம்பி ஜான் பிரிட்டாஸ் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களின் தரப்பு நியாயத்தை முன்வைப்பார் எனத் தெரிகிறது.

    Advertisement

    ஏன் இந்த கூட்டம்?

    கடந்த 2014 முதல் மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜக தற்போது நெருக்கடியான சூழலை எதிர்கொண்டிருக்கிறது. நீட் தேர்வு மற்றும் சிபிஎஸ்இ தேர்வு குளறுபடிகள் மாணவர்களை டென்ஷன் ஆக்கியிருக்கிறது. அதேபோல, இந்த குளறுபடிகளை எதிர்த்து கரப்பான் பூச்சி ஜனதா கட்சி என்கிற அமைப்பு போராட்டத்தை நடத்தியிருக்கிறது. இருப்பினும் காங்கிரஸ் ஒருங்கிணைந்த போராட்டத்தை முன்னெடுக்கவில்லை. இதனையடுத்து போராட்டத்தை நடத்த எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கவே இந்த கூட்டத்தை காங்கிரஸ் நடத்துகிறது.

    English Summary

    INDIA Bloc: Opposition parties are gearing up for nationwide protests against issues such as irregularities in NEET and CBSE exams and the hike in fuel prices. Against this backdrop, a meeting of the INDIA alliance parties is scheduled for tomorrow; the Congress has stated that 23 parties will participate in it.