டெல்லி: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தில் முறைகேடுகள் நடந்துள்ளதாக கூறி வரும் இந்தியா கூட்டணி, அடுத்தகட்ட போராட்டங்களை திட்டமிட இன்று மாலை ஆலோசனை கூட்டத்தை நடத்துகிறது. தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்துவதுடன், 'வாக்குத் திருட்டு' பிரச்சாரத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வது குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது.
இப்போது நாடு முழுக்க தலைமை தேர்தல் ஆணையர் விவகாரம் தான் பெரிதாக வெடித்துள்ளது. எஸ்ஐஆர் விவகாரத்தில் தலைமை தேர்தல் ஆணையர் தன்னிச்சையாக செயல்பட்டார் என்பதே பிரதான குற்றச்சாட்டு. இதை வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் மிக பெரியளவில் போராட்டங்களை நடத்தி வருகிறது.
இந்த விவகாரத்தில் இந்தியா கூட்டணி ஒருங்கிணைந்தே போராட்டங்களை நடத்தி வருகின்றன. இதற்கிடையே அடுத்தகட்ட போராட்டங்களை திட்டமிட இன்று மாலை ஆலோசனை கூட்டத்தை நடத்துகிறது. ஞானேஷ் குமார் விவகாரம், வாக்குத் திருட்டு பிரச்சாரத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வது குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், நவம்பர் 1ஆம் தேதி டெல்லியில் நடைபெறவுள்ள இந்தியா கூட்டணியின் பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்யப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் வாக்காளர் பட்டியலின் சிறப்பு தீவிர திருத்தத்தில் முறைகேடுகள் நடைபெறுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. தேர்தல் முறைகேடுகளுக்கு தேர்தல் ஆணையம் துணைபோவதாகக் குற்றம்சாட்டும் இந்தியா கூட்டணி, தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது. இந்த விவகாரத்தில் ஞானேஷ் குமார் மட்டுமே பொறுப்பானவர் அல்ல என்றும் அவருக்குப் பின்னால் வேறு நபர்களும் இருக்கலாம் என்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோர் கடந்த 10 மாதங்களில் எஸ்ஐஆர் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் குறைந்தது 14 முறை ஆட்சேபனைகளை பதிவு செய்ததாக வெளியான தகவல்களே இதற்கு முக்கிய காரணம். இதையடுத்து தலைமை தேர்தல் ஆணையர் ராஜினாமா செய்ய வேண்டும் என்பதை எதிர்க்கட்சிகள் தீவிரமாக எழுப்பி வருகின்றன. எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி இது தொடர்பாக தீவிர போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார். முன்னதாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு தான் ராகுல் காந்தி தனது இல்லத்தில் இந்தியா கூட்டணித் தலைவர்களுக்கு தேநீர் விருந்து அளித்தார். அப்போது நடைபெற்ற ஆலோசனைக்கு பிறகு, தேர்தல் முறைகேடுகளுக்கு எதிரான போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதுடன், இதில் அரசுக்கு எல்லா வழிகளிலும் அழுத்தம் கொடுக்க முடிவு செய்யப்பட்டன. அதன்படியே ஒரு பக்கம் தர்னா உள்ளிட்ட போராட்டங்கள், இன்னொரு பக்கம் சட்ட போராட்டம் என எல்லாம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.ஆலோசனை
எதிர்க்கட்சிகள்
பின்னணி
ராகுல் காந்தி