ஹார்முஸ் மூடினாலும் கவலையில்லை! பேக்கப் இருக்கு.. 'worst-case' வந்தால்.. ஹர்தீப் சிங் பூரி சொன்ன பதில்!

  • மத்திய கிழக்கில் இஸ்ரேல் - ஈரான் இடையான போர் தொடர்ந்து அதிகரித்து வகும் வேளையில் உலக நாடுகள் அனைத்தும் பெரும் அச்சத்துடனும், கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்படும் என்ற பீதியுடன் உள்ளது. குறிப்பாக, சர்வதேசக் கச்சா எண்ணெய் போக்குவரத்தின் மிக முக்கிய வழித்தடமாக கருதப்படும் 'ஹார்முஸ் நீரிணை' (Strait of Hormuz) பகுதி வழியான கப்பல் போக்குவரத்து முற்றிலும் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    Advertisement

    இத்தகைய மிக மோசமான சூழலிலும் (Worst-case war scenario), இந்தியாவிற்கு எவ்வித எரிசக்தித் தட்டுப்பாடும் ஏற்படாது என்று மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அதிரடியான விளக்கத்தை அளித்துள்ளார்.

    Advertisement

    ஹார்முஸ் முடங்கினாலும் கவலையில்லை

    மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி சமீபத்தில் அளித்த பேட்டியில், "வளைகுடா பகுதியில் நிலவும் கடுமையான போர் பதற்றத்தால், சர்வதேச எண்ணெய் விநியோகத்தில் முக்கிய பங்கு வகிக்கும் ஹார்முஸ் நீரிணைப் ஒட்டுமொத்தமாக மூடப்பட்டால் கூட, அதனால் ஏற்படும் பாதிப்புகளை இந்தியா குறைந்தது ஒரு மாத காலத்திற்கு (30 நாட்கள்) மிகவும் சுலபமாகக் கடந்துவிடும்" என்று உறுதியாகத் தெரிவித்துள்ளார்.

    இந்தியாவின் வலுவான உள்நாட்டு எரிபொருள் இருப்பு, உலகில் பல நாடுகளிடம் இருந்து இறக்குமதிக் கொள்கை மற்றும் வேகமாக விரிவடைந்து வரும் நாட்டின் உள்கட்டமைப்பு வசதிகள் காரணமாக சமாளிக்க முடியும் என தெரிவித்தார்.

    Advertisement

    எனர்ஜி பேக்கப்

    இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு கட்டமைப்பு குறித்துப் ஹர்தீப் சிங் பூரி பகிர்ந்துள்ள புள்ளிவிவரங்கள் ஒட்டுமொத்த சர்வதேசச் சந்தையையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளன. இந்தியாவின் அவசரக்கால மூலோபாயப் பெட்ரோலிய இருப்பு (Strategic Petroleum Reserves), எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளின் இருப்பு (Refinery Inventories) மற்றும் வர்த்தக ரீதியான பங்குகள் (Commercial Stocks) ஆகிய அனைத்தையும் சேர்த்தால், இந்தியாவிடம் தற்போது ஒட்டுமொத்தமாகச் சுமார் 76 முதல் 80 நாட்களுக்குத் தடையின்றிப் பயன்படுத்துவதற்கான எனர்ஜி பேக்கப் இருப்பு கையில் தயாராக உள்ளது.

    மேலும், தற்போதைய கள நிலவரப்படி நாட்டின் ஒட்டுமொத்தத் தேவை கணக்கீட்டில் 60 நாட்களுக்கான கச்சா எண்ணெய், 60 நாட்களுக்கான எல்என்ஜி (LNG) மற்றும் 45 நாட்களுக்கான எல்பிஜி (LPG) சமையல் எரிவாயு இருப்பு பாதுகாப்பாகப் பராமரிக்கப்பட்டு வருகிறது. எனவே, குறுகிய கால விநியோகத் தடைகள் எதைக் கண்டும் இந்திய மக்கள் பயப்படத் தேவையில்லை என்று ஹர்தீப் சிங் பூரி கேட்டுக்கொண்டுள்ளார்.

    Advertisement

    மொசாம்பிக் மற்றும் யுஏஇ

    போர் வெடித்துள்ள வளைகுடா நாடுகளை மட்டுமே நம்பியிருக்காமல், மாற்றுப் பாதைகள் மற்றும் புதிய சர்வதேசக் கூட்டணிகளை இந்தியா ஏற்கனவே எரிபொருள் சப்ளைக்காக உருவாக்கியுள்ளது. அதன்படி, ஆப்பிரிக்க நாடான மொசாம்பிக்கில் (Mozambique) இருந்து இந்தியா பெறவுள்ள கூடுதல் இயற்கை எரிவாயு விநியோகம் நாட்டின் எரிசக்தி பாதுகாப்பை மேலும் பலப்படுத்தும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

    அதேபோன்று, அரபு அமீரகம் (UAE) போன்ற பிற முன்னணி வளைகுடா நாடுகள், அவசரக் காலங்களில் இந்தியாவிற்குத் தேவையான கூடுதல் எல்பிஜி (LPG) கார்கோ கப்பல்களைத் தடையின்றி விநியோகிக்க முழு ஒத்துழைப்பு வழங்க ஒப்புக்கொண்டுள்ளன.

    Advertisement

    உள்நாட்டு எல்பிஜி உற்பத்தி

    இந்த சர்வதேச நெருக்கடியை இந்தியா தனக்கான ஒரு மிகப்பெரிய வாய்ப்பாக மாற்றிக் கொண்டுள்ளது என்று குறிப்பிட்ட அமைச்சர் பூரி, "முன்பு நாளொன்றுக்குச் சுமார் 36,000 மெட்ரிக் டன்னாக இருந்த இந்தியாவின் உள்நாட்டு எல்பிஜி (LPG) சமையல் எரிவாயு உற்பத்தியை, தற்போது நாளொன்றுக்குச் சுமார் 54,000 மெட்ரிக் டன்னாக உயர்த்தியுள்ளது" என்ற தகவலையும் ஹார்தீப் சிங் தெரிவித்தார்.

    English Summary

    Petroleum Minister Hardeep Singh Puri said India has enough fuel reserves to manage a complete shutdown of the Strait of Hormuz for up to 30 days. The country currently holds 76-80 days of energy stocks, supported by diversified sourcing and increased domestic LPG production. ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டாலும் இந்தியா 30 நாட்கள் வரை சமாளிக்கும் அளவுக்கு எரிபொருள் இருப்பு உள்ளதாக மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.