மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு! நார்வே பத்திரிகையாளரால் சலசலப்பு! இந்திய வெளியுறவுத்துறை விளக்கம்

  • டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி நார்வே நாட்டுக்கு பயணம் செய்திருந்தபோது, இந்தியா மீது மனித உரிமை மீறல் குற்றச்சாட்டை முன்வைத்து பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர். இந்நிலையில் இது குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் விளக்கமளித்துள்ளது.

    Advertisement

    பிரதமர் நரேந்திர மோடி ஐரோப்பிய நாடுகளுக்கான தனது பயணத்தின் ஒரு பகுதியாக நார்வே நாட்டின் ஒஸ்லோ நகருக்குச் சென்றுள்ளார். அங்கு நார்வே பிரதமர் ஜோனாஸ் கர் ஸ்டோரே-உடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.

    Advertisement

    இந்தச் சந்திப்பின் போது, நார்வே நாட்டைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர் ஹெல்லா லிங் என்பவர், "இந்தியாவில் தொடர்ந்து மனித உரிமை மீறல்கள் நடப்பதாகக் கூறப்படும் சூழலில், உலக நாடுகள் இந்தியாவை எப்படி நம்பலாம்?" என்ற கேள்வியை எழுப்ப முயன்றார். ஆனால், பிரதமர் மோடி பத்திரிகையாளர் கேள்விக்கு எந்த பதிலும் அளிக்காமல் கடந்து சென்றுவிட்டார்.

    3 நாட்களில் இரண்டாவது முறையாக ஐரோப்பியப் பயணத்தில் இந்தியா மீது இத்தகைய விமர்சனம் வைக்கப்பட்டதால், இந்திய வெளியுறவுத்துறை இதற்கு மிக வலுவான பதிலை அளித்துள்ளது.

    இந்தக் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்துப் பேசிய இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் மேற்குப் பிரிவுச் செயலாளர் மற்றும் தூதரான சிபி ஜார்ஜ், இந்தியா மீதான புகார்களை முற்றிலுமாக மறுத்தார்.

    Advertisement

    இந்திய அரசமைப்புச் சட்டமானது, இறையாண்மைமிக்க, சோஷலிச, மதச்சார்பற்ற மற்றும் ஜனநாயகக் குடியரசுக்கு முழு உத்தரவாதம் அளிக்கிறது. நமது குடிமக்களுக்கு அடிப்படை உரிமைகளின் வாயிலாக நீதி, சிந்தனைச் சுதந்திரம், கருத்துரிமை, சமவாய்ப்பு மற்றும் வழிபாட்டுச் சுதந்திரத்தை நமது சட்டம் எப்போதுமே உறுதி செய்கிறது.

    சர்வதேச அளவில் எதிர்கொள்ளும் பல்வேறு சவால்களுக்குத் தீர்வு காண்பதில் இந்தியா மிக முக்கியப் பங்காற்றி வருகிறது. கொரோனா பேரிடர் காலத்தில் உலக நாடுகளுக்குத் தடுப்பூசிகளை வழங்கியது முதல் அண்மையில் வெற்றிகரமாக நடத்தப்பட்ட G20 உச்சி மாநாடு, 'வாய்ஸ் ஆஃப் குளோபல் சவுத்' மாநாடு வரை இந்தியாவின் நம்பகத்தன்மைக்குச் சான்றாகும்.

    Advertisement

    இந்தியாவின் பிரம்மாண்டமான பரப்பளவு மற்றும் பன்முகத்தன்மை குறித்து எந்தவொரு அடிப்படைப் புரிதலும் இல்லாத சில 'அறிவீனமான' சர்வதேசத் தன்னார்வ அமைப்புகள் வெளியிடும் ஒரிரு அறிக்கைகளை மட்டும் படித்துவிட்டு, சிலர் இப்படித் தவறான கேள்விகளை எழுப்புகிறார்கள்.

    உலகம் முழுவதும் உள்ள மக்கள் தொகையில் ஆறில் ஒரு பங்கு பேர் இந்தியாவில் வாழ்கிறார்கள். ஆனால், உலகப் பிரச்சனைகளில் ஆறில் ஒரு பங்குப் பிரச்சனைகள் கூட இங்கு இல்லை. பல நூற்றாண்டுகளாகவே இந்தியா ஒரு துடிப்பான ஜனநாயக சமூகமாக விளங்குவதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம் என்று அவர் பதிலளித்துள்ளார்.

    English Summary

    India: During Prime Minister Narendra Modi's visit to Norway, journalists raised questions alleging human rights violations in India. In this context, the Union Ministry of External Affairs has issued a clarification regarding the matter.