உலக வங்கியில் பாகிஸ்தானை விடவும் இந்தியாவுக்கு தான் கடன் அதிகம்.. ஆனா அது பிரச்சனையே இல்லையாம்!

  • டெல்லி: பாகிஸ்தானை காட்டிலும் மிக பெரிய கடனாளியாக இந்தியா இருப்பதாகவும் உலக வங்கியிடம் இந்தியாவின் கடன் நிலுவை தொகையே இதற்கு சாட்சி என சமீப காலமாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வந்தது. உண்மையில் உலக வங்கியிடம் பாகிஸ்தானை விட இந்தியா தான் அதிகம் கடன் வாங்கி இருக்கிறதா.. இதன் பின்னணி என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம்!

    Advertisement

    "உலக வங்கியிடம் இந்தியா அதிக கடன் வாங்கியுள்ளது... பாகிஸ்தானை முந்திவிட்டது" என்ற செய்தி சமீப காலமாக சமூக வலைத்தளங்களில் கவனம் பெற்றது. முன்னாள் ராஜ்யசபா எம்பியும், பிரசார் பாரதி முன்னாள் தலைமை செயல் அதிகாரியுமான ஜவஹர் சர்கார் கடந்த ஆகஸ்ட் 8ம் தேதி இது குறித்து போஸ்ட் போட்டிருந்தார். அதுவே விவாதமாக மாறியது.

    Advertisement

    உலக வங்கி

    உலக வங்கியின் டேட்டாவை பார்த்தால் இது உண்மை போலவே தெரியும். உலக வங்கியிடம் அதிக தொகையை நிலுவையாக வைத்திருப்பது இந்தியா என்பது உண்மைதான். மார்ச் 2026 நிலவரப்படி இந்தியாவின் உலக வங்கி கடன் சுமார் 34.35 பில்லியன். ஆனால், இதை மட்டுமே வைத்து இந்தியாவின் கடன் சுமை பாகிஸ்தானைவிட அதிகம் என்று முடிவு செய்வது சரியாக இருக்காது. ஏன் என்றால், இரு நாடுகளின் பொருளாதார அளவுகளுக்கு இடையே மிக பெரிய வித்தியாசம் உள்ளது.

    உலக வங்கியுடன் இந்தியாவின் உறவு சுதந்திரத்துக்குப் பிறகு உடனடியாக தொடங்கியது. 1949ம் ஆண்டு ஆகஸ்ட் 18ல் இந்தியாவுக்கு உலக வங்கி தனது முதல் கடனாக $34 மில்லியனை வழங்கியது. இந்த கடன் ரயில்வே மறுசீரமைப்புக்காக பயன்படுத்தப்பட்டது. ஆசியாவில் ஒரு நாட்டுக்கு உலக வங்கி வழங்கிய முதல் கடனும் இதுதான். இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டவர் விஜயலட்சுமி பண்டிட்.

    Advertisement

    இந்தியாவின் கடன்

    அதன் பிறகு இந்தியாவின் வளர்ச்சி பயணத்துடன் உலக வங்கி கடனும் வளர்ந்தது. 1950களில் மின்சாரம் மற்றும் ஸ்டீல் திட்டங்கள், 1960 மற்றும் 1970களில் விவசாயம் மற்றும் பசுமை புரட்சி, பின்னர் துறைமுகங்கள், சாலைகள், கல்வி, கிராமப்புற வளர்ச்சி, நகர்ப்புற போக்குவரத்து என பல்வேறு திட்டங்களுக்கு நிதியுதவி கிடைத்தது. சமீப ஆண்டுகளில் சரக்கு போக்குவரத்து வழித்தடங்கள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, சுகாதாரம், நகர்ப்புற வளர்ச்சி மற்றும் கங்கை மறுசீரமைப்பு போன்ற திட்டங்களுக்கும் உலக வங்கி நிதியளித்துள்ளது.

    சீராக உயர்ந்துள்ளது

    இந்தியா சமீப காலத்தில்தான் உலக வங்கியிடம் இருந்து அதிகளவில் கடன் பெற்றது என்பது உண்மை இல்லை.. 1969ம் ஆண்டிலேயே உலக வங்கியிடம் இருந்து அதிக கடன் பெற்ற நாடாக இந்தியா மாறிவிட்டது. 1970ல் உலக வங்கியில் இந்தியாவின் நிலுவை கடன் சுமார் $1.56 பில்லியன். இது 1980ல் $5.56 பில்லியனாகவும், 1990ல் $19 பில்லியனை தாண்டியும் சென்றது. 2000களில் இந்தியாவின் பொருளாதாரமும் வளர்ச்சியும் அதிகரித்ததால் கடன் அளவும் உயர்ந்தது. 2010ல் நிலுவை கடன் சுமார் $37 பில்லியனை தொட்டது. 2020ல் அது சுமார் $39.6 பில்லியனாக உயர்ந்தது. ஆனால் அதன் பிறகு ஒரு முக்கியமான மாற்றம் ஏற்பட்டுள்ளது.

    Advertisement

    புதிய கடன்கள்

    2020க்கு பிறகு இந்தியாவின் உலக வங்கி நிலுவை கடன் அதிகரிக்கவில்லை. மாறாக, அது குறைந்துள்ளது. மார்ச் 2026 நிலவரப்படி இந்தியாவின் நிலுவை கடன் சுமார் $34.35 பில்லியன் ஆகும். அதாவது 2020ல் இருந்த சுமார் $39.6 பில்லியனுடன் ஒப்பிடும்போது, 2026-ல் கடன் $5 பில்லியனுக்கும் மேல் குறைந்துள்ளது. அதே நேரத்தில் இந்தியா புதிய உலக வங்கி நிதியையும் தொடர்ந்து பெற்று வருகிறது. 2026 ஜூனில் தனியார் துறை வேலைவாய்ப்புகளை அதிகரித்து, பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் சீர்திருத்தங்களுக்காக இந்தியாவுக்கு $1.5 பில்லியன் நிதியை உலக வங்கி ஒப்புதல் அளித்தது.

    Advertisement

    இதில் தான் ஒரு முக்கியமான விஷயம் உள்ளது. புதிய கடன் ஒப்புதல் பெறுவது வேறு; நிலுவையில் இருக்கும் கடன் வேறு. ஒரு நாடு புதிய கடன்களை பெற்றுக்கொண்டே இருக்கலாம். அதே நேரத்தில் பழைய கடன்களை திருப்பி செலுத்துவதால் அதன் மொத்த நிலுவை கடன் குறையும். இரண்டுமே வேறு வேறு. இதனால் தான் இந்தியா புதிய கடனை பெற்ற போதிலும் இப்போது அதன் நிலுவை குறைந்துள்ளது.

    பாகிஸ்தான்

    பாகிஸ்தானும் உலக வங்கியிடம் அதிகம் கடன் பெற்ற நாடுகளில் ஒன்றாகவே இருக்கிறது. 2026 ஜூன் 30 நிலவரப்படி, பாகிஸ்தானின் உலக வங்கி திட்டங்களுக்கான மொத்த கமிட்மெண்ட் சுமார் $51.85 பில்லியன்! ஆனால் இங்கு ஒரு முக்கிய வேறுபாடு உள்ளது. கமிட்மெண்ட் என்பது நிலுவையில் உள்ள கடன் அல்ல. ஒரு திட்டத்துக்காக உலக வங்கி ஒப்புதல் அளித்த மொத்த தொகை கமிட்மெண்ட்.

    Advertisement

    இப்போது நமக்கு இருக்கும் டேட்டவை வைத்து பார்த்தால் பாகிஸ்தானின் உலக வங்கி கடன் இந்தியாவைவிட கணிசமாக குறைவாக இருப்பது போல தோன்றும். ஆனால் அதை மட்டுமே வைத்து கொண்டு இந்தியாவின் கடன் சுமை பாகிஸ்தானைவிட அதிகம் என்று கூற முடியாது. காரணம்.. இந்தியாவின் பொருளாதாரம் மிகப்பெரியது.! இந்தியாவின் பொருளாதாரம் சுமார் $4 டிரில்லியன். பாகிஸ்தானின் பொருளாதாரம் $400 பில்லியன். அதாவது இந்திய பொருளாதாரம் பாகிஸ்தானை விட கிட்டத்தட்ட 10 மடங்கு பெரியது.

    உண்மை என்ன

    ஒரு நாட்டிற்கு அதன் பொருளாதார சைஸை பொறுத்தே கடன் கிடைக்கும். இந்தியாவின் பொருளாதாரம் பெரியது. நிலையானது. இதனால் கடன் அதிகம் கிடைக்கிறது. ஆனால், பாகிஸ்தான் நிலைமை மொத்தமாக வேறாகவே இருக்கிறது. அதன் பொருளாதாரமே மிக மோசமாக இருக்கிறது. இதன் காரணமாகவே மொத்த கடன் நிலுவை தொகையை மட்டுமே வைத்து நிலைமை மோசம் என சொல்லிவிட முடியாது.

    சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் கடன் நிலுவை அடிப்படையில் உலக வங்கியிடம் அதிக தொகையை கடனாக வாங்கியது இந்தியா தான்! ஆனால், 4 டிரில்லியன் பொருளாதாரத்தை கொண்ட இந்தியாவின் கடன் $34.35 பில்லியனாக இருக்கிறது. மறுபுறம் பாகிஸ்தான் நாடே முடங்கும் அளவுக்கு போய் உலக வங்கியும், சர்வதேச நாணய நிதியமும் தலையிட்டு உதவும் நிலை கூட ஏற்பட்டது. எனவே, கடன் நம்பரை மட்டும் வைத்து நமது நிலை மோசம் என சொல்வது தவறானது!

    English Summary

    India outstanding World Bank debt stands at around $34.35 billion, higher than Pakistan(இந்தியா பாகிஸ்தான் கடன் ஒப்பீடு): India and Pakistan world Bank debt comparison.