டெல்லி: தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக டெல்லியில், இந்தியா கூட்டணி கட்சிகள் பிரம்மாண்ட பேரணியை நடத்தியிருக்கின்றன. இதற்கு பதிலடி கொடுத்திருக்கும் பாஜக, ஜனநாயகம் என்கிற பெயரில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அராஜகம் செய்கிறார் என்று பாஜக தேசிய தலைவரும் மத்திய அமைச்சருமான ஜே.பி.நட்டா விமர்சித்திருக்கிறார்.
ராகுல் காந்தியையும், காங்கிரஸ் கட்சியையும் நேரடியாக விமர்சித்திருக்கும் நட்டா.. "ராகுல் காந்தி நன்றாக கேட்டுக்கொள்ளுங்கள். இந்தியா ஒன்றும் நீங்கள் நினைத்த நேரத்தில் தீவைப்பு, கலவரம் அல்லது ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு சட்டம்-ஒழுங்கு இல்லாத நாடு கிடையாது. இது உலகின் பழமையான மற்றும் வலுவான ஜனநாயகம்" என்று கூறியிருக்கிறார்.
எதிர்க்கட்சிகளின் இந்த பேரணி ஜனநாயகம் என்ற பெயரில் நாட்டில் அராஜகத்தை தூண்டவும், பொருளாதாரத்தை பாதிக்கவும், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை கவிழ்க்கவும் வெளிநாட்டு சக்திகளின் தூண்டுதலின் பேரில் நடத்தப்படும் ஒரு திட்டமிட்ட சதி என்று அவர் குற்றம்சாட்டியுள்ளார். நவம்பர் 1ம் தேதி என்பது சீக்கியர் கலவரத்தின் நினைவு நாளாகும். இந்த துக்க நாளில் காங்கிரஸ் கட்சி, தனது அரசியல் ஆதாயத்திற்காக பேரணி நடத்துவது அவர்களின் அலட்சிய போக்கை காட்டுகிறது என்று பாஜக விமர்சித்துள்ளது. இந்தியா கூட்டணியின் பேரணிக்கு போட்டியாக.. பாஜக சார்பில் டெல்லியில் சீக்கியர் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களை நினைவு கூறும் வகையில், மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தலைமையில் தனி பேரணி நடத்தப்பட்டது. இதேபோல் மும்பையிலும், பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் இணைந்து.. மக்களாட்சியை காப்பாற்றுவோம், அராஜகத்தை ஒழிப்போம் என்ற முழக்கமிட்டு பேரணியை நடத்தினர். வாக்காளர் பட்டியலில் இருந்து சுமார் 13 கோடி முதல் 16 கோடி வாக்காளர்களின் பெயர்கள் முறைகேடாக நீக்கப்பட்டுள்ளதாக.. இந்தியா கூட்டணி தலைவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதற்கு காரணமான தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், உடனடியாக பதவி விலக வேண்டும் என்றும்.. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு பதிலாக வாக்கு சட்டம் முறையை கொண்டு வர வேண்டும் என்றும்.. அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இமாச்சலப் பிரதேச துணை முதலமைச்சர் முகேஷ் அக்னிஹோத்ரி, தங்களது மாநிலத்தில் இருந்து பேரணிக்கு ஆதரவாளர்களை ஏற்றி வந்த பேருந்துகள்.. மாசு கட்டுப்பாடு மற்றும் வரிவிதிப்பு என்ற பெயரில் டெல்லி எல்லையில் பாஜக அரசால் திட்டமிட்டு தடுக்கப்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளார். இந்த இரு தரப்பு அரசியல் பேரணிகள் மற்றும் பதட்டமான சூழலை கருத்தில் கொண்டு, டெல்லி முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. டெல்லி காவல்துறை மற்றும் துணை ராணுவ படையினர் சுமார் 10,000 பேர் பாதுகாப்பு பணிகளில் குவிக்கப்பட்டுள்ளனர். 144 தடை உத்தரவுக்கு இணையான தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேபோல கூட்டத்தை கண்காணிக்க சிசிடிவி, ட்ரோன்கள் மற்றும் AI கேமராக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது.