புற்றுநோய் பாதிப்புக்கு புதிய மருந்து.. 7 நிமிடங்களில் வேலை செய்யும்! இந்தியாவில் ஒரு டோஸ் எவ்வளவு?

  • டெல்லி: வெறும் 7 நிமிடங்களில் புற்றுநோய் சிகிச்சை பெறும் டெசென்ட்ரிக் எனப்படும் அட்சோலிசுமாப் மருந்தை இந்தியாவின் ரோச் பார்மா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இது இந்தியாவில் புற்றுநோய் சிகிச்சைத் துறையில் ஒரு புதிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது. புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த மருந்து பெரிய ஆறுதலாக இருந்தாலும் இதன் விலை கவலை அளிப்பதாக உள்ளது.

    Advertisement

    நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்படும் நபர்களுக்கு அளிக்கப்படும் கீமோதெரபி சிகிச்சைக்கு மாற்றாக புதிய வகை நோய் எதிர்ப்பு மருந்தான டெசென்ட்ரிக் எனப்படும் அட்சோலிசுமாப் மருந்தை இந்தியாவின் ரோச் பார்மா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

    Advertisement

    புற்று நோய் பாதிப்புகளுக்கு தற்போது கீமோதெரபி சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த சிகிச்சை முடிய பல மணி நேரங்கள் தேவைப்படும். இதற்கு மாற்றாக தற்போது 7 நிமிடங்களில் தீர்வு காணக்கூடிய புதிய டெசென்ட்ரிக் எனப்படும் அட்சோலிசுமாப் மருந்தை இந்தியாவின் ரோச் பார்மா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவில் புற்றுநோய் சிகிச்சைத் துறையில் ஒரு புதிய மைல்கல்லாக இது பார்க்கப்படுகிறது.

    நுரையீரல் புற்று நோயாளிகளுக்கு நோயெதிர்ப்புச் சக்தி சிகிச்சையை இன்னும் விரைவாகவும், எளிதாகவும் மாற்றுவதற்காக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த புதுமையான சிகிச்சையில் பயன்படுத்தப்படும் அட்சோலிசுமாப் மருந்து, பிடி எல் -1 எனப்படும் ஒரு சிறப்புப் புரதத்தைத் தடுத்து செயல்படுகிறது. புற்றுநோய் செல்கள் இந்த புரதத்தை ஒரு மறைமுகக் கவசம்போல் பயன்படுத்தி, உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்திடமிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்கின்றன.

    Advertisement

    புற்றுநோய் செல்களை அடையாளம் கண்டு

    இந்த பிடி எல் -1 புரதம் தடுக்கப்படும் போது, நோய் எதிர்ப்பு செல்கள் புற்றுநோய் செல்களை எளிதாக அடையாளம் கண்டு, அவற்றை திறம்பட தாக்குகின்றன. குறிப்பாக, பிடி எல் -1 அளவு அதிகமாக உள்ள கட்டிகளைக் கொண்ட நோயாளிகளுக்கு இந்த சிகிச்சை பெரும் நன்மை அளிக்கும் என்று மருத்துவர்கள் கருதுகின்றனர்.

    வழக்கமாக, நோயெதிர்ப்புச் சக்தி சிகிச்சை நரம்பு வழியாக (IV) செலுத்தப்படும். இதற்கு மருத்துவமனையில் பல மணி நேரம் ஆகும். ஆனால், இந்த புதிய ஊசி மருந்து தோலின் அடியில், பொதுவாகத் தொடைப் பகுதியில் செலுத்தப்படுவதால், சிகிச்சை ஏழு நிமிடங்களிலேயே முடிந்துவிடும். இது நோயாளிகளுக்கு மிகுந்த ஆறுதலையும், வசதியையும் அளிப்பதுடன், மருத்துவமனைகளில் காத்திருக்கும் நேரம், கூட்ட நெரிசல் மற்றும் மன அழுத்தத்தையும் கணிசமாகக் குறைக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

    Advertisement

    இம்மியூனோதெரபி சிகிச்சை

    சிகிச்சைக்கு ஆகும் இந்த குறைந்த நேரம், நோயாளிகள் சிகிச்சையை விடாமல் தொடர்ந்து பெறுவதற்கு பெரிதும் உதவும் என்று மருத்துவர்கள் நம்புகின்றனர். பல புற்றுநோயாளிகள் மருத்துவமனைக்கு மீண்டும் மீண்டும் சென்று, நீண்ட நேரம் சிகிச்சை பெறுவதால் உடல் மற்றும் மன அளவில் சோர்வடைகிறார்கள். இத்தகைய வேகமான அணுகுமுறை வயதானவர்களுக்கும், சிகிச்சை மையங்களிலிருந்து தொலைவில் வசிப்பவர்களுக்கும் மிகவும் எளிதானதாக அமையும்.

    இந்த சிகிச்சை, சிறிய செல் அல்லாத நுரையீரல் புற்றுநோய் (Non-Small Cell Lung Cancer - NSCLC) நோயாளிகளுக்காக சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் காணப்படும் நுரையீரல் புற்றுநோய்களில் பெரும்பாலானவை இந்த வகையைச் சேர்ந்தவை. இம்மியூனோதெரபி சிகிச்சை, உடலின் சொந்த நோய் எதிர்ப்பு மண்டலத்தைப் பயன்படுத்தி புற்றுநோயை எதிர்த்துப் போராடத் தூண்டுகிறது.

    Advertisement

    கவலை அளிக்கும் விலை

    இது பெரும்பாலும் ஆரோக்கியமான செல்களைப் பாதிக்காமல், கீமோதெரபியை விட குறைவான கடுமையான பக்க விளைவுகளை ஏற்படுத்துவதால், பல நோயாளிகளுக்கு இம்மியூனோதெரபி ஒரு விரும்பத்தக்க சிகிச்சை முறையாகும். ஆனால், அனைத்து நோயாளிகளும் இந்த சிகிச்சை அளிக்க முடியாது. மருத்துவர்கள் முதலில் நோயாளியின் புற்றுநோய் செல்களில் பிடி எல் -1 புரதத்தின் அளவு அதிகமாக உள்ளதா என்பதைப் பரிசோதிப்பார்கள்.

    பிடி எல் -1 அளவு அதிகமாக உள்ள நோயாளிகள் இந்த நோயெதிர்ப்புச் சக்தி மருந்தினால் அதிக நன்மைகளைப் பெறுவார்கள். நிபுணர்களின் கூற்றுப்படி, கிட்டத்தட்ட பாதி சிறிய செல் அல்லாத நுரையீரல் புற்றுநோய் நோயாளிகள் (NSCLC) இந்த சிகிச்சைக்கு தகுதி பெறும் வாய்ப்புள்ளது. புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த மருந்து பெரிய ஆறுதலாக இருந்தாலும் இதன் விலை, கவலை அளிப்பதாக உள்ளது.

    Advertisement

    ஒரு டோஸ் விலை ரூ.3.7 லட்சம்

    ஒரு டோஸ் மருந்துக்கு சுமார் ரூ.3.7 லட்சம் செலவாகிறது. பெரும்பாலான நோயாளிகளுக்கு சிகிச்சையின் போது சுமார் ஆறு டோஸ்கள் வரை தேவைப்படலாம். இதனால், மொத்த சிகிச்சை செலவு பல லட்ச ரூபாயாக உயர்ந்து, நடுத்தர மற்றும் குறைந்த வருவாய் பிரிவைச் சேர்ந்த குடும்பங்களுக்கு தாங்க முடியாத செலவை ஏற்படுத்தும்.

    இது குறித்து புற்றுநோய் நிபுணர்கள் கூறுகையில், இம்மியூனோதெரபி மருந்துகள் பொதுவாகவே விலை அதிகம். புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் மேம்பட்ட ஆராய்ச்சியில் பெரிய அளவிலான முதலீடுகள் தேவைப்படுவதே இதற்குக் காரணம். இந்தியாவில் நவீன நோயெதிர்ப்புச் சக்தி சிகிச்சைகளுக்கு ஒரு சுழற்சிக்கு பொதுவாக ரூ.1.5 லட்சம் முதல் ரூ.4 லட்சம் வரை செலவாகலாம் என அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

    English Summary

    Cancer Injection: Roche Pharma India has launched a new seven-minute cancer injection called Tecentriq for non-small cell lung cancer patients. The immunotherapy drug uses atezolizumab to help the immune system attack cancer cells. Though faster and more convenient than IV treatment, the injection costs around Rs 3.7 lakh per dose.