எல்லா வீட்லயும் ஏசி, ஃபேன் தான் ஓடுது! கோடை வெயிலால் எகிறிய மின் தேவை! சாதனை படைத்த இந்தியா!

  • டெல்லி: நாடு முழுவதும் கோடை வெயில் கடுமையாக அதிகரித்துள்ள நிலையில், இந்தியாவின் மின் தேவை வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 260 ஜிகா வாட் அளவுக்கு மின்சாரம் விநியோகிக்கப்பட்டதாக மத்திய மின்சாரத் துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம் நாட்டின் மின் பயன்பாட்டு விநியோகத்தில் புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர்.

    Advertisement

    தமிழகம், தெலுங்கானா, ஆந்திரப் பிரதேசம், டெல்லி, ராஜஸ்தான், பஞ்சாப் உள்ளிட்ட பல மாநிலங்களில் வெயிலின் தாக்கம் மிகவும் அதிகரித்துள்ளது. பல இடங்களில் வெப்பநிலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், மக்கள் அதிகளவில் குளிர்சாதன வசதிகளை பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.

    Advertisement

    குறிப்பாக வீடுகள், அலுவலகங்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட இடங்களில் குளிர்சாதன பெட்டிகள், ஏர் கண்டிஷனர், மின்விசிறி, ஏர் கூலர் போன்ற மின்சாதனங்களின் பயன்பாடு கணிசமாக அதிகரித்துள்ளது. இதன் தாக்கமாக மின் நுகர்வு திடீரென உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

    மின் தேவை

    மத்திய அரசின் தகவலின்படி, சமீபத்தில் நாட்டின் மொத்த மின் தேவை 267.37 ஜிகா வாட் என்ற அளவை எட்டியிருந்தது. அதனைத் தொடர்ந்து அடுத்த நாளே 260.45 ஜிகா வாட் மின்சாரம் விநியோகிக்கப்பட்டு புதிய உச்சநிலை பதிவு செய்யப்பட்டுள்ளது. முக்கியமாக, பகல் நேரங்களில் சூரிய ஒளி மின்சாரம் அதிகமாக உற்பத்தி செய்யப்பட்ட நேரத்திலேயே இந்த அளவுக்கு மின் தேவை ஏற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

    Advertisement

    கோடை வெயில்

    இருப்பினும், நாடு முழுவதும் பெரிய அளவில் மின்வெட்டு அல்லது மின் தடை ஏற்படாமல் தேசிய மின் விநியோக அமைப்பு நிலையை சமாளித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சாதனையைப் பற்றி மத்திய மின்சாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், "அனல் மின் நிலையங்களை மட்டும் நம்பாமல், சூரிய ஒளி மின்சாரம், காற்றாலை மின்சாரம், நீர்மின் உற்பத்தி, அணுமின் நிலையங்கள் மற்றும் எரிவாயு மின் உற்பத்தி ஆகிய அனைத்தையும் ஒருங்கிணைத்து செயல்பட்டதே இந்த வெற்றிக்குக் காரணம்" என்று தெரிவித்தனர்.

    மின்சாரம்

    நாட்டின் மொத்த மின் தேவையில் அனல் மின் நிலையங்களே மிகப்பெரிய பங்கை வகித்துள்ளன. சுமார் 1,74,565 மெகா வாட் மின்சாரம் அனல் மின் நிலையங்கள் மூலம் உற்பத்தி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், சூரிய ஒளி மின்சாரம் மூலமாக மட்டும் 56,204 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது மொத்த மின் தேவையில் 21 சதவீத பங்காகும். மேலும், நீர்மின் நிலையங்கள் மூலம் 11,422 மெகா வாட், காற்றாலை மூலம் 4,897 மெகா வாட், அணுமின் நிலையங்கள் மூலம் 6,293 மெகா வாட் மற்றும் எரிவாயு மின் நிலையங்கள் மூலம் 5,205 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    Advertisement

    மத்திய மின்சாரத்துறை

    மத்திய மின்சார அமைச்சகம் ஏற்கனவே இந்த கோடைக்காலத்தில் நாட்டின் மின் தேவை 271 ஜிகா வாட் வரை உயரக்கூடும் என்று கணித்திருந்தது. தற்போது அதனை நெருங்கும் வகையில் மின் பயன்பாடு அதிகரித்து வருவது அதிகாரிகளிடையே கவனத்தை ஈர்த்துள்ளது.

    இந்தியாவின் மின் தேவை

    இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், "இந்தியாவின் மின் உட்கட்டமைப்பு மிகவும் வேகமாக வளர்ந்து வருகிறது. அண்டை நாடுகளான பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை, நேபாளம், பூடான் உள்ளிட்ட நாடுகளின் மொத்த மின் தேவையை விட இந்தியாவின் மின் தேவை பல மடங்கு அதிகமாக இருந்தாலும், அதனை சீராக கையாளும் திறன் நாட்டுக்கு உருவாகியுள்ளது" என்றனர். மேலும் கோடை வெயில் இன்னும் சில வாரங்கள் நீடிக்கும் என்பதால், கூடுதல் மின் தேவையை சமாளிக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய மின்சார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    English Summary

    India has achieved a record power supply level as extreme summer heat pushes electricity demand sharply higher across multiple states and cities.