டெல்லி: இந்தியாவில் இந்த முறை வழக்கத்திற்கு மாறாகப் பருவமழை பெய்யத் தவறிவிட்டது. தென்மேற்கு பருவமழை நல்ல முறையிலேயே ஜூன் மாதம் தொடங்கியிருந்தாலும் கூட அது சடன் பிரேக் போட்டது போல நின்றுவிட்டது. நாட்டின் பெரும்பாலான மத்திய மற்றும் வட இந்தியப் பகுதிகளில் மழை இல்லாமல் போனது. கடைசி ஓரிரு நாட்களாக ஓரளவுக்கு மழை பெய்தாலும் இந்தாண்டு இயல்பு அளவுக்குக் கூட மழை பெய்யாது என்றே வானிலை ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.
இந்தியாவில் தென்மேற்கு பருவமழை ஜூன் 4ஆம் தேதி சற்றே தாமதமாகக் கேரள கரையை வந்தடைந்தாலும், நாட்டின் பெரும்பாலான பகுதிகள் இன்னும் மழைக்காகக் காத்துக் கொண்டிருக்கின்றன. கடந்த 146 ஆண்டுக்கால வானிலை வரலாற்றிலேயே இந்தாண்டு ஜூன் மாதம் தான் மிகவும் வறண்ட ஜூன் மாதங்களில் ஒன்றாகப் பதிவாகியுள்ளது.
ஜூன் 15ஆம் தேதிக்குள் நாட்டின் தெற்கு, கிழக்கு மற்றும் வடகிழக்குப் பகுதிகளில் பெரும்பாலான இடங்களுக்குப் பரவிய பருவமழை, அதன் பிறகு திடீரென ஸ்தம்பித்தது. இதனால் நாட்டின் பல பகுதிகளில் வழக்கமாகப் பெய்ய வேண்டிய மழையின் அளவில் 40 சதவீதம் வரை கடுமையான பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்கு நாட்டின் பல பகுதிகளில் வானம் மேகமூட்டமின்றி வறண்டு காணப்பட்டது. இதனால் குறிப்பாக மத்திய இந்தியாவில் வழக்கத்தை விட 60 சதவீதத்திற்கும் குறைவாகவே மழைப் பதிவாகியுள்ளது. தற்போது சில பகுதிகளில் பருவமழை மீண்டும் தீவிரமடையத் தொடங்கினாலும், ஜூன் மாதத்தில் ஏற்பட்ட மழைப் பற்றாக்குறையை ஈடுகட்ட இன்னும் சில காலம் பிடிக்கும் என்று தெரிகிறது. இந்தியாவில் பருவமழை பொய்த்துப் போவதற்குப் பின்னால் ஐந்து முக்கிய வானிலை காரணங்கள் உள்ளன. முதலாவதாகப் பூமத்திய ரேகையைச் சுற்றி நகரும் மேகக் கூட்ட அமைப்பான மேடன்-ஜூலியன் ஆஸிலேஷன் (MJO) இந்த முறை பலவீனமாகக் காணப்பட்டது. இது இந்தியப் பெருங்கடல் பகுதியை விட்டு விலகிச் சென்றதால் மழை பொழிவு குறைந்தது. இரண்டாவதாக, அரபிக்கடலில் இருந்து இந்தியாவிற்கு ஈரப்பதத்தைக் கொண்டு வரும் பலத்த காற்றான 'சோமாலி ஜெட்' (Somali Jet) மிகவும் பலவீனமாக வீசியது. மூன்றாவதாக வடமேற்கு இந்தியப் பாலைவனங்களில் இருந்து வெப்பமான வறண்ட காற்று மத்திய இந்தியாவை நோக்கி வீசி, மேகங்கள் மழையாகப் பொழிவதைத் தடுத்தது. நான்காவதாக மேற்கு மற்றும் கிழக்கு இந்தியப் பெருங்கடல்களின் வெப்பநிலை வேறுபாட்டைக் குறிக்கும் இந்தியப் பெருங்கடல் இருமுனை நடுநிலையாகவே நீடித்தது. ஐந்தாவதாக வங்கக் கடலில் வழக்கமாக உருவாகி மழையை நாட்டின் உள்நோக்கி இழுத்துச் செல்லும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலங்கள் இந்த முறை போதுமான அளவில் உருவாகவில்லை பல்வேறு ஊடகங்களில் எல் நினோ பற்றி பேசப்பட்டாலும், ஜூன் மாத மழைப் பற்றாக்குறைக்கு அது மட்டுமே முழுமையான காரணம் அல்ல. எல் நினோ என்பது பசிபிக் பெருங்கடலின் மத்திய மற்றும் கிழக்குப் பகுதிகள் வெப்பமடைவதைக் குறிக்கிறது. அமெரிக்காவின் நோவா அமைப்பு ஜூன் மாதத்தின் இரண்டாவது வாரத்தில் எல் நினோ உருவாவதை அறிவித்தது. இருப்பினும், இந்தியப் பருவமழை மீது எல் நினோவின் தாக்கம் பொதுவாக ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் தான் அதிகரிக்கத் தொடங்கும். எனவே, ஜூன் மாத பருவமழை தாமதத்திற்கும் எல் நினோவின் பங்கு மிகவும் குறைவே ஆகும். அதேநேரம் இப்போது நிலைமை கொஞ்சம் மாறி வருகிறது. தற்போது பருவமழை மீண்டும் புத்துயிர் பெறுவதற்கான சாதகமான அறிகுறிகள் தென்படுகின்றன. சோமாலி ஜெட் காற்று வலுவடைந்ததை அடுத்து, மும்பை மற்றும் மத்திய இந்தியப் பகுதிகளில் மழை மீண்டும் பெய்யத் தொடங்கியுள்ளது. இருப்பினும், இந்த ஆண்டின் ஒட்டுமொத்தப் பருவமழை இயல்பான மழையளவில் சுமார் 90 சதவீதம் மட்டுமே பதிவாக வாய்ப்புள்ளது. புவி வெப்ப மயமாதலால் வான் பரப்பில் கூடுதல் ஈரப்பதம் தேங்குவதால், நீண்ட வறண்ட காலத்திற்குப் பிறகு திடீரென்று கொட்டி தீர்க்கும் பெருமழை மற்றும் வெள்ளப் பெருக்கு போன்ற தீவிர வானிலை நிகழ்வுகள் இனி வரும் காலங்களில் அதிகரிக்கக்கூடும் என்றும் எச்சரிக்கப்படுகிறார்கள்..ஸ்தம்பித்தது
5 காரணங்கள்
எல் நினோ காரணமா?
ஆரம்பிக்கும் மழை