இந்தியாவை சூழும் புதிய பிரச்சனை! 64% நிலைமை மோசம்! சாட்டிலைட் படங்களில் தெரிய வந்த அதிர்ச்சி

  • டெல்லி: பொதுவாக தென்மேற்கு பருவமழை மூலமாகவே இந்தியாவின் பெரும்பகுதி கணிசமான மழையைப் பெய்யும். ஆனால், இந்த முறை வழக்கத்திற்கு மாற்றாகப் பெரியளவில் மழை இல்லாமல் இருக்கிறது. இந்த மாற்றத்திற்கு என்ன காரணம்.. இந்தாண்டு முழுக்கவே மழை இப்படி தான் இருக்குமா.. அல்லது நிலைமை விரைவில் சீராகுமா என்பது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்!

    Advertisement

    இந்தியாவின் உயிர்நாடியாகக் கருதப்படும் தென்மேற்குப் பருவமழை, இந்த ஆண்டு தொடங்கிய வேகத்திலேயே திடீரென மந்தமடைந்துள்ளது. ஜூன் மாதத் தொடக்கத்தில் தெற்கு மற்றும் மத்திய மாநிலங்களில் ஆரம்பித்த பருவமழை, தற்போது சாட்டிலைட் படங்களில் கூட காண முடியாத அளவுக்கு மறைந்து போயிருப்பது வானிலை ஆய்வாளர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

    Advertisement

    64% குறைவு

    இந்திய வானிலை ஆய்வு மையத்தின் சமீபத்திய டேட்டா சில அதிர்ச்சியூட்டும் உண்மையை வெளிப்படுத்துகின்றன. அதாவது ஜூன் 4 முதல் ஜூன் 15 வரையிலான காலகட்டத்தில், இந்தியா முழுவதும் சராசரியாக 53.7 மி.மீ மழை பெய்திருக்க வேண்டும். ஆனால், உண்மையில் பெய்துள்ள மழையளவு வெறும் 19.2 மி.மீ மட்டுமே. இது வழக்கத்தை விட 64% குறைவாகும். வானிலை வரைபடங்களில் இந்தியாவின் மத்திய, தெற்கு மற்றும் கிழக்குப் பகுதிகள் மஞ்சள் மற்றும் சிவப்பு நிறத்தில் குறிக்கப்பட்டுள்ளன. அதாவது இது அந்தப் பகுதிகளில் மழை மிகவும் குறைவாக இருப்பதைக் காட்டுகிறது.

    Advertisement

    சாட்டிலைட் போட்டோ

    INSAT-3DS செயற்கைக்கோள் ஜூன் 15ம் தேதி எடுத்த படங்கள் ஒரு விசித்திரமான சூழலைக் காட்டுகின்றன. வழக்கமாகப் பருவமழைக் காலத்தில் இந்தியா முழுவதும் அடர்ந்த மேகக்கூட்டங்கள் போர்வை போலப் போர்த்தியிருக்க வேண்டும். ஆனால், தற்போது தென்னிந்தியா மற்றும் மத்திய இந்தியாவின் பெரும்பகுதி மேகங்கள் இன்றித் தெளிவாகக் காணப்படுகிறது.

    மழை மேகங்கள் அனைத்தும் இமயமலைப் பகுதிகள், வடகிழக்கு இந்தியா மற்றும் இந்தோ-கங்கை சமவெளியின் வடக்குப் பகுதிகளில் மட்டுமே குவிந்துள்ளன. அரபிக்கடல் வழியாக வீசும் பருவமழைக் காற்று மிகவும் பலவீனமாகவும், சிதறியும் காணப்படுகிறது.

    பருவமழை குறைவது ஏன்

    கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களுக்குள் பருவமழை நுழைந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டாலும், அங்கு போதிய மழை பெய்யவில்லை. இதற்குக் கடலில் ஈரப்பதம் இல்லாதது காரணமல்ல.. மாறாக, வளிமண்டலத்தின் மேல் அடுக்கில் நடக்கும் ஒரு மாற்றம் தான் காரணம் என்று வானிலை நிபுணர்கள் கூறுகின்றனர்.

    Advertisement

    வளிமண்டலத்தின் மேல் அடுக்கில் மிக வேகமாக வீசும் மேற்கத்திய ஜெட் காற்று (Westerly Jet Stream), வழக்கமான பாதையை விட்டு விலகி தெற்கு நோக்கி நகர்ந்து வந்துள்ளது. இதுதான் தற்போதைய சிக்கலுக்கு முக்கியக் காரணம்.

    பாதிப்பு

    பருவமழை சிறப்பாகப் பெய்ய வேண்டுமானால், 'கிழக்கத்திய ஜெட் காற்று' (Easterly Jet) வலுவாக இருக்க வேண்டும். இந்தக் காற்றுதான் நிலப்பரப்பில் காற்றை மேலே எழச் செய்து, இடி மின்னலுடன் கூடிய மழை மேகங்களை உருவாக்கும். ஆனால், தற்போது தெற்கு நோக்கி வந்துள்ள வலிமையான 'மேற்கத்திய காற்று', இந்த 'கிழக்கத்திய காற்றின்' செயல்பாட்டைத் தடுத்து நிறுத்துகிறது. இதனால், கடலில் போதிய ஈரப்பதம் இருந்தும், மேகங்கள் உருவாக முடியாமல் வளிமண்டலச் சூழல் மழையைத் தடுத்து வருகிறது.

    Advertisement

    எப்போது சீராகும்?

    அதேநேரம் வானிலை ஆய்வாளர்கள் இதை ஒரு தற்காலிக இடைவெளி என்றே அழைக்கிறார்கள். இது கடலில் ஏற்படும் மாற்றங்களால் உருவானது அல்ல.. வளிமண்டலத்தின் மேல் அடுக்கில் ஏற்பட்ட ஒரு தற்காலிக மாற்றமே. தற்போதைய வானிலை டேட்டாவை வைத்துப் பார்த்தால்.. இந்த வார இறுதியில் வளிமண்டலச் சூழலில் மாற்றம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கத்திய ஜெட் காற்றின் தாக்கம் குறைந்து, பருவமழைச் சுழற்சி மீண்டும் சீரடையும் போது, இந்தியா முழுவதும் பரவலான மழை பெய்யத் தொடங்கும். அதுவரை, இந்தியா மக்கள் பருவமழையின் வருகைக்காகக் காத்திருக்க வேண்டிய சூழல் நிலவுகிறது.

    English Summary

    India Meteorological Department reports a staggering 64% rainfall deficit(தென்கிழக்கு பருவமழையில் ஏற்படும் பாதிப்பு): India Southwest Monsoon problem latest news in tamil.