எதிரிகளுக்கு எச்சரிக்கை! 500 கிமீ பாயும்.. கண்ணிமைக்கும் நேரத்தில் பாயும் பிரளய் ஏவுகணை சோதனை வெற்றி

  • டெல்லி: இந்தியாவின் பாதுகாப்பு திறனை மேலும் வலுப்படுத்தும் வகையில், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பிரளய் ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. ஒடிசா கடற்கரையில் நேற்று நடத்தப்பட்ட இந்த சோதனையில், ஏவுகணை நிர்ணயிக்கப்பட்ட அனைத்து இலக்குகளையும் வெற்றிகரமாக எட்டியதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    Advertisement

    பாதுகாப்பு துறையில் நாம் மிக வேகமாக முன்னேறி வருகிறோம். கடந்த காலங்களில் சாதாரண துப்பாக்கி முதல் ஏவுகணைகள் வரை கிட்டத்தட்ட அனைத்து பாதுகாப்பு உபகரணங்களுக்கும் நாம் வெளிநாடுகளையே சார்ந்து இருக்க வேண்டி இருந்தது. இதுபோல பாதுகாப்பு துறைக்கு வெளிநாடுகளை சேர்ந்து இருப்பது நல்லதல்ல என்பதால் உள்நாட்டில் பாதுகாப்பு தொழில்நுட்பங்களை உருவாக்க முடிவு செய்யப்பட்டது.

    Advertisement

    சோதனை வெற்றி

    இதையடுத்து உள்நாட்டில் பாதுகாப்பு உபகரணங்களை தயாரிக்கும் பணிகளும் ஆய்வுகளும் தீவிரமாக நடந்து வருகிறது. இதற்கிடையே நமது பாதுகாப்பு திறனை மேலும் வலுப்படுத்த மற்றொரு ஏவுகணையை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பான டிஆர்டிஓ வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. ஒடிசா கடற்கரையில் உள்ள டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் தீவில் இருந்து காலை 11.10 மணியளவில் இந்த சோதனையை நடத்தப்பட்டது.

    டார்கெட் காலி

    சோதனையின்போது ஏவுகணையின் செயல்பாட்டை கண்காணிக்க சந்திப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை மையம் சார்பில் பல்வேறு கண்காணிப்பு கருவிகள் நிறுவப்பட்டன. அந்த டேட்டாவை ஆய்வு செய்தபோது பிரளய் ஏவுகணை அனைத்து டார்கெட்களையும் வெற்றிகரமாக தாக்கியது தெரிய வந்துள்ளது. இதையடுத்து முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பிரளய் ஏவுகணையை இந்திய ராணுவத்தில் இணைப்பதற்கான நடவடிக்கைகள் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Advertisement

    பிரளய் ஏவுகணை

    பிரளய் என்பது குறுகிய தூரம் வரை தரையில் உள்ள இலக்குகளை தாக்கும் திறன் கொண்ட, குவாசி- பாலிஸ்டிக் வகையை சேர்ந்த ஏவுகணையாகும். இது வெடிகுண்டு போன்ற ஆயுதங்களை சுமந்து சென்று தாக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஏவுகணை 150 கிமீ முதல் 500 கிமீ வரையிலான தொலைவில் உள்ள இலக்குகளை தாக்கும் திறன் கொண்டது. மேலும், 500 கிலோ முதல் 1,000 கிலோ வரையிலான எடையுள்ள வெடிபொருட்களை சுமந்து செல்லும் திறனும் இதற்கு உள்ளது.

    திட எரிபொருள் தொழில்நுட்பத்தில் இயங்கும் பிரளய் ஏவுகணையில்.. இலக்கை துல்லியமாக தாக்குவதற்கான மேம்பட்ட வழிகாட்டுதல் மற்றும் வழிசெலுத்தல் தொழில்நுட்பங்கள் இடம்பெற்றுள்ளன. வெவ்வேறு வகையான இலக்குகளை தாக்குவதற்கு ஏற்ற பல்வேறு வகையான ஆயுதங்களையும் இதில் பயன்படுத்த முடியும். ஹைதராபாத்தில் உள்ள ஆராய்ச்சி மையம் இம்ராத், டிஆர்டிஓவின் மற்ற ஆய்வகங்களுடன் இணைந்து இந்த ஏவுகணையை உருவாக்கியுள்ளது.

    Advertisement

    விரைவில் படைகளில் இணைப்பு?

    இந்த சோதனையை டிஆர்டிஓவின் மூத்த அதிகாரிகள், பாதுகாப்பு துறை நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் முப்படைகளை சேர்ந்த அதிகாரிகள் நேரில் பார்வையிட்டனர். சோதனை வெற்றியடைந்ததை தொடர்ந்து, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இதை உருவாக்கிய அதிகாரிகளுக்கு பாராட்டு தெரிவித்தார். இந்த சோதனையின் வெற்றியை தொடர்ந்து, பிரளய் ஏவுகணையை படைகளில் இணைக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என தெரிகிறது.

    English Summary

    DRDO successfully tested the indigenously developed Pralay quasi-ballistic missile from Dr APJ Abdul Kalam Island off the Odisha coast(பிரளய் ஏவுகணை சோதனையில் வெற்றி): Pralay Missile latest news in tamil.