டெல்லி: ஓமன் கடற்கரை அருகே இந்திய மாலுமிகள் இருந்த வணிகக் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலை தொடர்ந்து இந்தியாவுக்கான அமெரிக்க தூதரக பொறுப்பாளர் ஜேசன் மீக்ஸ் நேரில் அழைத்து கண்டனம் தெரிவித்து சம்மன் வழங்கி உள்ளது. அதோடு மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள இந்திய மாலுமிகளை பாதுகாக்க தேவையான நடவடிக்கையை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் எடுத்துள்ளது.
ஈரான் - அமெரிக்கா இடையே தொடர்ந்து மோதல் நடந்து வருகிறது. இருநாடுகளும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால் மத்திய கிழக்கு பிராந்திய கடலில் பதற்றம்நிலவி வருகிறது. கடந்த 4 நாட்களில் மட்டும் இந்திய மாலுமிகள் இருந்த 3 கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
அதன்படி ஜூன் 8ல் 'எம்.டி மாரிவெக்ஸ்' (MT Marivex) கப்பலில் நடத்தப்பட்ட தாக்குதலில் தீவிபத்து ஏற்பட்டது. இதில் இருந்த 24 இந்தியர்களும் பாதுகாப்பாக உள்ளனர். அதன்பிறகு ஜூன் 10ல் 'எம்.டி செட்டபெல்லோ' (MT Settebello) கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 3 இந்திய மாலுமிகள் உயிரிழந்தனர். ஜூன் 11ல் 'எம்.டி ஜல்வீர்' (MT Jalveer) என்ற கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 20 இந்திய மாலுமிகள் இருந்தனர். ஈரான் - அமெரிக்கா மோதலால் வளைகுடா மற்றும் ஓமன் கடல் பகுதிகளில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. கப்பல்கள் இயக்கம் குறைந்துள்ளது. சுமார் 18,000 இந்திய மாலுமிகள் வெவ்வேறு கப்பல்களில் அங்கு சிக்கி உள்ள நிலையில் பாதுகாப்பாக இருக்கும்படி கப்பல் போக்குவரத்து இயக்குநரகம் பாதுகாப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் தான் இத்தகைய தொடர் தாக்குதலால் நம் நாடு கடும் சினம் கொண்டுள்ளது. மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் இந்தியாவுக்கான அமெரிக்க தூதரக பொறுப்பாளர் ஜேசன் மீக்ஸ்ஸை நேரில் அழைத்து சம்மன் வழங்கி உள்ளனர். ஹார்முஸ் ஜலசந்தி, ஓமன் வளைகுடா மற்றும் அதனை சற்றிய பகுதிகளில் நிலவும் தாக்குதல்கள் தொடர்பான சம்மன் வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஒருமுறை அமெரிக்க தூதரை அழைத்து மத்திய வெளியுறவுத்துறை பேசிய நிலையில் தற்போது 2வதுமுறையாக அழைத்து சம்மன் வழங்கி உள்ளது. நம் நாட்டில் இருந்து மட்டும் உலகளவில் சுமார் 3.2 லட்சம் பேர் கப்பல்களில் மாலுமிகளாக பணியாற்றி வருகின்றனர். உலகளவில் அதிக மாலுமிகளை கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா 2வது இடம் வகிக்கிறது. இந்நிலையில் தான் தற்போது மத்திய கிழக்கு பிராந்திய கடல் பகுதிகளில் நிலவும் மோதல் இந்திய மாலுமிகளுக்கு பெரிய அச்சுறுத்தலாக பார்க்கப்படுகிறது. இதனால் இந்தியா கவலையடைந்துள்ளது. அதுமட்டுமின்றி கடல்சார் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், இந்திய மாலுமிகளின் பாதுகாப்பை பலப்படுத்தவும் இந்தியா தனது தூதரக ரீதியிலான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.