அருணாச்சல பிரதேசத்துக்குள் ராணுவ முகாம் அமைத்த சீனா? திட்டவட்டமாக மறுத்த இந்திய ராணுவம்!

  • டெல்லி: அருணாச்சல பிரதேசத்திற்குள் சீன ராணுவம் ஊடுருவி இந்திய எல்லைக்குள் ராணுவ முகாம்களை அமைத்துள்ளதாக வெளியாகி உள்ள செய்திகளை இந்திய ராணுவம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. இந்த செய்தி முற்றிலும் தவறானது. அடிப்படை ஆதாரமற்ற செய்தி இதுவாகும் என்று இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

    Advertisement

    நம் நாட்டிற்கும், சீனாவிற்கும் இடையே எல்லை பிரச்சனை உள்ளது. அருணாச்சல பிரதேசம் மற்றும் லடாக் பகுதிகளை சீனா உரிமை கொண்டாடி வருகிறது. மேலும் நம்நாட்டை சீண்டும் வகையில் இருநாட்டின் எல்லைகளில் சீனா தனது பகுதியில் ராணுவ கட்டமைப்புகளை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

    Advertisement

    இதற்கிடையே தான் நேற்று திடுக்கிட வைக்கும் வகையில் ஒரு தகவல் பரவியது. அதாவது சீன ராணுவம் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்துள்ளதோடு, இந்திய எல்லைக்குள் அந்த நாட்டின் ராணுவம் ராணுவ முகாம்களை அமைத்துள்ளது என தகவல்கள் பரவியது. சில ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டு இருந்தன.

    இது நம் நாட்டின் மக்களை அதிர வைத்தது. அதுமட்டுமின்றி மீண்டும் இந்தியா - சீனா இடையே எல்லை பிரச்சனை வெடிக்குமோ? என்ற அச்சத்தை ஏற்படுத்தியது. ஆனால் இந்த செய்திகளை இந்திய ராணுவம் முற்றிலுமாக மறுத்தது. இதுபற்றி இந்திய ராணுவம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், ''அருணாச்சல பிரதேசத்தில் சீன ராணுவம் சமீபத்தில் ஊடுருவி முகாம்கள் அமைத்துள்ளதாக சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன. இந்த செய்திகள் முற்றிலும் தவறானவை. அடிப்படை ஆதாரமற்றவை'' என கூறப்பட்டுள்ளது.

    Advertisement

    இந்த சர்ச்சைக்கு முக்கிய காரணமே 'நா வெல்ஃபேர் சொசைட்டி' வழங்கிய மனு தான். அருணாச்சல பிரதேசத்தின் அப்பர் சுபன்சிரி மாவட்டம் இந்திய - சீனா எல்லையில் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்தின் தாக்சிங் எனும் பகுதியை மையப்படுத்தி செயல்பட்டு வரும் 'நா வெல்ஃபேர் சொசைட்டி' சார்பில் கலெக்டரிடம் மனு ஒன்று வழங்கப்பட்டது. அதில், ''இந்திய பகுதிக்குள் சீன ராணுவம் நுழைந்து முகாம்கள் அமைத்துள்ளது. தாக்சிங் தாகாவில் எல்லையேரா பகுதிகளை ஆக்ககிரமித்துள்ள சீன ராணுவம் தனது படைகளின் இருப்பை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    நாங்கள் வேட்டையாவதற்கும் கால்நடைகளை மேய்ப்பதற்கும் பாரம்பரியமாக பயன்படுத்தி வந்த பகுதிகளில் சாலைகள், பாலங்கள் மற்றும் ராணுவ முகாம்கள் கட்டப்பட்டுள்ளது. ஓயிங் (Oying), சுஜார்தா பகுதியில் உள்ள பனியார் (Paniar), மார்பன் (Marpan), போத்ராங் ஏரி (Potrang Lake) மற்றும் தின்டிங்டாங் (Tindingtang) ஆகிய ஐந்து இடங்கள் சீனாவின் ஆக்கிரமிப்பின் கீழ் வந்துள்ளது.

    Advertisement

    இந்த இடங்கள் மதங்கள் சார்ந்து எங்களுக்கு முக்கிய இடமாக உள்ளது. இதனால் அருணாச்சல பிரதேசத்தில் சீனாவின் ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்த மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். எல்லையை பாதுகாப்பதில் இந்திய ராணுவத்தின் அர்ப்பணிப்பு உணர்வு எங்களுக்கு நன்றாக தெரியும். அதனை நாங்கள் மதிக்கிறோம். இருப்பினும் இந்திய பகுதியைத் தற்காக்க இன்னும் வலுவான நடவடிக்கை தேவை'' என கூறப்பட்டு இருந்தது.

    இதையடுத்து தான் அருணாச்சல பிரதேசத்தில் இந்திய பகுதிகளை சீன ராணுவம் ஆக்கிமரித்து முகாம் அமைத்துள்ளதாக செய்திகள் வெளியாகின. ஆனால் இந்த தகவலை முற்றிலுமாக இந்திய ராணுவம் மறுத்துள்ளது.

    English Summary

    Indian Army denied China encroachment in Arunachal Pradesh: The Indian Army has categorically denied reports claiming that the Chinese military has intruded into Arunachal Pradesh and established military camps within Indian territory. The Army stated that this report is completely false and entirely baseless.