டெல்லி: மத்திய அரசு சமீபத்தில் பாஸ்போர்ட் என்பது முழுமையான குடியுரிமைக்கான சான்று இல்லை எனக் கூறியது பெரிய விவாதமாக வெடித்துள்ளது. இதற்கிடையே பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் கார்டு என எல்லாமே இருந்தாலும் இவை எதுவும் குடியுரிமைக்கான ஆதாரம் இல்லை என்று சொல்கிறார்கள்.. அப்போது குடியுரிமைக்கான ஆதாரத்தைக் கொடுப்பது யார் என்று சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுந்துள்ளன.
இந்தியக் குடியுரிமைக்கான உறுதியான சான்று எது என்ற விவாதம் கடந்த சில ஆண்டுகளாகவே நடந்து வருகிறது. இதற்கிடையே நேற்றைய தினம் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் இது தொடர்பாக வெளியிட்ட அறிவிப்பு இந்த விவாதத்தை மீண்டும் கிளப்பியுள்ளது. இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அளித்துள்ள விளக்கம் பொதுமக்களிடையே பெரும் ஆச்சரியத்தையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
அதாவது பாஸ்போர்ட்டை என்பது ஒருவரது குடியுரிமையை உறுதிப்படுத்தும் ஆவணமாகக் கருத முடியாது என்று மத்திய வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது. பாஸ்போர்ட் என்பது சர்வதேச நாடுகளுக்குப் பயணத்திற்காக வழங்கப்படும் ஒரு ஆவணம் மட்டுமே என்றும் பாஸ்போர்ட் இருப்பது மட்டுமே ஒருவரை இந்தியக் குடிமகனாக சட்டப்பூர்வமாக உறுதிப்படுத்தாது என்றும் கூறப்பட்டு இருந்தது. பல்வேறு அரசு முகமைகள் மற்றும் போலீசாரின் விரிவான பின்னணி சரிபார்ப்புகளுக்கு பிறகே ஒரு நபருக்குப் பாஸ்போர்ட் வழங்கப்படுகிறது. அப்படியிருக்கும் போதும் கூட பாஸ்போர்ட் சர்வதேசப் பயணங்களை எளிதாக்கவும் வெளிநாடுகளில் அந்த நபரின் நேஷனாலிட்டியை நிலைநாட்டவும் மட்டுமே என்று வெளியுறவுத்துறை கூறியுள்ளது.. மத்திய அரசின் இந்த விளக்கம் பொதுமக்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. நமது நாட்டில் இந்தியக் குடிமகன்களுக்கு மட்டுமே பாஸ்போர்ட் தரப்படும் நிலையில், அதைக் குடியுரிமைக்கான சான்றாகக் கருத முடியாது என்று சொல்வதில் லாஜிக்கே இல்லை எனப் பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். மேலும், "அப்படியென்றால் நாம் இந்தியக் குடிமகன் என்பதற்கு எதுதான் உண்மையான சான்று?" என்ற கேள்வியைப் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்த விவகாரம் குறித்து மூத்த பத்திரிகையாளர் ராஜ்தீப் சர்தேசாயும் சில கேள்விகளை எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில், "என்னிடம் வாக்காளர் அடையாள அட்டை இருக்கிறது, ஆனால் அது குடியுரிமைக்கான சான்று இல்லை என்கிறார்கள். என்னிடம் ஆதார் கார்டு இருக்கிறது, அதுவும் குடியுரிமைக்கான சான்று இல்லை என்கிறார்கள். என்னிடம் பான் கார்டு இருக்கிறது, அதுவும் குடியுரிமைக்கான சான்று இல்லை என்கிறார்கள். என்னிடம் இந்தியப் பாஸ்போர்ட் கூட இருக்கிறது, ஆனால் அதுவும் நான் இந்தியக் குடிமகன் என்பதற்கான முழுமையான சான்று இல்லை என்கிறார்கள். அப்படியென்றால், எனக்கு யார் 'குடியுரிமைச் சான்றிதழ்' வழங்குவது? ஒரு அரசு அதிகாரியா? என் கேள்வி மிகவும் எளிதானது.. இங்குப் பிரச்சனை ஒரு சாதாரணக் குடிமகனிடம் இருக்கிறதா அல்லது ஒட்டுமொத்த அதிகாரத்தையும் தன் கையில் வைத்திருக்கும் அரசிடம் இருக்கிறதா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார். இந்திய குடியுரிமைச் சட்டப்படி, ஒரு நபர் பிறப்பின் அடிப்படையில் இந்த நாட்டின் குடிமகனா இல்லையா என்பதைத் தீர்மானிக்க சில மிக முக்கியமான விதிகள் உள்ளன. அதன்படி, இந்தியக் குடியரசு நாடான ஜனவரி 26, 1950 அன்றோ அல்லது அதற்கு பிறகோ.. அதேநேரம் ஜூலை 1, 1987-க்கு முன்பாக இந்தியாவில் பிறந்த எந்தவொரு நபரும் பிறப்பால் இந்தியக் குடிமகனாகவே கருதப்படுவார். ஆனால் ஜூலை 1, 1987 அன்றோ அல்லது அதற்குப் பிறகோ இந்தியாவில் பிறந்த ஒரு நபர் இந்திய குடியுரிமை கோர வேண்டுமெனில், அவர் பிறந்த நேரத்தில் அவரது பெற்றோரில் யாராவது ஒருவர் கட்டாயம் இந்தியக் குடிமகனாக இருந்திருக்க வேண்டும் என்பது விதியாகும். அதே சமயம், இந்தச் சட்டத்தில் மேலும் சில கடுமையான கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டன. அதன்படி, டிசம்பர் 3, 2004 அன்றோ அல்லது அதற்குப் பிறகோ இந்தியாவில் பிறந்தவர்கள் பிறப்பின் அடிப்படையில் இந்திய குடியுரிமையைப் பெற வேண்டுமெனில், அவர்களின் பெற்றோர் இருவருமே இந்தியர்களாக இருக்க வேண்டும். அல்லது பெற்றோரில் ஒருவர் இந்தியராகவும், மற்றொருவர் எவ்வித அனுமதியுமின்றி நாட்டிற்குள் நுழைந்த சட்டவிரோத குடியேறியவராக இல்லாமல் இருக்க வேண்டும் என்பதும் தற்போதைய சட்ட விதியாகும்.பாஸ்போர்ட்
விவாதம்
எதுதான் குடியுரிமையை நிரூபிக்கும்?
சட்டம் சொல்வது என்ன!