அப்பா நான் நல்லா இருக்கேன்! மெசேஜ் அனுப்பி கொஞ்ச நேரம் கூட ஆகல! அமெரிக்கா தாக்குதலில் இந்தியர் பலி

  • டெல்லி: இந்தியர்கள் இருந்த வணிகக் கப்பலைக் குறிவைத்து அமெரிக்கா நடத்திய தாக்குதலில் 3 அப்பாவி இந்திய மாலுமிகள் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ள நிலையில், அமெரிக்கா செய்துள்ளது போர்க்குற்றம் என்ற வலுவான எதிர்ப்புக் குரல் கிளம்பியுள்ளது. இது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்.

    Advertisement

    "அப்பா, நான் நலமாக இருக்கிறேன்" - கடந்த திங்கட்கிழமை 23 வயதான ஆதித்யா சர்மா தனது தந்தைக்கு அனுப்பிய கடைசி வாட்ஸ்அப் செய்தி இதுதான். இந்தச் செய்தியை அனுப்பிய ஒரு மணி நேரத்திலேயே ஆதித்யா உயிரிழந்தார். ஆனால், இந்தத் தகவல் அவரது குடும்பத்தினருக்கு நேற்று இரவுதான் தெரியவந்தது.

    Advertisement

    தாக்குதல்

    ஓமன் வளைகுடாவில் அமெரிக்க ராணுவம் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் பலியான மூன்று இந்திய மாலுமிகளில் ஆதித்யாவும் ஒருவர். இந்தச் சம்பவம் தற்போது சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பாலாவ் நாட்டின் கொடியுடன் பயணித்த 'எம்.டி செட்டபெல்லோ' (MT Settebello) என்ற வணிகக் கப்பல் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தியது. ஈரானில் இருந்து கச்சா எண்ணெய்யைக் கடத்திச் செல்வதன் மூலம் அமெரிக்காவின் பொருளாதாரத் தடையை இந்தக் கப்பல் மீறியதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.

    உயிரிழப்பு

    இந்தக் கப்பலில் மொத்தம் 24 இந்திய மாலுமிகள் இருந்தனர். அமெரிக்காவின் ஏவுகணைத் தாக்குதலில் கப்பல் பலத்த சேதமடைந்தது. இதில் மூன்று இந்தியர்கள் உயிரிழந்தனர், மற்ற 21 பேர் மீட்கப்பட்டுள்ளனர். உயிரிழந்த ஆதித்யா சர்மா, அந்தக் கப்பலில் பயிற்சி மாலுமியாக பணியாற்றி வந்தார். அவர் தனது பெற்றோருக்கு ஒரே மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

    Advertisement

    போர்க்குற்றம்

    ஆதித்யாவின் தந்தை ராஜேஷ் சர்மா தனது மகனை இழந்த துயரத்தில் மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர், "வணிகக் கப்பல் மீது ஏவுகணை வீசித் தாக்குவது ஒரு போர்க்குற்றம். ஒரு கப்பலைக் கட்டுப்படுத்த எத்தனையோ வழிகள் உள்ளன. நீங்கள் ராணுவத்தை அனுப்பி கப்பலைச் சோதனையிடலாம் அல்லது மாலுமிகளைக் கைது செய்யலாம். ஆனால், அப்பாவி மாலுமிகள் இருக்கும் கப்பல் மீது ஏவுகணையை வீச உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை" என்று ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.

    மேலும், அந்தப் பகுதியில் நிலைமை சீராகும் வரை இந்தியக் கப்பல் நிறுவனங்கள் ஹார்முஸ் நீரிணை வழியாகக் கப்பல்களை இயக்கக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

    Advertisement

    மூன்று தாக்குதல்கள்

    கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இந்திய மாலுமிகள் இருந்த வணிகக் கப்பல்கள் மீது அமெரிக்கா மூன்று முறை தாக்குதல் நடத்திவிட்டது. முதலில் கடந்த ஜூன் 8ம் தேதி எம்.டி மாரிவெக்ஸ் (MT Marivex) என்ற கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. அதிலிருந்த 24 இந்திய மாலுமிகளை ஓமன் அதிகாரிகள் ஹெலிகாப்டர் மூலம் மீட்டனர். அதைத் தொடர்ந்து திங்கள்கிழமை இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. இதைத் தொடர்ந்து இன்று வியாழக்கிழமை 'எம்.டி ஜல்வீர்' என்ற மற்றொரு வணிகக் கப்பலும் தாக்கப்பட்டது. அதிலுள்ள இந்தியர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    Advertisement

    கடந்த பிப்ரவரி 28-ம் தேதி முதல் ஈரான் மற்றும் அமெரிக்க-இஸ்ரேல் இடையே போர் நிலவி வருகிறது. உலகின் 20% கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு போக்குவரத்து நடைபெறும் ஹார்முஸ் நீரிணை பகுதியில் ஈரான் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதற்குப் பதிலடியாக, ஈரானின் எண்ணெய் வர்த்தகத்தைத் தடுக்க அமெரிக்கா அந்தப் பகுதியில் முற்றுகையிட்டு வருகிறது. இதுவே அங்குத் தாக்குதலுக்குக் காரணம். இந்த மோதலில் சிக்கி இதுவரை 11 மாலுமிகள் உயிரிழந்துள்ளனர். சுமார் 20,000 மாலுமிகள் அந்தக் கடல் பகுதியில் பாதுகாப்பற்ற சூழலில் சிக்கியுள்ளனர்.

    இந்தியா கண்டனம்

    இந்தச் சம்பவம் குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. டெல்லியில் உள்ள அமெரிக்கத் தூதரக அதிகாரி ஜேசன் மீக்ஸை நேரில் அழைத்து, இந்தியா வலுவான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது. "காணாமல் போனதாகக் கருதப்பட்ட மூன்று இந்திய மாலுமிகளும் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது," என்று கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் சர்பானந்த சோனோவால் தெரிவித்துள்ளார்.

    Advertisement

    உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான மாலுமிகளைக் கொண்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று. ஆயிரக்கணக்கான இந்திய இளைஞர்கள் சர்வதேசக் கடல் பகுதிகளில் வணிகக் கப்பல்களில் பணியாற்றி வருகின்றனர். இரு நாடுகளுக்கு இடையேயான அரசியல் மற்றும் ராணுவ மோதல்களில், எந்தச் சம்பந்தமும் இல்லாத அப்பாவி மாலுமிகள் பலியாவது சர்வதேச அளவில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

    English Summary

    Three Indian sailors, including 23-year-old Aditya Sharma, were killed in a US missile strike on the merchant vessel MT Settebello(அமெரிக்கா நடத்திய தாக்குதலில் இந்திய இளைஞர் பலி): Indian sailors killed in US attack latest news in tamil.