டெல்லி: அமெரிக்க இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரான் உச்சத் தலைவர் கமேனியின் இறுதிச் சடங்குகளில் பங்கேற்றதற்காக இந்தியாவுக்கு ஈரான் தூதரகம் உருக்கமாக நன்றி தெரிவித்துள்ளது.
கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி அமெரிக்கா இஸ்ரேல் இணைந்து நடத்திய தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். போர்ச்சூழல் காரணமாக கமேனியின் இறுதிச் சடங்கு நடைபெறாமல் இருந்தது. தற்போது, இரு நாடுகளிடையே போர் சற்று தணிந்த நிலையில், கமேனியின் இறுதிச்சடங்கை ஈரான் அரசு நடத்தி வருகிறது.
அவர்களின் மத வழக்கப்படி இறுதிச் சடங்குகள் பல நாட்கள் நடைபெறும். தெஹ்ரான் மற்றும் கியோம் ஆகிய நகரங்களில் துவங்கிய கமேனியின் இறுதிச்சடங்கு நிகழ்வுகள் ஜூலை 9 ஆம் தேதி வரை நடைபெறுகின்றன. கமேனியின் உடல் அடக்கம் அவர் பிறந்த இடமான மஷாத் நகரில் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. 'கிராண்ட் மொசல்லா' மசூதி வளாகத்தில் திறந்தவெளி மேடையில் அயதுல்லா அலி காமேனி உடல் சவப்பெட்டியில் வைக்கப்பட்டுள்ளது. பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் கமேனியின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். உலகின் 100 நாடுகளின் பிரதிநிதிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். அந்த வகையில், இந்தியா சார்பில் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் பவித்ரா மார்கெரிட்டா மற்றும் பீகார் ஆளுநர் அடா ஹஸ்னைன் உள்ளிட்டோர் நேரில் சென்று கமேனியின் உடலுக்கு மரியாதை செலுத்தினர். இந்த நிலையில், கமேனியின் இறுதிச்சடங்களில் பங்கேற்றதற்காக இந்தியாவுக்கு ஈரான் அரசு நன்றி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஈரான் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஈரான் அரசின் ஆட்சியாளர் அயதுல்லா செய்யது அலி கமேனியின் இறுதிச் சடங்குகளில் பங்கேற்று அஞ்சலி செலுத்தியதற்காக, நட்பு ரீதியான இந்திய அரசுக்கும் மற்றும் பொதுமக்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் இந்திய பிரதிநிதிகள் பங்கேற்றது இரு நாடுகளுக்கும் இடையே உள்ள நீண்டகால உறவைப் பிரதிபலிக்கிறது. மேலும், துயரத்தின் போது ஈரான் மக்களுடன் பரஸ்பர மரியாதை மற்றும் ஒற்றுமையை வெளிப்படுத்தும் ஒரு முக்கிய செயலாகவும் இது அமைந்தது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.