ராகுலால் திசைதிரும்பும் டெல்லி போராட்டம்? தடியடிக்கு பின் பாஜகவுக்கு சாதகமாகும் களம்? பின்னணி

  • டெல்லி: டெல்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் மீது நேற்று போலீசார், அதிரடி படையினர் நடத்திய தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் இன்று பிரதமர் நரேந்திர மோடியின் இல்லத்தின் முன்பு போராட்டம் நடத்தி பரபரப்பை கிளப்பினர். இந்நிலையில் தான் ராகுல் காந்தியின் இந்த போராட்டத்தை ஒரு தரப்பினர் விமர்சனம் செய்ய தொடங்கி உள்ளனர். கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் போராட்டத்தை திசைதிருப்பும் வகையில் இந்த போராட்டத்தை அவர் முன்னெடுப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் அதன் பின்னணி பற்றி இங்கு பார்க்கலாம்.

    Advertisement

    'நீட்' தேர்வு வினாத்தாள் கசிவுக்க பொறுப்பேற்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டம் - உண்ணாவிரதம் நடத்தி வருகின்றனர். நேற்றைய தினம் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி சென்றவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது.

    Advertisement

    இந்த தடியடியில் ஏராளமான போராட்டக்காரர்கள் காயமடைந்தனர். அதேபோல் போலீசார், அதிரடி படையினரும் காயமடைந்தனர். இந்த தடியடிக்கு பிறகும் போராட்டக்காரர்கள் ஜந்தர் மந்தரில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களிடம் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த தயாராகி வருகிறது.

    இதற்கு முன்னோட்டமாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜேபி நட்டா காயமடைந்த போராட்டக்காரர்களை மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்தார். இது ஒருபுறம் இருக்க இந்த தடியடிக்கு அரசியல் கட்சி தலைவர்கள், பல்வேறு அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெிரவித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி இன்று தடிஅடியை கண்டித்து, டெல்லியில் உள்ள பிரதமர் நரேந்திர மோடியின் அதிகாரப்பூர்வ இல்லம் முன்பு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் மேற்கொண்டனர்.

    Advertisement

    காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே , பிரியங்கா காந்தி உள்பட மூத்த காங்கிரஸ் எம்பிக்கள், தலைவர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர். மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் மட்டுமின்றி பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் ஆகியோர் உடனடியாகத் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோஷமிட்டனர். சாலைகளில் அமர்ந்து அவர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.

    போராட்டம் குறித்துத் தனதுஎக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, "பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு பதிலளிக்க வேண்டும் என்று கூறி நாங்கள் பிரதமரின் இல்லத்தை நோக்கி பேரணியாக வந்தோம். இந்த அரசு எந்த பொறுப்பையும் ஏற்கத் தயாராக இல்லை. நாடாளுமன்றத்தில் விவாதிக்கவும் அஞ்சுகிறது.. இந்திய நாட்டின் இளைஞர்களின் எதிர்காலத்தை சீரழித்த பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சரும் உடனடியாகப் பதவி விலக வேண்டும்" என கூறியுள்ளார்.

    Advertisement

    நேற்று வரை கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் போராட்டத்திற்கு அரசியல்கட்சியினர் யாரும் களத்தில் அமர்ந்து போராட்டம் நடத்தவில்லை. மாறாக உண்ணாவிரதம் இருந்த இயற்கை ஆர்வலர் சோனம் வாங்சுக்கை சந்தித்து ஆதரவு மட்டுமே தெரிவித்து வந்தனர். நாடாளுமன்றத்தில் பேசுவதாக நம்பிக்கை கொடுத்தனர். ஆனால் நேற்றைய தடியடிக்கு பிறகு இந்த விவகாரம் புதுரூட்டில் பயணிக்க தொடங்கி உள்ளது. புதிய அமைப்புகள் பலவும் போராட்டத்துக்கு ஆதரவு வழங்குகின்றன. உணவுகள் சப்ளை செய்ய தொடங்கி உள்ளனர்.

    இந்நிலையில் தான் இன்றைய ராகுல் காந்தியின் போராட்டத்தை ஒரு தரப்பினர் ஆதரித்து வரும் நிலையில், மற்றொரு தரப்பினர் விமர்சனம் செய்ய தொடங்கி உள்ளனர். அதாவது அரசியல் கட்சி தலைவர்களான ஆம்ஆத்மியின் அரவிந்த் கெஜ்ரிவால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்பி ஜான் பிரிட்டோஸ், தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார் அணி) தலைவர் சரத்பவார் உள்ளிட்டவர்கள் இன்று டெல்லி ஜந்தர் மந்தருக்கு சென்று போராட்டக்காரர்களுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். ஆனால் காங்கிரஸ் தனியாக போராட்டம் நடத்துகிறது. ஜந்தர் மந்தர் செல்லாமல் பிரதமர் மோடியின் இல்லத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துகிறது.

    Advertisement

    இதனால் ராகுல் காந்தியின் எதிர்ப்பு தெரிவிக்கும் நெட்டிசன்கள் தரப்பில், ''நீட் தேர்வுக்கு எதிராக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு எதிராக கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் மற்றும் மாணவர் அமைப்பினரை போலீசார், அதிரடி படையினர் தடியடி நடத்தி தாக்கினர். ஆனாலும் அவர்கள் போராட்டத்தை கைவிடாமல் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர். இப்படியான சூழலில் ராகுல் காந்தி இன்று பிரதமர் மோடியின் இல்லத்தின் முன்பு காங்கிரஸ் தலைவர்களை வைத்து போராட்டம் நடத்தி உள்ளார். பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ராஜினாமா செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர். இது ஏற்கனவே நடக்கும் போராட்டத்தை திசைதிருப்பும் முயற்சியாகும்.

    Advertisement

    பிற கட்சி தலைவர்கள் ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்துவோருக்கு நேரில் சென்று ஆதரவு தெரிவிக்கின்றனர். ஆனால் ராகுல் காந்தி தனது கட்சி தலைவர்களுடன் பிரதமர் மோடியின் இல்லத்தின் முன்பு போராட்டம் நடத்துகிறார். மத்திய அரசுக்கு எதிரான செயல்பாடு, போராட்டம் உள்ளிட்டவை சமீபத்தில் எடுபடாத நிலையில் இந்த போராட்டத்தை பயன்படுத்தி காங்கிரஸ் ஸ்கோர் செய்ய பார்க்கிறது. அரசியல் லாபம் தேட பார்க்கிறது. அதேவேளையில் ராகுல் காந்தியின் ஒவ்வொரு செயல்பாடும் சமீபகாலமாக பாஜகவுக்கு உதவியாக தான் அமைகிறது. தற்போதும் கிரெடிட் திருட காங்கிரஸ் பார்க்கலாம். மேலும் காங்கிரஸ் செயலால் இந்த போராட்டத்தையும் பாஜகவினர் சாதகமாக பார்த்து அரசியல் ரீதியாக எடுத்து செல்லலாம். இதனால் பாஜகவுக்கு உதவ ராகுல் காந்தி மீண்டும் களமிறங்கி உள்ளாரா?'' என்று நெட்டிசன்களில் ஒருதரப்பினர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

    குறிப்பாக சென்னையில் ஜல்லிக்கட்டு போராட்டத்தை மாணவ-மாணவிகள் பொதுமக்கள் முன்னெடுத்தபோது அமைதியான முறையில் நடந்தது. ஆனால் அரசியல் கட்சியினர் உள்ளே செல்ல செல்ல அரசியலானது. போராட்டக்களம் மாறியது. இறுதியில் வன்முறையானது என்பதால் பலரும் ராகுல் காந்தியின் போராட்டத்துக்கு எதிரான விமர்சனத்தை முன்வைக்கின்றனர். மேலும் தற்போது மத்திய அரசு இந்த போராட்டத்தை உன்னிப்பாக கவனித்து பேச்சுவார்த்தைக்கு தயாராகி வரும் நிலையில் ராகுல் காந்தி அரசியலாக்குவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

    English Summary

    Rahul Gandhi led Congress Parties MP and leaders staged a protest today outside Prime Minister Narendra Modi's residence condemned lathicharge against CJP Protesters. However, a section of people has begun to criticize Rahul Gandhi's protest. Amidst allegations that he is spearheading this demonstration to divert attention from the BJP's protest, let us examine the background of the situation here.